புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கிருப்பதாக கூறப்படும் சர்ச்சைக்குரிய நிறுவனமான டி.பி ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனத்தின் கட்டுப்பாட்டில் சரத் பவாருக்கு முக்கியத்துவம் வாய்ந்த பங்கிருப்பதாக இவ்வழக்கின் சர்ச்சைக்குரிய நபரான நீரா ராடியா சி.பி.ஐ விசாரணையின்போது தெரிவித்துள்ளார்.
ஸ்வான் டெலிகாம் நிறுவனத்திற்கு லைசன்ஸ் வழங்குவதற்காக டி.பி ரியாலிட்டி செல்வாக்கை பயன்படுத்தியதாக ராடியா வாக்குமூலம் அளித்துள்ளார். ஆனால் இவற்றை நிரூபிப்பதற்கான ஆதாரங்கள் ஒன்றும் தன்னிடம் இல்லை என அவர் விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்தார்.
2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக மும்பை தொழில் அதிபர் ஷாஹித் பல்வா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். இவர் நடத்திய ஸ்வான் டெலிபோன் நிறுவனம் மூலம் இவருக்கு ஸ்பெக்ட்ரம் ஊழலில் பங்கிருப்பது தெரியவந்தது.
ஷாஹித் பல்வாவுக்கு டி.பி. ரியாலிட்டி என்ற ரியல் எஸ்டேட் நிறுவனம் உள்பட பல்வேறு நிறுவனங்கள் உள்ளன. மத்திய அமைச்சர் சரத் பவாருக்கும், ஷாஹித் பல்வாவுக்கும் நெருங்கிய தொடர்பு இருந்ததாக ஏற்கனவே புகார்கள் வந்தன. ஆனால் இதை சரத்பவார் மறுத்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் ராடியாவின் குற்றச்சாட்டு அடிப்படையற்றது என மறுத்துள்ளார் சரத்பவார். ராடியாவின் குற்றச்சாட்டுத் தொடர்பாக சரத்பவார் பத்திரிகைகளிக்கு அளித்துள்ள மறுப்பு அறிக்கையில், நீரா ராடியாவின் குற்றச்சாட்டு முற்றிலும் பொய்யான, முட்டாள் தனமானதாகும்.
எனக்கு டி.பி ரியாலிட்டி நிறுவனத்துடன் நிதியியல் தொடர்பாகவோ வேறு எதிலுமோ எவ்வித தொடர்புமில்லை. நிறுவனத்தின் மேல்மட்டத்திலுள்ள விநோத் கோயங்கா குடும்பத்துடன் நீண்டகாலமாக தொடர்பு உண்டு. இதனைத் தவிர இதர குற்றச்சாட்டுகளெல்லாம் தவறாகும் என சரத் பவார் தெரிவித்துள்ளார்.

0 கருத்துரைகள்:
Post a Comment