சென்னை:சுயமரியாதையை இழந்து அ.இ.அ.தி.மு.க தரும் சீட்டுகளை பெற்று தேர்தலில் போட்டியிட விரும்பவில்லை. எனவே தமிழகம் மற்றும் புதுச்சேரியில் நடைபெறும் சட்டசபைத் தேர்தலில் பங்கேற்க மாட்டோம் என மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார்.
தமிழக அரசியலில் பழுத்த அரசியல் வாதியும், ஈழத் தமிழர்களுக்காக குரல் கொடுத்து வருபவருமான ம.தி.மு.கவின் பொதுச் செயலாளர் வைகோ அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் ஆணவப் போக்கினால் அவமதிப்புக்குள்ளாகி கடைசியில் தேர்தலை புறக்கணிப்பதாக அறிவித்துள்ளார்.
கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது தி.மு.க கூட்டணியில் தொகுதிகளை ஒதுக்குவதில் ஏற்பட்ட சச்சரவால் அக்கூட்டணியிலிருந்து வெளியேறிய வைகோவிற்கு ஜெயலலிதா 35 தொகுதிகளைக் கொடுத்து திக்குமுக்காட வைத்தார். அன்றிலிருந்து அம்மாவின் நிழலில் ஒதுங்கிய வைகோவிற்கு கஷ்டகாலம் விஜயகாந்தின் வடிவில் வந்தது.
வருகிற சட்டமன்றத் தேர்தலில் தி.மு.கவை எப்படியேனும் வீழ்த்தி அரியணையில் ஏறத்துடிக்கும் செல்வி ஜெயலலிதா, அ.தி.மு.கவின் வாக்கு வங்கியில் வேட்டுவைக்கும் விஜயகாந்தை தனது கூட்டணிக்குள் இழுத்தார். பின்னர் அவருக்கு வைகோ ஒரு பொருட்டாகவே தெரியவில்லை. பல்வேறு சிறுகட்சிகளுடன் தொகுதி உடன்பாட்டையெல்லாம் முடித்துவிட்டு ம.தி.மு.க வை கண்டுகாணாமல் இருந்த ஜெயலலிதா, திடீரென 160 சீட்டுகளுக்கான அ.தி.மு.க வேட்பாளர்களை தன்னிச்சையாக அறிவித்து கூட்டணிக் கட்சிகளை கதி கலங்கவைத்தார்.
இவரது அதிரடியால் ஆட்டங்கண்ட கூட்டணிக் கட்சியினர் மூன்றாவது அணி கோஷத்தை எழுப்பி அம்மாவை அதிரவைத்தனர். உடனடியாக அனைத்துக் கூட்டணிக் கட்சிகளை விடிய விடிய சந்தித்துப்பேசி சமாதானம் பேசி அவர்களது கோரிக்கையை நிறைவுச்செய்தார்.
ஆனால், ம.தி.மு.க வின் கோரிக்கையை அவர் ஏற்பதாக இல்லை. முந்தைய தேர்தலில் 35 இடங்களை அளித்தவர் இத்தேர்தலில் 8 அல்லது 9 தொகுதிகளை அளிப்பதாக கூறி ம.தி.மு.கவை மட்டந்தட்டினார். கடைசியில் கூட்டணிக் கட்சியினரின் வற்புறுத்தலுக்கிணங்க 12 தொகுதிகளை மட்டுமே தர முடியும் எனக்கூறி ம.தி.மு.கவை திண்டாட வைத்தார் ஜெயலலிதா.
அ.தி.மு.க தரும் தொகுதிகளைப் பெற்று தேய் பிறையாக மாறுவதை விட தேர்தலை புறக்கணிப்பதே மேல் என்ற முடிவுக்கு வந்துள்ளது. அதிமுக கூட்டணித் தொடர்பான பேச்சுவார்த்தையின் போது நடத்தியவிதத்தால் ம.தி.மு.கவினர் ஒவ்வொருவரின் உள்ளமும் காயப்பட்டுப் போனது என வைகோ கூறியுள்ளார்.
சுயமரியாதையை இழக்கமாட்டோம், உள்ளத்தை காயப்படுத்தி விட்டார்கள் எனக் கூறும் வைகோவுக்கு இப்பொழுதுதான் ஞானோதயம் பிறந்திருக்கிறது போலும். தன்னை தி.மு.கவிலிருந்து வெளியேற்றிய பொழுது தனக்காக தீக்குளித்து இறந்துபோன தொண்டர்களின் உணர்வுக்கு (அரசியல்வாதிகளுக்கெல்லாம் தீக்குளிக்கும் மூடத்தனம் இந்தியாவில்தான் அரங்கேறுகிறது என்பது வேறுவிஷயம்). மதிப்பளிக்காமல் மீண்டும் தன்னை அவமானப்படுத்தி வெளியேற்றிய தி.மு.கவுடன் வைகோ கூட்டணி வைத்தவுடனேயே அவருக்கிருந்த சுயமரியாதை போய்விட்டது.
பின்னர் விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக பேசினார் எனக் குற்றஞ்சாட்டி பொடா என்ற கருப்புச் சட்டத்தில் பல மாதங்கள் ஜெயலலிதாவால் சிறையிலடைக்கப்பட்ட வைகோ, தனது மானத்தையும் மரியாதையையும் இழந்து ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.கவுடன் கூட்டணி வைத்தார். அப்பொழுது அவருக்கிருந்த கொஞ்சநஞ்ச சுயமரியாதையும் காணாமல் போய்விட்டது.
இப்பொழுது அ.தி.மு.க காயப்படுத்திவிட்டது என புலம்புவதில் என்ன அர்த்தம் இருக்கப் போகிறது?
1 கருத்துரைகள்:
I LIKE YOUR WEBSITE, VERY GOOD KEEP IT UP. GO TO VISIT OUR WEBSITE WWW.SINTHIKKAVUM.NET THANK YOU THO.
Post a Comment