Friday, January 21, 2011

முல்லா உமருக்கு சிகிட்சை: தாலிபான், ஐ.எஸ்.ஐ மறுப்பு

காந்தஹார்,ஜன.21:தாலிபான் போராளிகளின் தலைவராக கருதப்படும் முல்லா உமர் பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐயின் உதவியுடன் பாகிஸ்தானில் ஒரு மருத்துவமனையில் இதய அறுவை சிகிட்சைச் செய்துக்கொண்டார் என வெளியான செய்திக்கு தாலிபானும், பாகிஸ்தான் ஐ.எஸ்.ஐயும் மறுப்புத் தெரிவித்துள்ளன.

முல்லா உமர் இதய நோயால் அவதிப்பட்டதாகவும், அவருக்கு கராச்சியில் ஒரு மருத்துவமனையில் வைத்து இதய அறுவை சிகிட்சை நடந்ததாகவும், ஒரு தனியார் புலனாய்வு ஏஜன்சியை மேற்கோள் காட்டி நேற்று முன்தினம் வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டிருந்தது.

கடந்த 2001 ஆம் ஆண்டு அமெரிக்காவின் ஆக்கிரமிப்பைத் தொடர்ந்து முல்லா உமர் காணாமல் போனார். இந்த ஆண்டு ஜனவரி ஏழாம் தேதி இதயக்கோளாறு காரணமாக அவர் வெளியே வந்தார் என அப்பத்திரிகை கூறுகிறது.

ஆனால், தாலிபானின் சுப்ரீம் தலைவர் முல்லா உமர் ஆரோக்கியமாக உள்ளார் எனவும், தற்பொழுதும் அந்நிய ஆக்கிரமிப்பு படையினருக்கு எதிரான போரில் தீவிரமாக ஈடுபட்டுள்ளார் என தாலிபானின் அதிகாரப்பூர்வ செய்தித்தொடர்பாளர் ஸபீஹுல்லாஹ் முஜாஹித் எ.எஃப்.பி செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

மருத்துவமனையில் ஒரு டாக்டரை மேற்கோள்காட்டி முன்னாள் அமெரிக்க பாதுகாப்பு அதிகாரியால் நடத்தப்படும் தி எக்ளிப்ஸ் க்ரூப் என்ற தனியார் புலனாய்வு நெட்வர்க் முல்லா உமரைக் குறித்த செய்தியை வெளியிட்டது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza