டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பாளர்களுக்கு எதிரான நடவடிக்கைகளுக்கு பிறகு சிரியாவின் நகரங்களிலிருந்து ராணுவம் வாபஸ் பெற்றுவருகிறது. நெருக்கடியை தணிக்க தேசிய அளவில் முழுமையான பேச்சுவார்த்தையை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. எல்லா மாகாணங்களிலும் பேச்சுவார்த்தை நடத்தப்படும்.
தரா, பனியாஸ் ஆகிய நகரங்களிலிருந்து ராணுவம் முழுமையாக வாபஸ் பெற்றுள்ளதாக செய்தி ஒலிபரப்புத்துறை அமைச்சர் அத்னான் ஹஸன் மஹ்மூத் அறிவித்துள்ளார்.பல்வேறு துறைகளில் செயல்படும் நபர்களுடனான பேச்சு வார்த்தையில் பொதுக்கருத்தை உருவாக்குவது தான் லட்சியம் என அத்னான் தெரிவித்துள்ளார்.
வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகைக்கு பிறகு வலுவடைந்த போராட்டத்தில் ராணுவம் நடத்திய துப்பாக்கி சூட்டில் ஆறுபேர் கொல்லப்பட்டனர். போராட்டத்தில் ஈடுபடுவோர் மீது துப்பாக்கிச்சூடு நடத்தக்கூடாது என அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் பிரகடனப்படுத்தியதைத் தொடர்ந்து இச்சம்பவம் நடந்துள்ளது.
இரண்டுமாதம் முன்பு துவங்கிய அரசுக்கு எதிரான எழுச்சிப் போராட்டத்தில் இதுவரை 700க்கும் அதிகமானோர் கொல்லபட்டுள்ளனர். ஆயிரத்திற்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளனர். வெளிநாட்டு ஊடகங்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் கூடுதலான செய்திகள் வெளிவரவில்லை. வெளிநாட்டு ஆயுத கும்பல்கள் தாக்குதலை நடத்தியதாக அரசு கூறுகிறது. 98 ராணுவத்தினரும், 22 போலீஸ்காரர்களும் கொல்லப்பட்டதாக அரசு அறிவித்துள்ளது.
இதற்கிடையே, லெபனானின் எல்லையை ஒட்டிய ஹம்ஸ் மாகாணத்தில் தல்கலகில் ராணுவம் மூன்று பேரை சுட்டுக் கொன்றுள்ளது. நேற்று முன்தினம் கொல்லபட்டவர்களின் இறுதி சடங்கில் கலந்து கொண்டு திரும்பி வந்து கொண்டிருந்தனர் இவர்கள். இச்சம்பவத்தில் ஏராளமானோருக்கு காயம் ஏற்பட்டுள்ளது என எ.எஃப்.பி கூறுகிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment