Tuesday, April 5, 2011

யெமன்:17 பேரை அநியாயமாக சுட்டுக்கொன்ற ராணுவம்

mideast-yemen-protest-2011
ஸன்ஆ:யெமனில் தெற்கு நகரமான தாஇஸில் அரசு எதிர்ப்பாளர்கள் மீது ராணுவம் நடத்திய கண்மூடித்தனமான துப்பாக்கிச் சூட்டில் 17 பேர் கொல்லப்பட்டனர். முப்பதுக்கும் மேற்பட்ட மக்கள் படுகாயமடைந்தனர்.
முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக பதவி வகித்துவரும் ஏகாதிபத்தியவாதி அலி அப்துல்லாஹ் ஸாலிஹிற்கு எதிராக மக்கள் வீதிகளில் இறங்கி அமைதியாக போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தாஇஸ் ஆளுநரின் தலைமையகத்தை நோக்கி பல்லாயிரக்கணக்கானோர் பங்கேற்ற பேரணியின் மீது ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதாக எ.எஃப்.பி செய்தி நிறுவனம் கூறுகிறது. தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக எதிர்ப்பாளர்களுக்கும், ராணுவத்திற்குமிடையே மோதல் நிகழ்ந்துள்ளது.
கடந்த ஞாயிற்றுக்கிழமை ராணுவத்தின் துப்பாக்கிச் சூட்டில் இரண்டு பேர் கொல்லப்பட்டனர். ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர். போராட்டத்தில் கலந்துகொண்ட பெண்கள் மீது ராணுவம் தாக்குதலை கட்டவிழ்த்துவிட்டதாகவும் செய்திகள் கூறுகின்றன.
அதேவேளையில் ஆயுதம் ஏந்திய கும்பல் ஒன்று ஹுதைதாவில் எதிர்ப்பாளர்கள் மீது துப்பாக்கியால் சுட்டது. மரணம் குறித்து செய்தி வெளியாகவில்லை. 250 பேர் காயமடைந்துள்ளனர்.
துனீசியாவிலும், எகிப்திலும் உருவான எழுச்சியை முன்மாதிரியாகக் கொண்டு ஏகாதிபத்திய ஆட்சிக்கெதிராக யெமன் மக்கள் கடந்த பிப்ரவரி மாதம் முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza