Sunday, January 23, 2011

மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம்

ஜித்தா,ஜன.23:சவூதி அரேபியாவில் இஸ்லாமிய புனித ஸ்தலங்களில் ஒன்றான மதீனாவில் திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வு மையம் ஒன்று துவக்கப்பட உள்ளது.

இணையதளங்களில் வெளியிடப்படும் தவறுதலாகவும், திருத்தியும் வெளியிடப்படும் திருக்குர்ஆன் வசனங்களை பாதுகாப்பதற்காக சவூதி மன்னர் அப்துல்லாஹ்வின் உத்தரவின்படி இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் கல்வி, ஓதுதல் ஆகியவற்றிற்கான கம்யூட்டர் புரோகிராம்கள், இணையதளங்களுக்கான அதிகாரப்பூர்வ மையமாக இந்த டிஜிட்டல் ஆய்வு மையம் செயல்படும். இம்மையம் மதீனாவில் கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸின் கீழ் துவக்கப்படவுள்ளது.

திருக்குர்ஆன் அறிஞர்களும், தொழில்நுட்ப வல்லுநர்களும் இந்த ஆய்வுமையத்தில் செயல்படுவார்கள் என கிங் ஃபஹத் திருக்குர்ஆன் காம்ப்ளக்ஸ் பொதுச்செயலாளர் முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

சில இணையதளங்கள் வெளியிடும் திருக்குர்ஆன் வசனங்களில் தவறுகள் காணப்படுகின்றன. ஆய்வு மையத்தின் வல்லுநர்கள் இந்த திருக்குர்ஆன் வசனங்களை படித்து, ஆய்வுச் செய்வார்கள். தவறுகளில்லை என உறுதிச் செய்தபிறகு அவற்றிற்கு டிஜிட்டல் சான்றிதழ் வழங்கப்படும். பரிசோதித்த வசனங்களை வெளியிடுவதற்கான லைசன்ஸாக இந்த சான்றிதழ் அமையும் என முஹம்மது அல் ஊஃபி தெரிவித்தார்.

பரிசுத்த திருக்குர்ஆனின் சேவைக்காக சவூதி அரேபியா அளித்துவரும் முக்கியத்துவத்தை திருக்குர்ஆன் டிஜிட்டல் ஆய்வுமையம் நிரூபிக்கிறது என அவர் மேலும் தெரிவித்தார்.
செய்தி:பாலைவனதூது 

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza