Sunday, December 5, 2010

சி.பி.ஐ இணையதளம் ஹேக் செய்யப்பட்டது

புதுடெல்லி,டிச.5:சி.பி.ஐயின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் நுழைந்து ஹேக் செய்த மர்ம நபர்களாக கருதப்படும் 4 பாகிஸ்தான் நாட்டைச் சார்ந்தவர்கள் மீது சைபர் க்ரைம் வழக்கு பதிவுச் செய்யப்பட்டுள்ளது.

தகவல் தொழில் நுட்ப சட்டத்தின் பிரிவுகளின் அடிப்படையில் இவ்வழக்கை பதிவுச் செய்துள்ளது சி.பி.ஐ. இணையதளத்தை புனர் நிர்மாணிப்பதற்கான முயற்சிகள் நடந்துவருகின்றது என சி.பி.ஐயின் அதிகாரப்பூர்வ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார்.

இம்மாதம் 3 மற்றும் 4 ஆம் தேதிகளுக்கிடையே இணையதளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இதுத்தொடர்பாக சி.பி.ஐயின் சைபர்க்ரைம் பிரிவு வழக்கு பதிவுச் செய்துள்ளது.

நேசனல் இன்ஃபோமேட்டிக் செண்டர் மற்றும் தொழில்நுட்ப வல்லுநர்களின் உதவியுடன் இணையதளம் மீண்டும் புனர் நிர்மாணிக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் சி.பி.ஐயின் செய்தித் தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

சி.பி.ஐயின் இணையதளத்தை நேற்று திறந்ததும் முகப்பு பக்கத்தில் பாகிஸ்தான் சைபர் ராணுவம் என்ற அமைப்பின் தகவல் வெளியாகியிருந்தது. சி.பி.ஐயின் தகவல்கள் எதுவும் காணப்படவில்லை. சி.பி.ஐயின் அனைத்து தகவல்களும் முடக்கப்பட்டிருந்தன. மேலும், ’பாகிஸ்தான் இணையதளங்களை ஊடுருவி தாக்க முயற்சி செய்யவேண்டாம்’ என எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.

மிகவும் பாதுகாப்பான இணையதளங்களில் ஒன்றாக சி.பி.ஐயின் இணையதளம் கருதப்படுகிறது. இந்த இணையதளம் இண்டர்போலுடன் நிரந்தரமாக தொடர்பில் இருப்பதாகும். அலுவலகங்களுக்கு போதிய சைபர் பாதுகாப்பு ஏற்படுத்தவில்லை என சி.பி.ஐ ஏற்கனவே மத்திய அரசுக்கு தகவல் தெரிவித்திருந்தது.
செய்தி:தேஜஸ் மலையாள நாளிதழ்-பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza