புதுடெல்லி:2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் தொடர்பாக விசாரணை நடத்திவரும் பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு(Public accounts committee) கூட்டத்தில் மோதல் ஏற்பட்டது. வெள்ளிக்கிழமை கூடிய பாராளுமன்ற பொதுக் கணக்குக் குழு கூட்டத்தில் காங்கிரஸ்-தி.மு.க உறுப்பினர்கள் காரசாரமான வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஸ்பெக்ட்ரம் விவகாரம் தொடர்பாக நீதிமன்றம் விசாரணை நடத்திக் கொண்டிருக்கும்போது அதுபற்றி பிஏசி விசாரணை நடத்துவது அவசியமா என திமுக, காங்கிரஸ் உறுப்பினர்கள் ஜோஷியிடம் கேள்வி எழுப்பினர்.
இந்தக் கூட்டத்தில் ஆளும் தரப்பில் காங்கிரஸ் கட்சியின் கே.எஸ்.ராவ், நவீன் ஜிண்டால், அருண் குமார், சைபுதீன் சோஸ், திமுகவின் திருச்சி சிவா ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
அதேவேளையில், சட்டத்துறை செயலாளர் டி.ஆர்.மீனா மற்றும் சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங் ஆகியோரிடம் இன்று பி.ஏ.சிக்கு முன்பு ஆஜராக உத்தரவிடப்பட்டிருந்தது. பதினொன்று மணியளவில் மீனாவும், மதியம் சி.பி.ஐ இயக்குநர் எ.பி.சிங்கும் வந்தனர். அவர்களிடம் காத்திருக்குமாறு கோரப்பட்டது.
பி.ஏ.சி (பாராளுமன்ற பொதுக்கணக்கு குழு) அறிக்கையை சமர்ப்பிக்க கடைசி தேதி ஏப்ரல் 30 ஆகும். ஆனால், 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் விசாரணையை பூர்த்தி செய்ய பி.ஏ.சிக்கு இயலுமா என்பது சந்தேகமாக உள்ளது. குழுவில் சில பிரச்சனைகள் உருவாகியுள்ளதாக பி.ஏ.சி உறுப்பினர் ஒருவர் தெரிவிக்கிறார்.
3 மணி நேரம் தொடர்ந்த இந்தக் கூட்டத்தில் பல தருணங்களில் காரசாரமான வாக்குவாதம் நடந்தது. நாடாளுமன்றக் குழுக் கூட்டத்தில் இதுபோன்ற வாக்குவாதங்கள் நடைபெற்றது இதுவே முதல்முறை எனக் கூறப்படுகிறது.
விசாரணைக்கும் மேலும் சிலரை அழைப்பதா, வேண்டாமா என்பது குறித்து முடிவு செய்வதற்கு வரும் 21-ம் தேதி பிஏசி மீண்டும் கூடும் எனவும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
22 உறுப்பினர்களைக் கொண்ட பாராளுமன்ற பொதுக் கணக்கு குழுவில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த 6 பேரும், பாஜகவின் 4 பேரும், அதிமுக, திமுக சார்பில் தலா இருவரும், சிவசேனா, பிஜு ஜனதா தளம், ஐக்கிய ஜனதா தளம், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒருவரும் இடம் பெற்றிருக்கின்றனர். ஒரு இடம் காலியாக இருக்கிறது.

0 கருத்துரைகள்:
Post a Comment