கெய்ரோ:பதவியிலிருந்து வெளியேற்றப்பட்ட எகிப்து சர்வாதிகாரி ஹுஸ்னி முபாரக்கின் தேசிய ஜனநாயகக் கட்சியை(என்.டி.பி) தடைச்செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கட்சியின் அனைத்து சொத்துக்களும் அரசு கைவசப்படுத்த எகிப்தின் உயர் அதிகாரம் கொண்ட நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஊழல் வழக்குகளில் குற்றஞ்சாட்டப்பட்டுள்ள முபாரக் கைது செய்யப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதயநோய் தொடர்பாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் அவர். முபாரக் மற்றும் அவரது பிள்ளைகள் நாட்டை விட்டு வெளியேற உயர் ராணுவ கவுன்சில் தடை விதித்துள்ளது. முபாரக்கிடம் விரைவில் விசாரணை நடத்தப்படும் என கருதப்படுகிறது.
முபாரக்கின் இரண்டு மகன்கள், அமைச்சரவை உறுப்பினர்கள், உயர் அதிகாரிகள் ஆகியோரும் விசாரணையை எதிர்கொள்கின்றனர்.
30 ஆண்டுகளாக தொடர்ந்த முபாரக்கின் ஏகாதிபத்திய ஆட்சி கடந்த பிப்ரவரி மாதம் மக்கள் எழுச்சியைத் தொடர்ந்து முடிவுக்கு வந்தது. முபாரக்கின் கட்சியை தடைச்செய்ய வேண்டுமென்பது எதிர்ப்பாளர்களின் முக்கிய கோரிக்கையாகும். எகிப்தின் மறைந்த முன்னாள் அதிபரான அன்வர் சதாத் கடந்த 1978-ஆம் ஆண்டு என்.டி.பி கட்சியை துவக்கினார்.

0 கருத்துரைகள்:
Post a Comment