Sunday, January 23, 2011

ஈரான் அணுசக்தித் திட்டம்: துருக்கியில் பேச்சுவார்த்தை துவங்கியது

டெஹ்ரான்,ஜன:சர்ச்சைக்குரிய ஈரானின் அணுசக்தித் திட்டத்தைக் குறித்த பேச்சுவார்த்தை உலகின் வல்லரசு நாடுகளுக்கும் ஈரானுக்குமிடையே துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் துவங்கியது. இப்பேச்சுவார்த்தையில் முக்கியத்துவம் வாய்ந்த தீர்மானம் ஒன்றும் நிறைவேற்றப்படாது என பொதுவாக கருதப்படுகிறது.

ஐ.நா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பு நாடுகளான அமெரிக்கா, ரஷ்யா, பிரிட்டன், சீனா, ரஷ்யா ஆகிய நாடுகளுடன் ஜெர்மனியும் இப்பேச்சுவார்த்தையில் பங்கேற்கிறது.

ஈரானின் யுரேனியம் செறிவூட்டுவதற்கான திட்டம் அணுஆயுதங்களை உற்பத்திச் செய்வதற்கான திரைமறைவு வேலை என மேற்கத்திய நாடுகள் ஈரானின் மீது குற்றஞ்சுமத்துகின்றன. ஆனால், இதனை மறுக்கும் ஈரான், எரிசக்திக்காக யுரேனியத்தை செறிவூட்டுவது எங்களது உரிமை எனக்கூறுகிறது.

ஐரோபிய யூனியனின் காதரின் ஆஸ்டன் இப்பேச்சுவார்த்தைக்கு தலைமை வகிக்கிறார். ஈரானின் அணு சக்தி மத்தியஸ்தர் ஸயீத் ஜலீலி பேச்சுவார்த்தையில் பங்கேற்கு ஈரான் குழுவுக்கு தலைமை வகிக்கிறார்.

கடந்த மாதம் ஜெனீவாவில் நடந்த முதல் கட்ட பேச்சுவார்த்தையில் இரு பிரிவினர்களிடையே கருத்துவேறுபாடு ஏற்பட்டது. சர்வதேச அரசியலின் பிரச்சனைகள் குறித்து இஸ்தான்புல் மாநாட்டில் எழுப்ப விரும்புவதாக ஜலீல் தெரிவித்தார்.

சர்வதேச நிராயுத மயமாக்கல், அணுஆயுத பரவல் தடுப்பு, இஸ்ரேலின் அணு ஆயுத பலம் ஆகியவற்றை பேச்சுவார்த்தையில் உட்படுத்தவேண்டும் என்பது ஈரானின் கோரிக்கையாகும். ஆனால், பேச்சுவார்த்தை ஈரான் பிரச்சனைகள் குறித்து மட்டுமே என பேச்சுவார்த்தையில் கலந்துக் கொள்ளும் ஆறு நாடுகளும் கூறுகின்றன.

ஐ.நா ஈரானுக்கெதிராக ஒருதலைபட்சமாக அதிக அளவிலான தடைகளை ஏற்படுத்தியதுடன் வேறொரு நாட்டிற்கு யுரேனியத்தை ஒப்படைக்கலாம் என்ற ஈரானின் கோரிக்கையை அமெரிக்காவும் அதன் கூட்டணிநாடுகளும் நிராகரித்த சூழலில் அணுசக்தி விவகாரத்தில் இரு பிரிவினர்களுக்கிடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்தன.

நல்லிணக்கத்தை கெடுக்கும் வகையிலான தடையை நீக்கும் கோரிக்கையை பேச்சுவார்த்தையின் போது எழுப்புவோம் என ரஷ்ய பிரதிநிதி ஸெர்ஜி லாவ்ரோவ் தெரிவித்துள்ளார். ஆனால், இதனை அமெரிக்க வெளியுறவுத்துறைச் செய்தித்தொடர்பாளர் மார்க் டோனர் நிராகரித்துவிட்டார்.

கூடுதலான கடுமையான தடைகளை ஈரான் மீது ஏற்படுத்த வேண்டுமென்பது அமெரிக்காவின் விருப்பமாகும்.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza