Saturday, July 19, 2014

உலகில் 3 இல் ஒரு பகுதி ஏழைகள் இந்தியாவில்!

புதுடெல்லி : உலகில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட நாடு இந்தியா என்றும், 5 வயதுக்குள்பட்ட குழந்தைகளின் இறப்பு விகிதம் இந்தியாவில்தான் அதிகம் என்றும் ஐ.நா. 2014ஆம் ஆண்டின் “மில்லினியம் வளர்ச்சி இலக்குகள்’ ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 
டெல்லியில் உள்ள ஐ.நா. தகவல் மையத்தில் புதன்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, ஐ.நா. அமைப்பின் ஆய்வறிக்கையை வெளியிட்டார். 

இந்த நிகழ்ச்சியில் இந்தியாவுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் லிசே கிராண்டே பேசுகையில், “”உலக முன்னேற்றத்துக்கு இந்தியாவின் பங்கு முக்கியம். எனவே, இந்தியா முன்னேற்றத்தைக் காணாவிட்டால் மில்லினியம் வளர்ச்சி இலக்குகளை எட்ட முடியாது” என்றார். 
ஐ.நா. அறிக்கையின்படி, இந்தியாவில் 60 சதவீதம் பேர் திறந்த வெளியில் மலம் கழிக்கும் அவலம் நிலவுகிறது. உலகளவிலான பிரசவ கால இறப்பு விகிதத்தில், இந்தியாவில் 17 சதவீதம் உள்ளது. 
உலக அளவில் மூன்றில் ஒரு பங்கு பரம ஏழைகளை கொண்ட இந்தியாவை தொடர்ந்து சீனாவில் வறுமை ஒழிப்பு நடவடிக்கை வேகமான முன்னேற்றத்தை அடைந்துள்ளது. அதைத் தொடர்ந்து நைஜீரியா மற்றும் வங்கதேசம் ஆகிய நாடுகள் முன்னேற்றம் கண்டுள்ளன. 
இந்தியா வறுமை ஒழிப்பில் பின்தங்கி இருந்தாலும், கல்வி வளர்ச்சியில் சிறப்பான இடத்தை நோக்கி முன்னேறி வருகிறது என குறிப்பிடப்பட்டுள்ளது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza