Wednesday, October 13, 2010

கோவையில் ஆர்.எஸ்.எஸ்., அணிவகுப்புக்கு தடை: போலீஸ் எச்சரிக்கை


கோவை,அக்.12:ஆர்.எஸ்.எஸ்., அமைப்பு துவக்கப்பட்ட நாளான விஜயதசமி நாளில் (வரும் 17ம் தேதி), கோவை நகரில் தொண்டர்களின் சீருடை அணிவகுப்பு நடத்த அந்த அமைப்பினர் திட்டமிட்டுள்ளனர். அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டு, போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் மனு அளித்தனர். பொது அமைதிக்கு குந்தகம் ஏற்படும் என்ற காரணத்தைக் கூறிய போலீசார், அனுமதி மறுத்துள்ளனர்.

இந்நிலையில், தடையை மீறி அணிவகுப்பு நடத்த ஆர்.எஸ்.எஸ்., முடிவு செய்துள்ளதாகவும், அதற்கான ஆயத்த அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் போலீசுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, நேற்று முன்தினம் செல்வபுரம், பனைமரத்தூர் பகுதிக்கு விரைந்த போலீசார், அங்கு சீருடையுடன் அணிவகுப்பு பயிற்சியில் ஈடுபட்டிருந்ததாக சொக்கம்புதூரைச் சேர்ந்த மோகன்ராஜ்(33), சீரநாயக்கன்பாளையத்தைச் சேர்ந்த செல்வம்(38), கிருஷ்ணமூர்த்தி(35) ஆகியோரை கைது செய்தனர். அணிவகுப்பு பயிற்சிக் குழுவுக்கு தலைமை வகித்ததாக சபரி, ஜோதிராமன் ஆகியோரை தேடி வருகின்றனர்.

இது குறித்து, மாநகர போலீஸ் உயரதிகாரி ஒருவர் கூறியதாவது: ஆர்.எஸ்.எஸ்., அமைப்பினர் சீருடை அணிவகுப்பு நடத்தினால், பொது அமைதிக்கு பாதிப்பு ஏற்படும் என்பதால் அனுமதி மறுத்துள்ளோம். இது குறித்த நிராகரிப்பு நோட்டீஸ், அந்த அமைப்பினருக்கு முறைப்படி தரப்பட்டுள்ளது. அவ்வாறு இருந்தும், தடையை மீறி அணிவகுப்பு நடத்தும் முயற்சியாக சீருடையுடன் பயிற்சியில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்தே, கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. குறிப்பிட்ட நாளில் தடையை மீறி அணிவகுப்பு நடத்துவோர் மீது கடும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அதே வேளையில், சாலையில் அல்லாமல், ஏதாவது ஒரு வளாகத்துக்குள் அணிவகுப்பு நடத்திக்கொள்ள அனுமதி கோரினால் பரிசீலிக்கப்படும். இவ்வாறு போலீஸ் உயரதிகாரி தெரிவித்தார்.

ஆர்.எஸ்.எஸ்., தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளதை, அந்த அமைப்பு கண்டித்துள்ளது. கோவை மாவட்ட ஆர்.எஸ்.எஸ்., அமைப்பாளர் ஸ்ரீராமன் கூறுகையில், "சாலையில் 500 தொண்டர்களுடன் சீருடை அணிவகுப்பு நடத்த அனுமதி கேட்டோம்; போலீசார் மறுத்துள்ளனர். சட்டப்படி அனுமதி பெற, சென்னை ஐகோர்ட்டை நாடியுள்ளோம். கோவை நகரில் இதற்கு முன், தி.மு.க., - டி.ஒய்.எப்.ஐ., உள்ளிட்ட கட்சிகள், அமைப்பினரின் பேரணிகள் முக்கிய சாலைகளில் நடந்துள்ளன. இதனால், எங்களுக்கும் அனுமதி தர வேண்டுமென கோர்ட்டில் முறையிட்டு, முடிவுக்காக காத்திருக்கிறோம். இந்நிலையில், வழக்கமான உடற்பயிற்சியில் ஈடுபட்ட தொண்டர்களை போலீசார் கைது செய்துள்ளனர்; பல்வேறு இடங்களுக்கும் சென்று, பயிற்சியில் ஈடுபடக்கூடாது என தொண்டர்களை மிரட்டி வருகின்றனர்; இதை கண்டிக்கிறோம்" என்றார்.

SOURCE : பாலைவனத் தூது

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza