Friday, May 27, 2011

10 வருடகாலம் இஸ்ரேலியச் சிறையில் வாடும் பலஸ்தீன் பெண்கள்!

"ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசல நகரின் ஸுஃபத் அகதி முகாமைச் சேர்ந்த ஸனா முஹம்மத் ஷஹாதாஹ் (வயது 35), ஐரினா ஸரஹ்னா (வயது 36) எனும் பலஸ்தீன் பெண்கள் இருவர் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் பத்து வருடகாலத்தைத் தற்போது பூர்த்தி செய்துள்ளனர்" என்று காஸாவின் கைதிகள் நல அமைச்சகம் தெரிவித்துள்ளது.

அமைச்சகத்தின் ஊடகத் துறைப் பணிப்பாளர் ரியாத் அல் அஷ்கர் குறிப்பிடுகையில், "ஷஹாதாஹ்வுக்கு 2002 மே 24 ஆம் திகதி இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு வழக்குமன்றத்தினால் ஆயுள்தண்டனை வழங்கித் தீர்ப்பளிக்கப்பட்டது. தற்போது ஷெரோன் சிறைச்சாலையில் அடைக்கப்பட்டுள்ள இவர், கடுமையான சுகவீனத்தால் பாதிக்கப்பட்டுள்ளார். இந்நிலையில், சிறைச்சாலையில் உள்ள மருத்துவரை நாடி சிகிச்சைபெற அனுமதிக்குமாறு அவர் பலதடவை மனு கொடுத்தும் அது நிராகரிக்கப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
உக்ரேனியப் பெண்ணான ஐரினா இஸ்லாத்தைத் தழுவி பலஸ்தீனரான இப்றாஹீம் ஸரஹ்னாவை மணமுடித்துள்ளார். பலஸ்தீன் விடுதலைப் போராளி ஒருவருக்கு வாகன உதவியளித்த தன் கணவருக்குப் பக்கபலமாக இருந்துள்ளார் என்ற குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட இவருக்கு, 2002 மே 23 ஆம் திகதி, 20 வருடகால சிறைத் தண்டனையும் அவரது கணவருக்கு ஆறு ஆயுள் தண்டனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.

ஐரினாவுக்கு முறையே 12, 14 வயதில் இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். அவர்கள் இருவரும் பெத்லஹேம் பிரதேசத்தில் உள்ள அகதி முகாமில் தமது பாட்டியுடன் வசித்து வருகின்றனர்.

இந்த பத்து வருடகால சிறைவாழ்வில் முதல் முறையாக உக்ரேனில் வசிப்பவரான தன்னுடைய தாயாரைப் பார்ப்பதற்குக் கடந்த வருடம் தான் அவர் அனுமதிக்கப்பட்டுள்ளார். உக்ரேனியத் தூதுவருடன் சிறைச்சாலைக்கு வருகை தந்திருந்த ஐரினாவின் தாயார், உடனடியாகவே நாட்டைவிட்டு வெளியேறி உக்ரேனுக்குத் திரும்பிச் செல்லுமாறு நிர்ப்பந்திக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

இரண்டு இளம் சிறுமிகளின் தாயான ஐரினா சுமார் ஒன்பது வருடகாலம் சந்திக்காத தன்னுடைய கணவரையும் பிள்ளைகளையும் பார்க்க அனுமதிக்குமாறு பலமுறை வேண்டுகோள் விடுத்தும், அதனை ஏற்க இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறை நிர்வாகம் நிர்த்தாட்சண்யமாக மறுத்துவிட்டது.

இவர்களைப் போல சுமார் 35 பலஸ்தீன் பெண்கள் இஸ்ரேலிய ஆக்கிரமிப்புச் சிறைச்சாலைகளில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் அங்கே மிக மோசமான சித்திரவதைகளை எதிர்கொண்டு வருவதோடு, அடிப்படை மனித உரிமைகள் யாவும் மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்தும் துன்புற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இப்பெண்களின் உரிமைகளுக்காக் குரல்கொடுத்து, அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்படுவது தொடர்பில் இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அதிகார சபைக்கு அழுத்தம் கொடுக்குமுகமாக உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சர்வதேச மனித உரிமைகள் அமைப்புக்கள் முன்வரவேண்டும் என்பதே மானிடநேயம் மிக்க அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.
 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza