Friday, October 8, 2010

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது; ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

உபதேசம் இவர்களுக்கு பயனளித்தது; ஏனெனில் இவர்கள் முஃமீன்கள்!

நபி(ஸல்) அவர்களின் துணைவியாரான ஆயிஷா(ரலி) அவர்களின் தாய்வழிச் சகோதரர் ஹாரிஸ் அவர்களின் புதல்வரான அவ்ஃப் இப்னு மாலிக் இப்னி துஃபைல்(ரஹ்) கூறினார்;
ஆயிஷா(ரலி) (தம் வீடு ஒன்றை) 'விற்றது தொடர்பாக' அல்லது 'நன்கொடையாக வழங்கியது தொடர்பாக' (அவர்களின் சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் இப்னு ஸுபைர்(ரலி) (அதிருப்தியடைந்து) 'அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தம் முடிவைக்) கைவிடவேண்டும். அல்லது தான் அவரைத் தடுத்து நிறுத்துவேன்' என்று கூறினார்கள் என ஆயிஷா(ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா(ரலி), 'அவரா இப்படிக் கூறினார்?' என்று கேட்டார்கள். மக்கள், 'ஆம்' என்றனர். அப்போது ஆயிஷா(ரலி), 'இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேசமாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன்' என்று கூறிவிட்டார்கள்.
நீண்ட நாள்கள் பேச்சு வார்த்தை நின்றுபோனபோது ஆயிஷா(ரலி) அவர்களிடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர்(ரலி) கேட்டுக்கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசியபோது) ஆயிஷா(ரலி), 'முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவுமாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவுமாட்டேன்' என்று கூறிவிட்டார்கள்.
ஆயிஷா(ரலி) இப்னு ஸுபைர் அவர்களிடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாள்களாகி விட்டபோது, பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர்(ரலி), 'அல்லாஹ்வை முன்வைத்து உங்கள் இருவரிடமும நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா(ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லக்கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே!' என்று கூறினார்கள்.
எனவே, மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான்(ரலி) அவர்களும் தம் மேலங்கிகளை அணிந்துகொண்டு இப்னு ஸுபைர்(ரலி) அவர்களுடன் ஆயிஷா(ரலி) அவர்களிடம் சென்றார்கள். (அங்கு சென்ற) உடனே 'அஸ்ஸலாமு அலைக்க வ ரஹ்மத்துலலாஹி வ பரகாதுஹு' என்று சலாம் சொல்லிவிட்டு, 'நாங்கள் உள்ளே வரலாமா?' என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா(ரலி), 'உள்ளே வாருங்கள்' என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) 'நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா?' என்று கேட்டனர். ஆயிஷா(ரலி), 'ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள்' என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர்(ரலி) இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர்(ரலி) (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக்கொண்டு அவர்களிடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர்(ரலி) அவர்களும் அப்துர்ரஹ்மான்(ரலி) அவர்களும் (வெளியே இருந்தபடி) இப்னு ஸுபைர்(ரலி) அவர்களிடம் பேசியே தீரவேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா(ரலி) அவர்களிடம் வேண்டிக் கொண்டிருந்தனர்.
மேலும், அவர்கள் இருவரும், 'ஒரு முஸ்லிம் தம் சகோதரிடம் மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று' என்று நபி(ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள்' என்று கூறினார்கள்.
ஆயிஷா(ரலி) அவர்களிடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசியபோது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா(ரலி) அழலானார்கள். மேலும், '(நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும்' என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பக் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷா(ரலி)அவர்களிடம், இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக்கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா(ரலி) (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தம் சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தம் சத்தியத்தை நினைவுகூர்ந்து தம் முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.

நூல்;புஹாரி,எண் 6073

அன்பானவர்களே! மனிதர்கள் என்றால் மனக்கசப்பு ஏற்படுவது இயல்புதான். அந்த வகையில் சிலர் சிலரோடு பினங்கிக்கொண்டிருப்பதை பார்க்கிறோம். இவ்வாறு மனக்கசப்போடு வாழ்பவர்கள் சாமான்யர்கள் மட்டும்தான் என்று கருதி விடாதீர்கள். 'ஒரு முஸ்லிம் தம் சகோதரருடன் (மனஸ்தாபம் கொண்டு) மூன்று நாள்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்ற நபிமொழியை மேடைதோறும் முழங்கும் தலைவர்களிலும் இவ்வாறானவர்கள் உண்டு. இவ்வாறான இவர்களின் மனக்கசப்பு நாள்கள் தாண்டி, மாதங்கள் தாண்டி வருடங்களை விழுங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படி உறவுகளுக்கு மத்தியிலும், சமூகத்திற்கு மத்தியிலும் பிணங்கிக் கொண்டிருக்கும் சாமான்யர்களும் சரி, தலைவர்களும் சரி அதுகுறித்து கவலை கொள்கிறார்களா என்றால் இல்லை. இன்னும் சொல்லப்போனால், மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருக்கக் கூடாது என்ற நபிமொழியை சில தலைவர்களிடம் நினைவூட்டினால், தங்களின் நிலையை மாற்றுவதற்கு பதிலாக 'அல்லாஹ்விற்காக ஒருவரை வெறுப்பதற்கு அனுமதி உள்ளது' என்று தங்களின் வார்த்தை ஜால பத்வாக்கள் மூலம் தங்களின் பகைமையை தொடர்கிறார்கள். இத்தகைய தலைவர்களை பின்பற்றும் சகோதரர்களும் தங்களது சக அமைப்பினரை சேர்ந்த முஸ்லிம் சகோதரர்களை எதிரி போல் பார்க்கும் நிலையை நாம் பார்க்கிறோம். சஹாபாக்களை விட அல்லாஹ் நம்மை மேன்மையாக்கி வைத்துள்ளான்[!] என்று சஹாபாக்களுக்கும் மேலாக நம்மை நினைக்கும் நாம், அந்த சஹாபாக்கள் பகைமையை எவ்வாறு வென்றார்கள் என்பதை மட்டும் வசதியாக மறந்து அல்லது மறைத்து விடுகிறோம்.
தனது சகோதரி மகன் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்களோடு பேசமாட்டேன் என்று அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த அன்னையவர்கள், பின்னாளில் சில சஹாபிகளால் நபிமொழியை நினைவூட்டி உபதேசம் செய்யப்பட்டபின், உடனடியாக தனது சத்தியத்தை முறித்து, சகோதரி மகனுடன் தனது உறவை புதுப்பித்ததோடு, தனது தவறான சத்தியத்தை நினைக்கும் போதெல்லாம் கண்ணீர்விட்டு அழுது கைசேதப்படும் அன்னையவர்களின் பண்பு எங்கே..? நாம் எங்கே..? சிந்திக்கவேண்டும்.
மறுபுறம் அப்துல்லாஹ் இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், தனது சிற்றன்னை பேசாவிட்டால் என்ன..? அவர் வீட்டிலா நமக்கு சாப்பாடு..? என்று கண்டும் காணாமல் இருந்தார்களா என்றால் இல்லை. மாறாக தனது சிற்றன்னை தன்னோடு பேசாமல் இருப்பது ஒருபுறம் அவர்களுக்கு கவலையளிப்பதாக இருந்தாலும், மறுபுறம் தன்னோடு பேசாமல் இருப்பது சிற்றன்னைக்கு மார்க்கத்தில் ஆகுமானதில்லையே என்றும் கவலை கொண்டவர்களாக,
தனது சிற்றன்னையை தன்னோடு பேசிட பரிந்துரைக்குமாறு முஹாஜிர்கள் சிலரை நாடுகிறார்கள். முஹாஜிர்கள் சிலரின் பரிந்துரை அன்னையிடம் மாற்றத்தை உண்டாக்கவில்லை. தனது முயற்சி பலனளிக்காததை கண்டு இப்னு ஜுபைர்[ரலி] அவர்கள், நம்பிக்கையிழந்து விடவில்லை. மீண்டும் மிஸ்வர் இப்னு மக்ரமா(ரலி), அப்துர் ரஹ்மான் இப்னு அஸ்வத் இப்னி அப்தி யகூஸ்(ரலி) ஆகிய இருவர் மூலமாக சமாதனம் பேசி அன்னையவர்களின் உறவை உயிர்ப்பிக்கிறார்கள் என்றால், இங்கே உயிர்ப்பிக்கப்பட்டது அன்னையவர்கள் மற்றும் இப்னு ஜுபைரின் உறவு மட்டுமல்ல. மூன்று நாட்களுக்கு மேலாக பேசாமல் இருக்கக் கூடாது என்ற மாநபியின் மணிமொழியும் தான்.
எனவே அன்பானவர்களே! சஹாபாக்களுக்கு அறிவுரை பலனளித்தது ஏனென்றால்,
மேலும், நீர் நல்லுபதேசம் செய்வீராக! ஏனெனில், நிச்சயமாக நல்லுபதேசம் முஃமின்களுக்கு நற்பயனளிக்கும்[51:55 ] என்ற இறைவாக்கின் படி, அவர்கள் முஃமின்களாக இருந்ததால் சஹாபாக்களுக்கு உபதேசம் பயனளித்தது. அத்தகைய சஹாபாக்கள் வழியில், நாமும் பகைமை

மறந்து பாசம் காட்டி முஃமீன்களாக வாழ்வோமா..?

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza