அமெரிக்காவின் ரகசிய ஆவணங்களை விக்கிலீக் இணையதளம் வெளியிட்டது உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், இது குறித்து கருத்து தெரிவித்த ஈரான் அதிபர் அஹமதி நஜாத், இந்தத் தகவல்கள் கசியவில்லை. இவை வெளியிடப்பட்டுள்ளன. இது திட்டமிட்ட நாடகம் என்று கூறியுள்ளார்.
ஈரான் அதிபர் மஹ்மூத் அஹ்மதி நஜாதிடம் பிரஸ் தொலைக்காட்சி விக்கிலீக் மூலம் தகவல்கள் கசிந்தது குறித்து கேட்டபோது, "நான் உங்கள் கூற்றைச் சரி செய்ய விரும்புகிறேன். இந்த ஆவணங்கள் கசியவிடப்படவில்லை. இவை ஒரு ஒழுங்கமைப்பில் வெளியிடப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இந்த ஆவணங்களை வெளியிட்டதே அமெரிக்க அரசுதான். இதன் மூலம் அவர்களாகவே தீர்ப்பு எழுத விரும்புகின்றனர். இந்த ஆவணங்களுக்கு சட்ட மதிப்பு எதுவும் இல்லை. இந்த ஆவணங்களை வெளியிட்டதன் மூலம் அமெரிக்கா விரும்பும் அரசியல் மாற்றங்கள் எதுவும் ஏற்படப் போவதில்லை என்றும் ஈரானிய அதிபர் நஜாத் கூறினார்.
விக்கிலீக்ஸ் கசியவிட்டதாகக் கூறப்படும் இந்த நாடகமே கருத்து சொல்வதற்குத் தகுதியானதல்ல. இதனை ஆராய்வதன் மூலம் தங்களுடைய நேரத்தை விரயம் செய்ய எவரும் விரும்பமாட்டார்கள் என்றும் நஜாத் கூறினார்.
வளைகுடாப் பகுதியில் உள்ள நாடுகள் ஒவ்வொன்றும் மற்ற நாடுகளுடன் நட்பாகவே உள்ளன. இந்த ஆவணங்கள் வெளியிடப்பட்டதன் மூலம் நட்பு நாடுகளிடையே உறவுகள் பாதிக்காது என்றும் அவர் கூறினார்.
ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்த வேண்டும் என்று சவூதி அரேபியா உள்ளிட்ட வளைகுடா நாடுகளின் தலைவர்கள் அமெரிக்காவை வலியுறுத்தியதாக வெளியான தகவலை மறுத்த நஜாத், இது ஈரானை மனோ ரீதியாக தாக்கும் அமெரி்க்காவின் போர் தந்திரமே என்று குறிப்பிட்டார்
0 கருத்துரைகள்:
Post a Comment