Friday, April 22, 2011

இன்ஃபோஸிஸின் இஸ்லாமிய ஃபோபியா

Infosys Muslim engineer sacked
புதுடெல்லி:ஜெய்ப்பூர் குண்டுவெடிப்பு வழக்கில் போலீஸார் விசாரித்தார்கள் என குற்றஞ்சாட்டி இன்ஃபோஸிஸ் மென்பொருள் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் ஹுஸைனின் 3 ஆண்டுகால நீதிக்கான போராட்டம் வெற்றியடைந்துள்ளது.

தீவிரவாதி என குற்றஞ்சாட்டி விசாரணை நடத்திய போலீஸ் பின்னர் ராஷித் நிரபராதி என்பதை அறிந்து அவரை விடுதலைச் செய்தது. ஆனால், பணியில் சேர்க்கமாட்டோம் எனக் கூறிய இன்ஃபோஸிஸிற்கு எதிராக ராஷித் ஹுஸைனுக்கு கிடைத்த வெற்றி நீதிக்கான போராட்ட வரலாற்றில் இடம்பிடித்துள்ளது.

மூன்று வருடத்திற்கான சம்பளம் உள்பட அனைத்து ஆதாயங்களையும் அளித்து அவரை பழைய வேலையில் சேர்க்குமாறு ராஜஸ்தான் சிறப்பு தொழிலாளர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்ஃபோஸிஸின் ஜெய்ப்பூர் அலுவலகத்தில் சீனியர் நெட்வர்க் பொறியாளராக பணியாற்றியவர் பாட்னாவைச் சார்ந்த ராஷித் ஹுஸைன். இவரை கடந்த 2008-ஆம் ஆண்டு ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் நடந்த குண்டுவெடிப்புத் தொடர்பாக போலீஸார் கைது செய்தனர். ஒன்பது தினங்களாக ராஷித் ஹுஸைனை விசாரித்த போலீஸார் அவர் நிரபராதி என்பதையறிந்து விடுதலைச் செய்தது.

ஆனால்,இன்ஃபோஸி 2 வார லீவில் செல்லுமாறு ராஷிதிடம் கூறியது. பின்னர் நிறுவனத்தின் சிறப்பு குழுவின் முன்பு ஆஜராகுமாறு கூறியது. அதற்கு பிறகு, ராஷித் பணியில் சேரும்பொழுது அளித்த சுயவிபரங்கள்(பயோடேட்டா)  சரியில்லை எனக் குற்றஞ்சாட்டி ஒழுங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தது. இறுதியாக ஜூலை 17-ஆம் தேதி ராஷிதை வேலையை விட்டு நீக்கியது. ராஷிதின் தன்னிலை விளக்கத்தை கேட்க இன்ஃபோஸிஸ் நிறுவனம் மறுத்துவிட்டது.

வேலை பறிபோனதால் ராஷிதின் வாழ்க்கையே இருண்டு போனது. ஐ.டி துறையில் பிரபலமாக விளங்கும் இன்ஃபோஸிஸிற்கெதிராக வழக்குத் தொடர உதவியது ராஜஸ்தான் மாநில பி.யு.சி.எல் பிரிவும், மனித உரிமை அமைப்புகளுமாகும்.

தவறான காரணங்களைக் கூறி இன்ஃபோஸிஸ் பணியாளரை வேலையிலிருந்து நீக்கியதாக நீதிமன்றம் குறிப்பிட்டது.

இன்ஃபோஸிஸ் நிறுவனத்திலிருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட ராஷித் தற்பொழுது ஜெய்ப்பூர் ஞான் விஹார் பல்கலைக்கழகத்தில் மின்னணுவியல் தகவல் தொடர்பு பிரிவில் தலைவராக உள்ளார்.

 குற்றச்சாட்டுகளின் பெயரால் வேலையை இழந்த நூற்றுக்கணக்கான முஸ்லிம் இளைஞர்களில் நானும் ஒருவன் என ராஷித் தெரிவித்துள்ளார்.
அரசும், கார்ப்பரேட் நிறுவனங்களும் தீவிரவாதத்திற்கெதிரான போராட்டம் என்ற பெயரில் நிரபராதிகளை குறிவைப்பதாக பி.யு.சி.எல் பொதுச் செயலாளர் கவிதா ஸ்ரீவஸ்தவா குற்றஞ்சாட்டியுள்ளார்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza