பெங்களூர்:எதிர்ப்பு எம்.எல்.ஏக்களை தகுதியிழக்கச்செய்த கர்நாடகா சபாநாயகர் நடவடிக்கையை உச்சநீதிமன்றம் ரத்துச்செய்ததை தொடர்ந்து பா.ஜ.க அரசு பெரும் நெருக்கடியில் சிக்கியுள்ளது. தகுதி நீக்கம் செய்யப்பட்ட 11 பா.ஜ.க எதிர்ப்பு எம்.எல்.ஏக்கள் உள்பட 16 எம்.எல்.ஏக்கள் மீண்டும் சட்டசபைக்கு வருவதை தொடர்ந்து பெரும்பான்மையை இழந்த எடியூரப்பா அரசை கலைக்க வேண்டுமெனக் கோரி எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளன.
கர்நாடகாவில், கடந்த அக்டோபரில், முதல்வர் எடியூரப்பா அரசு நம்பிக்கை வாக்கெடுப்பு கோரிய போது, அவரை எதிர்த்து, 11 பா.ஜ., மற்றும் 5 சுயேச்சை எம்.எல்.ஏ.,க்கள் ஓட்டளிக்க திட்டமிட்டிருந்தனர். ஆனால், கட்சி தாவல் தடைச்சட்டத்தின் அடிப்படையில், வாக்கெடுப்பிற்கு முன்னதாகவே, 16 எம்.எல்.ஏ.,க்களையும் சபாநாயகர் போப்பய்யா டிஸ்மிஸ் செய்தார்.
இதை எதிர்த்து 16 பேரும், கர்நாடக ஐகோர்ட்டில் மனு தாக்கல் செய்தனர். “சபாநாயகர் செய்தது சரியே’ என, ஐகோர்ட் தீர்ப்பளித்தது. இதையடுத்து, சுப்ரீம் கோர்ட்டில் அப்பீல் செய்தனர். வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட், நேற்று முன்தினம் தீர்ப்பளித்தது. அதில், “சபாநாயகர் போப்பய்யா, அரசியல் சட்டவிதிகளை மீறி நடந்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை சஸ்பெண்ட் செய்தது செல்லாது” என தீர்ப்பளித்தது. இதனால், கர்நாடகாவில் எடியூரப்பா தலைமையிலான பா.ஜ., அரசுக்கு மீண்டும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
“எம்.எல்.ஏ.,க்களை நீக்கியது செல்லாது என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்துவிட்டதால், ஆளும் பா.ஜ., தனது பெரும்பான்மையை இழந்து விட்டது. அரசியல் சட்டத்தின் 356வது பிரிவை பயன்படுத்தி, எடியூரப்பா அரசை கவர்னர் “டிஸ்மிஸ்’ செய்ய வேண்டும்’ என, எதிர்க்கட்சிகளான காங்கிரஸ் மற்றும் மதச்சார்பற்ற ஜனதா தளம் கோரியுள்ளன.
நேற்று பேட்டியளித்த சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சீதாராமையா, “ஆளும் பா.ஜ., நாளை சட்டசபையை துவக்குவதற்கு அரசியல் உள்நோக்கம் இருக்கிறது. வளர்ச்சி பணிகள் பற்றிய விவாதத்திற்காக சட்டசபை கூட்டத்தொடர் துவக்கப்படவில்லை’ என்றார். “சபாநாயகர் போப்பய்யா தன் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். சட்டசபை கூட்டத்தொடரை நாளை துவக்க கவர்னர் அனுமதி அளிக்க கூடாது’ என கோரியுள்ளனர்.
பா.ஜ., செய்தித் தொடர்பாளர் தனஞ்சய குமார், “கட்சியில் தற்போது எந்த பிரச்னையும் இல்லை. 11 எம்.எல்.ஏ.,க்களும் எங்கள் பக்கம் உள்ளனர். சட்டசபையில் எங்கள் பலம் 109ல் இருந்து தற்போது 120 ஆக உயர்ந்துள்ளது’ என சமாளித்தார்.
இதற்கிடையில், நேற்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கர்நாடக சட்ட அமைச்சர் சுரேஷ் குமார், “வரும் 16ம் தேதி (நாளை) சட்டசபை கூட்டத்தொடர் துவக்கப்பட வேண்டும் என அமைச்சரவை நேற்று முடிவு செய்தது. கூட்டத்தொடர் துவங்குவதற்கு மூன்று நாட்கள் முன் கவர்னரிடம் அனுமதி கேட்டு,அமைச்சரவை கடிதம் அனுப்பியுள்ளது. கவர்னர் இதற்கு அனுமதியளிப்பார் என்று நம்புகிறோம். இந்தக் கூட்டத்தொடரில் தான், 2011-12ம் ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது’ என்றார்.
கவர்னர் மறுப்பு: தற்போது டில்லியில் உள்ள கவர்னர் பரத்வாஜ், நேற்று பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து பேசினார். இச்சந்திப்பு மரியாதை நிமித்தமானது என்று கூறப்பட்டாலும், கர்நாடக அரசியலில் எடுக்க வேண்டிய அடுத்த கட்ட நடவடிக்கைகள் குறித்து அவர் பிரதமருடன் ஆலோசித்தார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.
பிரதமரை சந்தித்த பின், கவர்னர் பரத்வாஜ் கூறியதாவது: சட்டசபை விதிகளுக்குட்பட்டு ஓட்டெடுப்பு நடத்தப்பட வேண்டும் என, நான் ஏற்கனவே ஆளும் கட்சியிடம் கூறினேன். அவர்கள் அதற்கு நேர்மாறாக நடந்து கொண்டனர். சுப்ரீம் கோர்ட்டின் தீர்ப்பு, சபாநாயகர் மற்றும் முதல்வர் இருவரும் அரசியல் சாசன விதிகளை மீறி நடந்துள்ளதையே காட்டுகிறது.
சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் முழு விவரங்கள் இன்னும் எனக்கு வந்து சேரவில்லை. 16ம் தேதி (நாளை) சட்டசபை கூட வாய்ப்பில்லை. ஆளும் கட்சி மீண்டும் சட்டசபையில் பெரும்பான்மை நிரூபிக்க வேண்டும் என்று நான் உத்தரவிடுவது குறித்து இப்போதைக்கு ஒன்றும் சொல்ல முடியாது. நான் நாளை (இன்று) பெங்களூருவுக்கு சென்ற பின்தான், இது பற்றி எந்த முடிவும் எடுக்க இயலும். இவ்வாறு பரத்வாஜ் தெரிவித்தார்.

0 கருத்துரைகள்:
Post a Comment