டமாஸ்கஸ்:அரசு எதிர்ப்பு போராட்டம் சூறாவளியாக வீசும் சிரியாவில் புதிய அரசு பதவியேற்றுள்ளது. நேற்று நடந்த அமைச்சரவையின் முதல் கூட்டத்தில் அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் தலைமை வகித்தார்.
இதற்கிடையே சிரியாவின் பல்வேறு நகரங்களில் அரசு எதிர்ப்பாளர்கள் வீதிகளில் போராடத் துவங்கியுள்ளனர். பல இடங்களிலும் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை கலைந்து செல்ல போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியது. ஹோம்ஸ் நகரத்தில் நடந்த மோதலில் ஒரு போலீஸ்காரர் கொல்லப்பட்டதாக அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
அவசரச் சட்டத்தை வாபஸ் பெற்றுவிட்டு புதிய தீவிரவாத எதிர்ப்பு சட்டத்தை கொண்டுவருதல் உள்ளிட்ட மாற்றங்களை நோக்கமாகக் கொண்டுள்ளதாக பிரதமர் ஆதில் ஸஃபர் தெரிவித்துள்ளார். அடுத்தவாரம் அவசரச் சட்டம் வாபஸ் பெறப்படும் என எதிர்ப்பார்ப்பதாக அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் அறிவித்துள்ளார்.
சட்டத்தை வாபஸ் பெறுவது குறித்து ஆராய நீதி கமிஷன் நியமிக்கப்பட்டுள்ளது. கமிஷன் தனது அறிக்கையை உடனடியாக சமர்ப்பிக்கும். இதனைத் தொடர்ந்து புதிய சட்டம் கொண்டுவரப்படும் என அதிபர் பஸ்ஸாருல் ஆஸாத் தொலைக்காட்சியில் நாட்டு மக்களுக்கு உரையாற்றவே இதனை தெரிவித்தார்.
எதிர்ப்பாளர்களின் கோரிக்கைகளை அங்கீகரிக்கும் அரசாக புதிய அரசு நடைமுறைக்கு வரும் என ஆஸாத் ஏற்கனவே அளித்திருந்தார். கடற்கரை பிரதேசமான பனியாஸில் நேற்று ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் போராட வீதிகளில் இறங்கினர். தராவிலும் போராட்டம் தொடர்கிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment