Thursday, January 20, 2011

வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம்: மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது - உச்சநீதிமன்றம் காட்டம்

புதுடெல்லி,ஜன.20:வெளிநாட்டு வங்கிகளில் இருக்கும் இந்தியர்களின் கறுப்புப் பணம் மக்களிடமிருந்து கொள்ளையடிக்கப்பட்டது என உச்சநீதிமன்றம் கூறியுள்ளது.

வரி ஏய்ப்பு என்றுமட்டும் இதனை காணக்கூடாது என நீதிமன்றம் கூறியுள்ளது.

சுவிஸ் வங்கியில் இந்தியர்களின் பணத்தை இந்தியாவுக்கு கொண்டுவர வேண்டும் எனக்கோரி மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி உச்ச நீதிமன்றத்தில் தொடர்ந்துள்ள வழக்கு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது.

நீதிபதிகள் பி.சுதர்ஸன் ரெட்டி, நீதிபதி எஸ்.எஸ்.நிஜார் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் வழக்கை விசாரித்தது. இவ்வழக்கை பரிசீலிக்கும் வேளையில்தான் உச்சநீதிமன்றம் மத்திய அரசை கடுமையாக விமர்சித்தது.

கறுப்புப் பணத்தை தடுக்க மத்திய அரசு என்ன நடவடிக்கையை மேற்கொண்டது என்பதை தெளிவுப்படுத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியபோது மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிடர் ஜெனரல் கோபால் சுப்பிரமணியம், வெளிநாட்டு வங்கிகளில் கணக்கு விபரங்களை சேகரித்து வருவதாகவும், கணக்கு விபரங்களை வெளியிடுவது நாடுகளுக்கிடையேயான நட்புறவை பாதிக்கும் என தெரிவித்தார்.

லீக்டென்ஸ்டைன் நாட்டு வங்கியில் கறுப்பு பணத்தை பதுக்கி வைத்துள்ள இந்தியர்கள் 26 பேர் குறித்து மத்திய அரசு சார்பில் பிரமாணப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. ஜெர்மனியுடன் இரட்டை வரி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளதால் பெயர் விபரங்களை வெளியிடக்கூடாது என்ற நிபந்தனையுடன் முத்திரை வைக்கப்பட்ட உறையில் இது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்தியர்களின் எல்லா வெளிநாட்டு வங்கிகளின் முதலீடு விபரங்களை தெரிவிக்க வேண்டும் என உச்சநீதிமன்றம் மத்திய அரசிடம் வலியுறுத்தியுள்ளது. வெளிநாட்டு வங்கிகளில் கறுப்புப்பணம் குறித்த விபரங்களை அளிக்குமாறு மத்திய அரசிடம் உச்சநீதிமன்றம் கேட்டதற்கு ஒரு வங்கியின் விபரங்களை மட்டும் அளித்த மத்திய அரசின் நடவடிக்கையையும் உச்சநீதிமன்றம் கடுமையாக விமர்சித்தது.
செய்தி:பாலைவனதூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza