ஸன்ஆ:முப்பது ஆண்டுகளுக்கு மேலாக ஆட்சியில் தொடரும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிரான மக்கள் எழுச்சி வலுவடைந்துள்ள யெமன் நாட்டில் வளைகுடா நாடுகளின் மத்தியஸ்தம் பலன் தரும் என கருதப்படுகிறது.
பதவி விலகுவதுத் தொடர்பாக ஸாலிஹை ஒப்புக்கொள்ளவைக்க இயலும் என்பது ஜி.சி.சி நாடுகளின் நம்பிக்கை என கத்தர் பிரதமர் ஷேக் ஹமத் பின் ஜஸீம் அல் தானி தோஹாவில் பத்திரிகையாளர்களுக்கு அளித்துள்ள பேட்டியில் தெரிவித்துள்ளார்.
ஸாலிஹ் மற்றும் எதிர்ப்பாளர்களிடையேயான பிரச்சனைகளில் மத்தியஸ்தம் வகிக்கும் ஜி.சி.சி நாடுகள் ஸாலிஹ் பதவி விலகுவது தொடர்பாக இரு தரப்பினர் முன்பாக அதிகாரப்பூர்வமாக கோரிக்கை விடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.
யெமன் அதிபர் மற்றும் எதிர்ப்பாளர்களிடையே ஒப்பந்தம் ஏற்படுத்துவதற்காக சவூதி அரேபியா, கத்தர், யு.ஏ.இ, குவைத், ஒமான், பஹ்ரைன் வெளியுறவுத்துறை அமைச்சர்கள் சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் சந்திக்கின்றனர்.
ஜி.சி.சி நாடுகளின் கோரிக்கையை யெமன் அதிபருக்கும், எதிர்தரப்பினருக்கும் அளித்துள்ளதாகவும், இடைக்கால கமிட்டிக்கு அதிகாரத்தை ஒப்படைக்க ஸாலிஹிடம் தெரிவித்துள்ளதாகவும் கத்தரின் பிரபல பத்திரிகையான அல் அரப் செய்தி வெளியிட்டுள்ளது.
மூன்று மாத காலம் இடைக்கால கமிட்டி பதவி வகிக்கும் பின்னர் தேர்தல் நடவடிக்கைகளை பூர்த்தியாக்கி அதிகாரத்தை தேர்ந்தெடுக்கப்படுபவர்களிடம் ஒப்படைக்கப்படும் என்பது ஜி.சி.சி நாடுகள் முன்வைத்துள்ள கோரிக்கையாகும்.
யெமனில் தற்போதும் பெரும்பாலான நகரங்களில் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. போராட்டம் துவங்கியதிலிருந்து அங்கு கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை 125 ஆகும்.
0 கருத்துரைகள்:
Post a Comment