புதுடெல்லி:மத்திய அரசின் எதிர்ப்பை புறக்கணித்து மூத்த வழக்கறிஞர் உதய் யு லலித்தை 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் வழக்கில் சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞராக உச்சநீதிமன்றம் நியமித்துள்ளது. இதர அரசு தரப்பு வழக்கறிஞர்களை சி.பி.ஐயின் வழக்கறிஞர்கள் குழுவிலிருந்து நியமிக்க வேண்டுமென நீதிபதிகளான ஜி.எஸ்.சிங்வி, எ.கெ.கங்கூலி ஆகியோர் அடங்கிய டிவிசன் பெஞ்ச் உத்தரவிட்டது.
சிறப்பு அரசு தரப்பு வழக்கறிஞரின் நியமனத்திற்கு லலித்தின் பெயரை சி.பி.ஐ பரிந்துரைத்தது. மத்திய அரசும் என்ஃபோர்ஸ்மெண்ட் இயக்குநரும் இதற்கு எதிரான நிலைப்பாட்டை மேற்கொண்டனர்.
லலித்தை அரசு தரப்பு வழக்கறிஞராக நியமிப்பதற்கு சட்ட அந்தஸ்து இல்லை எனவும், மாநிலம் அல்லது மத்தியில் குறைந்தபட்சம் 7 ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் இருக்க வேண்டும் என்று கூறி, லலித் நியமனத்துக்கு எதிர்ப்பு தெரிவித்தது. ஆனால் சிபிஐ சார்பில் ஆஜரான வழக்கறிஞர் கே.கே.வேணுகோபால், வழக்கறிஞர் பட்டியலில் 15 ஆண்டுகளாக உள்ளவர் லலித் என்றும், மாநிலத்தில் 5 ஆண்டுகளும் மத்தியில் 10 ஆண்டு அனுபவமும் உள்ளவர் என்றும் குறிப்பிட்டார்.
அரசு சார்பில் ஆஜரான அட்டர்னி ஜெனரல் ஜி.இ. வாஹன்வதி, வழக்கறிஞர் பட்டியலில் இடம்பெற்றிருப்பது மட்டுமே போதுமானதல்ல. அரசு பட்டியலில் 7 ஆண்டுகள் இடம்பெற்றிருக்க வேண்டும் என்றார்.
இதை விசாரித்த நீதிபதிகள், வழக்கறிஞர்கள் பட்டியலில் இடம்பெற்றிருக்க வேண்டும் என்பது கட்டாயமல்ல என்று குறிப்பிட்டனர். அரசு குறிப்பிடும் வாதம் தொழில்நுட்ப ரீதியிலானது. அதை சரியான வாதமாக ஏற்க முடியாது என்று தெரிவித்தனர்.

0 கருத்துரைகள்:
Post a Comment