ஸன்ஆ:ஒரு மாதத்திற்கும் மேலாக தொடரும் உள்நாட்டு மோதல்களுக்கு தீர்வு காண பேச்சுவார்த்தை நடத்துவதற்கான வளைகுடா நாடுகளிடையேயான ஒத்துழைப்பு கவுன்சில்(ஜி.சி.சி) அழைப்பை யெமன் ஏற்றுக்கொண்டுள்ளது.
அரசு பிரதிநிதிகளும்,எதிர்கட்சியினரும் பங்கேற்கும் பேச்சுவார்த்தை சவூதி அரேபியாவின் தலைநகர் ரியாதில் வைத்து நடைபெறும். ஆனால்,தேதி நிச்சயிக்கப்படவில்லை.
பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்காக வளைகுடா நண்பர்களின் அழைப்பை ஏற்றுக்கொள்ள தயார் என யெமன் நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் அபூபக்கர் அல் பிர்பி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.
எதிர்ப்பாளர்களின் போராட்டத்தை அடக்கி ஒடுக்கும் அதிபர் அலி அப்துல்லாஹ் ஸாலிஹின் நடவடிக்கையை கண்டித்து ராஜினாமாச் செய்த ராணுவ தளபதி ஜெனரல் அலி முஹ்ஸினும் பேச்சுவார்த்தையில் கலந்துகொள்வார்.
பேச்சுவார்த்தையின் விபரங்களைக் குறித்து அறியாமல் அதில் கலந்துக்கொள்ளவியலாது என எதிர்ப்பாளர்களின் தலைவர்கள் அறிவித்துள்ளனர்.
இதற்கிடையே ஹுதைதாவில் ராணுவம் மேலும் 2 பேரை அநியாயமாக சுட்டுக் கொன்றுள்ளது. ஏற்கனவே 17 பேரை ராணுவம் கண்மூடித்தனமாக சுட்டுக் கொன்றதற்கு நடந்த சம்பவமாகும் இது.
தலைநகரான ஸன்ஆவில் எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய அக்கிரமமான துப்பாக்கிச்சூட்டில் ஆறு பேர் கொல்லப்பட்டனர். யெமனில் இரத்தக் களரியை முடிவுக்கு கொண்டுவர சர்வதேச சமூகம் தலையிட வேண்டுமென எதிர்கட்சியினர் கோரிக்கை விடுத்துள்ளன.
0 கருத்துரைகள்:
Post a Comment