"ஜெரூசலத்தை யூதமயப்படுத்தும் பல்வேறு செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்குத் தமது அரசு கடமைப்பட்டுள்ளது" என இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெத்தன்யாஹூ வலியுறுத்தியுள்ளார்.
'யூத நாடான' இஸ்ரேலின் நிரந்தரத் தலைநகரமாகத் திகழப் போவது ஜெரூசலமே எனப் பிரகடனப்படுத்தி, இஸ்ரேலியப் பிரதமர் அமெரிக்கக் காங்கிரஸில் நிகழ்த்திய உரை பெரும் வரவேற்பைப் பெற்றதையடுத்தே அவர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார்.
"ஜெரூசலத்தை ஒருமுகப்படுத்துவது என்பது இஸ்ரேலியர்கள் அனைவரையும் ஒன்றிணைப்பதற்கான மிகப் பிரதான அடிப்படைகளில் ஒன்றாகும். இந்தச் செயற்திட்டத்துக்கு அமெரிக்கக் காங்கிரஸும் இஸ்ரேலிய சட்டமன்றமும் வழங்குகின்ற ஆதரவானது இஸ்ரேலுக்குக் கிடைத்த மிகப் பெரும் வரப்பிரசாதமாகும். இந்தச் செயற்திட்டத்துக்காக 100 மில்லியன் அமெரிக்க டாலர்கள் முதலீடு செய்யப்படவுள்ளது" என்று இஸ்ரேலிய அமைச்சரவையில் உரையாற்றிய நெத்தன்யாஹூ குறிப்பிட்டார்.
நெத்தன்யாஹூ இந்த உரையை நிகழ்த்துவதற்கு முதல் நாள் அரபு லீக்கின், 'அரபு நாடுகளிடையே அமைதி நடவடிக்கைகளுக்குப் பொறுப்பான குழு'வினரால் எதிர்வரும் மாநாட்டின்போது ஐ.நா.விடம், 1967 ஆம் ஆண்டு எல்லைகளுடன் கிழக்கு ஜெரூசலத்தைத் தலைநகராகக் கொண்ட சுதந்திரப் பலஸ்தீன் தாயகத்தை அங்கீகரிப்பதற்கான கோரிக்கையை முன்மொழிய இருக்கும் பலஸ்தீன் அதிகார சபைக்குத் தாம் ஆதரவளிப்பது என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
0 கருத்துரைகள்:
Post a Comment