Monday, April 18, 2011

மேற்கு வங்காள மாநிலத்தில் இன்று முதல் கட்ட வாக்குப்பதிவு

M_Id_210293_Bengal_election
கொல்கத்தா:ஆறு கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறும் மேற்கு வங்காள மாநில சட்டமன்றத் தேர்தலுக்கான முதல் கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறுகிறது.

குச்பிஹார், மால்டா, ஜெய்பாய்குடி, டார்ஜிலிங், தெற்கு தினாஜ்பூர், வடக்கு தினாஜ்பூர் ஆகிய மாவட்டங்களில் 54 சட்டமன்ற தொகுதிகளுக்கு இன்று தேர்தல் நடைபெறுகிறது. 54 தொகுதிகளிலும் காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணியும், இடதுசாரி கூட்டணியும் மோதுகின்றன. 49 தொகுதிகளில் பலகீனமான பா.ஜ.கவும் களத்தில் உள்ளது.
முதல் கட்ட தேர்தலில் வாக்காளர்களின் எண்ணிக்கை 97.42 லட்சமாகும். 10 அமைச்சர்கள் உள்பட 364 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர்.

தேர்தல் அமைதியாக நடைபெறுவதற்கு மிகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்குவங்காளத்தில் செய்யப்பட்டுள்ளன. ஆறு மாவட்டங்களில் 12,133 வாக்குச் சாவடிகள் தயாராக உள்ளன.

இத்தொகுதிகளில் மாநில போலீசாருடன், மத்திய காவல் படையும் பாதுகாப்பு பணியில் ஈடுபடும். பதட்டம் நிறைந்த வாக்குச்சாவடிகள் உள்ள பகுதிகளில் காவல்துறை கொடி அணிவகுப்பு நடத்தும் என மே.வங்க மாநில தலைமை தேர்தல் கமிஷனர் சுஷீல்குமார் குப்தா அறிவித்துள்ளார்.

தேர்தலையொட்டி வெளிநாட்டு எல்லைகள், மாநில எல்லைகள் சீல்வைக்கப்பட்டு, வெளி மாநிலத்தவரும், வெளி மாவட்டத்தவரும் நுழைந்துவிடாதபடி கடும் சோதனை நடத்தப்பட்டு வருகிறது.

டார்ஜிலிங், கலிம்பொங்க் ஆகிய மலைப் பகுதிகளில் 16 வாக்குச்சாடிகள் அமைக்கப்பட்டுள்ளன. அந்த வாக்குச்சாவடிகளில் பணியாற்றும் ஊழியர்கள் சனிக்கிழமையே புறப்பட்டுச் சென்றுவிட்டனர்.

மேற்கு வங்காள மாநிலத்தின் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இத்தேர்தல் அமைந்துள்ளது. கடந்த 34 ஆண்டுகளாக மே.வங்கத்தை ஆளும் இடதுசாரி கூட்டணியை ஆட்சியிலிருந்து அகற்றும் லட்சியத்துடன் திரிணாமுல் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி பிரச்சாரத்தை நடத்திவருகிறது. வளர்ச்சித் திட்டங்களை நிறைவுச்செய்யவும், தவறுகளை திருத்தவும் வாய்ப்பளிக்கக்கோரி இடதுசாரிகள் வாக்காளர்களை அணுகினர்.

காங்கிரஸ்-திரிணாமுல் கூட்டணிக்காக காங்கிரஸ் தலைவி சோனியா காந்தி, ராகுல் காந்தி, பிரணாப் முகர்ஜி உள்ளிட்டோ பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தனர். திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பானர்ஜி மே.வங்காளத்தை கலக்கும்விதமான பிரச்சாரத்தை நடத்தினார்.

முதல்வர் புத்ததேவ பட்டாச்சார்யா, சி.பி.எம் மாநில செயலாளர் பிமன்போஸ், அமைச்சர் கவ்தம் தேப், பொலிட் பீரோ உறுப்பினர்களான சீதாராம் யெச்சூரி, பிருந்தா காரட் ஆகியோர் இடதுசாரி கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து நடந்த பிரச்சாரத்திற்கு தலைமை வகித்தனர். 50 தொகுதிகளுக்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு வருகிற 23-ஆம் தேதி நடைபெறுகிறது.

மேற்குவங்காள மாநிலத்தில் இறுதிக் கட்ட வாக்குப்பதிவு மே 10-ம் தேதியுடன் முடிவடைகிறது. இத்தேர்தல் முடிவடைந்த பிறகே தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் நடந்த சட்டமன்றத் தொகுதிகளின் தேர்தல் வாக்கு எண்ணிக்கை மே 13-ம் தேதி நடைபெறும்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza