புதுடெல்லி:எண்டோஸல்ஃபான் கிருமி நாசினியை தடைச்செய்ய இயலாது என மத்திய விவசாயத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
தேசிய மனிதஉரிமை கமிஷனுக்கு அளித்துள்ள அறிக்கையில் எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய இயலாது என மீண்டும் தெரிவித்துள்ளது விவசாய அமைச்சகம்.
கேரளா, கர்நாடகா மாநிலங்களைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் எண்டோஸல்ஃபான் ஆபத்தை விளைவிக்கவில்லை என அறிக்கையில் அமைச்சகம் கூறுகிறது.
எண்டோஸல்ஃபானை தடைச்செய்ய வேண்டுமெனக்கோரி அதனால் பாதிப்பிற்குள்ளானவர்கள் தேசிய மனித உரிமை கமிஷனை அணுகியிருந்தனர். இதனைத் தொடந்து இவ்விவகாரத்தில் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்த மத்திய விவசாயத்துறை அமைச்சகம், சுகாதாரத்துறை அமைச்சகம், வனம்-சுற்றுச்சூழல்துறை அமைச்சகம் ஆகியவற்றிற்கு தேசிய மனித உரிமை கமிஷன் கோரிக்கை விடுத்திருந்தது. இதன் அடிப்படையில் வழங்கியுள்ள அறிக்கையில்தான் எண்டோஸல்ஃபானை தேசம் முழுவதும் தடைச் செய்ய இயலாது என விவசாய அமைச்சகம் அறிவித்துள்ளது.
எண்டோஸல்ஃபானை தடைச் செய்தால் எதிர்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும், குறைந்த செலவிலான கிருமி நாசிகள் கிடைக்கவில்லை எனவும் விளக்கம் அளித்துள்ளது விவசாயத்துறை அமைச்சகம்.
எண்டோஸல்ஃபான் உடல்நலக் கோளாறுகளை உருவாக்குமா என்பதுக் குறித்து ஆராய ஒப்படைக்கப்பட்டுள்ள இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் அறிக்கையின் அடிப்படையில் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம். அறிக்கை எண்டோஸல்ஃபானுக்கு எதிராக அமைந்தால் அதனடிப்படையில் நிலைப்பாட்டை மேற்கொள்வோம் என விவசாய அமைச்சகத்தின் அறிக்கை கூறுகிறது.
வருகிற 24-ஆம் தேதி ஜெனீவாவில் நடைபெறவிருக்கும் ஸ்டாக்ஹோம் கன்வென்சனில் இந்தியா எண்டோஸல்ஃபானுக்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொள்ளவேண்டும் என தேச முழுவதும் கோரிக்கை எழுந்துள்ள சூழலில் மீண்டும் அதற்கு எதிரான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளது மத்திய அரசு.
எண்டோஸல்ஃபானுக்கு தடைவிதிக்க பெரும்பாலான மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக முன்பு விவசாயத்துறை அமைச்சர் சரத்பவார் தெரிவித்திருந்தார். ஆனால், ஒரு மாநிலம் கூட இதனை தடைவிதிக்கக் கூடாது என கூறவில்லை என்பது தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி வெளியான ஆவணங்களிலிருந்து தெரியவந்தது.
இந்தியன் கவுன்சில் ஆஃப் மெடிக்கல் ரிசர்ச்சின் அறிக்கையின் அடிப்படையில் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என சுகாதாரத்துறை அமைச்சகமும், இவ்விவகாரத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டியது விவசாயத்துறை அமைச்சகம் என வனம்-சுற்றுசூழல் அமைச்சகமும் அறிக்கையை சமர்ப்பித்துள்ளன.

0 கருத்துரைகள்:
Post a Comment