Tuesday, April 19, 2011

நமதூர் வாசிகள்-கொலஷ்ட்ராலை குறைக்க கடற்கரைக்கு நடைப்பயணம்

நமதூரில் ஒரு சில மாதங்களாக நடைபழக்கம் (Walking) செல்பவர்களின் எண்ணிக்கை அதிகமாகி உள்ளது. இல்லை இப்பொழுது தான் இந்த பழக்கம் ஆரம்பித்திருக்கிறது.  வீட்டிற்குள் இருந்த பெண்கள் எல்லாம் காலையிலும், மாலையிலும் கடற்கரையை நோக்கி நடைபோடுவதை பார்க்கும் பொழுது எகிப்திலும், யெமனிலும் ஏற்பட்ட புரட்சி நமதூருக்கு வந்துவிட்டதோ?  என்று நினைக்க தோன்றுகிறது. 

காலையில் வெகு சீக்கிரமாக எழுந்து ஃபஜர் தொழுகையை முடித்துவிட்டு வீடுகளை கூட்டி பெருக்கி, தன் குழந்தைகளை மதரஸாவிற்கு அனுப்புவதில் மும்முரமாக இருந்த சமுதாயம் எங்கே என்று கேட்க தோன்றுகிறது இந்த அதிவேக நடைபோடும் பெண்களை பார்க்கும் போது.

எங்கே செல்கின்றார்கள் இவர்கள்? டாக்டரின் கட்டளை காலையிலும், மாலையிலும் அறைமணி நேரம் நடக்க வேண்டுமாம். அவ்வாறு இல்லை எனில் உங்கள் ஆயுள்காலம் வெகு விரைவில் முடிந்துவிடும் என்று அவர் கூறிய ஒற்றைவரிதான் இவர்களை இவ்வாறு பாடாய் படுத்துகிறது.

இன்று 15 வயது இளம் பெண் முதல் 60 வயது வயதானவர் வரை யாரை  கேட்டாலும் கொலஷ்ட்ரால்,சுகர், இரத்த அழுத்தம் என வியாதிகளைப் பட்டியலிட்டுச் செல்கின்றனர். இவர்கள் தங்கள் வியாதிகளுக்கான தீர்வை வீட்டிற்குள் வைத்துகொண்டு வெளியே தேடி அழைந்து திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இந்த நடை பயணத்திற்கான காரணம் உடல் எடை குறைப்பது, கொலஷ்ட்ராலை கட்டுபடுத்துவது, இரத்த அழுத்தம் சீராக இருக்க முயற்சி செய்வது. இவைதான் இதன் மிக முக்கிய காரணங்கள். ஆனால் இவை அனைத்தும் வீட்டில் இருந்து கொண்டே நம்மால் சரி செய்ய முடியும் என்பது தான் யாரும் மறுக்க முடியாத உண்மை.

ஒரு 15-20 வருடத்திற்கு முன்னால் சென்றால் நம் முன்னால் வாழ்ந்த மக்களுக்கு இந்த நோய்கள் என்றால் என்ன என்று கூட தெரியாது. அதே போன்று இந்த நோய்களால் பாதிக்கபட்டவர்கள் என்று ஒருவரை காண்பது மிகவும் அரிது, நமதூரில் இந்த நோய்க்கு பணக்கார நோய் என்றே பெயர் வைத்திருந்தார்கள். 

காரணம் இது பணக்காரவர்களுக்கு மட்டும் தான் வருமாம். காரணம் அவர்கள் வீட்டில் சகல வசதிகளுடன் எந்த வேலையும் செய்யாமல் இருப்பார்களாம். ஆனால் இந்த நோய்கள் இன்று நம் அனைவருக்கும் மிக நெருங்கிய நண்பனாக மாறியுள்ளது மிக வருத்ததிற்கு உரிய விஷயமாகும்.

நமது முன்னோர்களுக்கு இது போன்ற நோய்கள் வராமல் இருந்ததற்கு மிக முக்கிய காரணி அவர்கள் தங்களது வேலைகளை தாங்களே நிறைவேற்றி கொள்ள கூடியவர்களாக இருந்தார்கள்.அது வீட்டு வேலையானாலும் சரி, மற்ற வேலையானாலும் சரி தாங்களே செவ்வனே செய்து முடித்தார்கள். 

அப்பொழுதெல்லாம் ஏது எந்திரங்கள். தண்ணீர் இறைப்பது, வீட்டைப் பெருக்குவது, ஆட்டுக் கல்லில் மாவு அரைப்பது என பல்வேறு வேலைகளை செய்து வந்தனர். எனவே,அவர்கள் உடல் சுகத்துடனும், ஆரோக்கியத்துடனும் வாழ்ந்து இருக்கின்றனர். இன்றும் அக்கால முதியவர்கள் திறத்துடனும், ஆரோக்கியத்துடனும் இருப்பதை நம்மால் காணமுடிகின்றது.

ஆனால் இன்று என்ன ஆயிற்று?ஆண்கள் ஏ.சி ரூமில் இருக்கையிலே அமர்ந்து கொண்டு கணிணியில் பணி புரிகின்றனர். பெண்களோ தொலைக்காட்சியைப் பார்த்துக் கொண்டே மிக்ஸியில் மாவு அரைப்பதும், ஆள் வைத்து தண்ணீர் அள்ளுவதும் என தங்களது வேலைகளை சுருக்கி வியாதிகளைப் பெருக்கி கொண்டு செல்கின்றனர். இதன் விளைவு இன்று சம்பாதிக்கும் பாதி பணத்தை மருத்துவரிடமே கொடுக்க வேண்டியிருக்கிறது.

இதற்கு என்ன தீர்வு?

உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும்.எவ்வகையான உடற்பயிற்சி செய்ய வேண்டும்

வீட்டு வேலைகளை சிரமமாக எண்ணாமல் வரும் நோயைத் தடுக்கும் மருந்தாக எண்ணி பெண்கள் தங்கள் வேலைகளை தாங்களே செய்து வருவது மிகவும் சிறந்தது. அதிகாலையில் முதல் கடமையான ஃபஜரை தொழுது முடித்து  கிணற்றுக்கு சென்று தண்ணீர் இரைத்து வீட்டிற்கு கொண்டுவந்து வைத்து பாருங்கள் அந்த நாள் முழுக்க சுறுசுறுப்பாய் இளமை துள்ளலுடன் இருக்கும்.

தினமும் ஐவேலை தொழுவதே சிறந்த உடற்பயிற்சியாகும். மாதத்தில் மூன்று நாள் நோன்பு வைப்பது உடலுக்கு மிகவும் சிறந்ததாகும். இதை ரஸுல்(ஸல்) அவர்கள் 1400 வருடத்திற்கு முன்பு சொல்லி சென்றார்கள். இதனை தான் இன்று 24 மணிநேரம் உண்ணாவிரதம் இருப்பது உடல் சீராக செயல்பட உதவும் என்று ஆய்வு செய்து கண்டுபிடித்திருக்கிறார்கள் விஞ்ஞானிகள்.

அதனால் நடைபயணம் மேற்கொள்வது தவறு என்பதல்ல இது போன்ற அன்றாட வேலைகளை நாம் செய்தாலே போதும் நம்முடைய சமூகத்தை ஆரோக்கியமான சமூகமாக மாற்றமுடியும். அது போக நடைபயணம் மேற்கொள்வது அவசியம் எனில் அதையும் நாம் பின்பற்றலாம்.

சகோதரி அனிஷா பைசல்

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza