Wednesday, February 16, 2011

யெமனில் மக்கள் எழுச்சிக்கு தீப்பொறியாக மாறிய தவக்கல் கர்மான்

ஸன்ஆ,பிப்:எகிப்தில் ஏகாதிபத்திய ஆட்சியையும், முப்பது ஆண்டுகளாக அதிகாரத்தை விட்டு விலகாத ஹுஸ்னி முபாரக்கையும் 18 தினங்கள் நடந்த இரத்தக் களரியின்றி நடத்தப்பட்ட மக்கள் எழுச்சிப் போராட்டம் முடிவுக்கு கொண்டுவந்தது.

இந்த எழுச்சியின் மூலம் யெமனில் உருவாகியுள்ள மக்கள் எழுச்சிப் போராட்டத்திற்கு உத்வேகம் அளிக்க தவக்கல் கர்மான் என்ற பெண்மணி களமிறங்கியுள்ளார்.

ஃபேஸ்புக் என்ற சமூக இணையதள நெட்வர்க் மூலமாக யெமன் ஏகாதிபத்திய அரசுக்கெதிரான பிரச்சாரத்தில் மூழ்கியுள்ள தவக்கல் அடுத்த கட்ட போராட்டத்திற்காக மக்கள் தயார் செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.

32 வயதான மூன்று குழந்தைகளின் தாயாரான தவக்கல் யெமன் நாட்டின் பிரசித்திப்பெற்ற மனித நேய ஆர்வலராவார். ஆண்கள் கூட ஏகாதிபத்திய அரசுக்கெதிராக குரல் எழுப்ப தயங்கும் வேளையில், யெமன் தேசம் அராஜக ஆட்சிக்கெதிரான போராட்டத்திற்கு ஒரு தலைவரை தேடும் வேளையில் தவக்கலின் பணி புரட்சிகரமானது என அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர்.

கடந்த வெள்ளிக்கிழமை அதிபரின் மாளிகையை நோக்கி மக்கள் பேரணி நடத்தினர். திங்கள்கிழமை ஸன்ஆ பல்கலைக்கழகத்திற்கு அருகில் மாணவர்கள் போலீசாருடன் மோதலில் ஈடுபட்டனர். மாணவர்கள், தொழிலாளர்கள், வழக்கறிஞர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் என சமூகத்தின் அனைத்துத் துறைகளைச் சார்ந்தவர்களும் வீதிகளில் இறங்கிப் போராடத் துவங்கியுள்ளனர்.

முபாரக்கினைப் போலவே அலி அப்துல்லாஹ் ஸாலிஹும் யெமன் நாட்டில் கடந்த முப்பது ஆண்டுகளாக அதிபர் பதவியில் விடாப்பிடியாக இருந்துவருகிறார்.

"எகிப்திற்கு பிறகு இப்பிராந்தியத்தில் எல்லா ஏகாதிபத்தியவாதிகளும் வீழ்ச்சியை சந்திப்பார்கள். இதில் முதலிடம் அலி அப்துல்லாஹ் ஸாலிஹாகும்" என தவக்கல் கர்மான் கருத்துத் தெரிவித்துள்ளார்.

எகிப்து ஒரு முன்மாதிரியாகும். ஏனெனில் இப்பிராந்தியத்தில் செல்வாக்கு மிகுந்த ஏகாதிபத்தியவாதியாக இருந்தார் ஹுஸ்னி முபாரக். யெமனிலும் எகிப்தைப்போல் புரட்சியை ஏற்படுத்த இயலும் என தவக்கல் கர்மான் சுட்டிக்காட்டுகிறார்.

ஊழல், கடுமையான வேலையில்லாத் திண்டாட்டம், மறுக்கப்படும் சுதந்திரம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி யெமன்வாசிகள் போராட்டக் களமிறங்குகின்றனர்.

அரபுலகில் நடைபெறும் எழுச்சிப் போராட்டங்களில் பெண்கள் தீவிரமாக பங்கேற்கின்றனர். தவக்கல் கர்மானின் சகோதரர் தாரிக் யெமனில் பிரசித்திப்பெற்ற கவிஞராவார். அதிபர் ஸாலிஹுடன் தாரிக்கிற்கு நெருக்கம் உண்டு. தவக்கலை ஒதுங்கச் சொல்லுங்கள். எனக்கு கீழ்படியாவிட்டால் அவரை கொலைச் செய்துவிடுவேன் என ஸாலிஹ் மிரட்டியுள்ளார். தனக்கு வந்த மிரட்டலை தவக்கல் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளிடமும், அதிகாரிகளிடமும் தெரிவித்துள்ளார். இதற்கு முன்பும் தவக்கலுக்கு மிரட்டல் செய்திகள் வந்தன. சமீபத்தில் அதிபரின் ஆதரவாளர்கள் தவக்கல் கர்மானை தாக்கியபொழுது அவருக்கு ஆதரவு தெரிவிப்பர்கள் தவக்கலை பாதுகாத்தனர்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza