புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் தமிழக முதல்வர் கலைஞர் மு.கருணாநிதியின் மகளும், மாநிலங்களவை உறுப்பினருமான கனிமொழியின் பெயர் சி.பி.ஐ தாக்கல் செய்துள்ள இரண்டாவது குற்றப்பத்திரிகையில் இடம்பெற்றுள்ளது.
கலைஞர் தொலைக்காட்சியின் மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ரெட்டியின் பெயரும் குற்றப்பத்திரிகையில் இடம் பெற்றுள்ளது. அதேவேளையில் கருணாநிதியின் மனைவி தயாளு அம்மாளின் பெயர் குற்றப்பத்திரிகையில் இல்லை.
முன்னாள் தொலைத் தொடர்புத்துறை அமைச்சரும், தி.மு.க உறுப்பினருமான ஆ.ராசாவின் பெயர் இரண்டாவது குற்றப்பத்திரிகையிலும் இடம் பெற்றுள்ளது. ஸ்வான் டெலிகாம் மூலமாக தி.மு.கவின் தொலைக்காட்சி சேனலான கலைஞர் தொலைக்காட்சிக்கு 214 கோடி ரூபாய் அளிக்கப்பட்டதற்கான ஆதாரம் சி.பி.ஐக்கு கிடைத்துள்ளது.
ஸ்வானின் ஷாஹித் பல்வா மூலமாக கலைஞர் டி.விக்கு நிதி அளிக்கப்பட்டுள்ளது. கனிமொழி மற்றும் தயாளு அம்மாள் ஆகியோருக்கு கலைஞர் டி.வியில் 80 சதவீத பங்குகள் உள்ளன. 20 சதவீத பங்குகள் மேலாண்மை இயக்குநர் சரத்குமார் ரெட்டிக்கு உரியதாகும்.
ஏப்ரல் இரண்டாம் தேதி வெளியிட்ட குற்றப்பத்திரிகையில் ஸ்வான், யுனிடெக், ரிலையன்ஸ் டெலிகாம் ஆகிய நிறுவனங்களின் மூத்த அதிகாரிகளின் பெயர் குறிப்பிடப்பட்டிருந்தது. அவர்கள் ஐந்து பேருக்கும் ஜாமீன் மறுக்கப்பட்டதைத் தொடர்ந்து தற்போது சிறையிலடைக்கப்பட்டுள்ளனர்.
கலைஞர் டிவியின் நிர்வாக இயக்குனர்களில் ஒருவரான கனிமொழி, 2ஜி ஸ்பெக்டரம் ஒதுக்கீடு முறைகேடு தொடர்பான குற்றச் சதியில் இணைந்து செயல்பட்டதாக குற்றப் பத்திரிகையில் கூறப்பட்டுள்ளது.
0 கருத்துரைகள்:
Post a Comment