Tuesday, September 17, 2013

உ.பி. கலவரத்தை தூண்டியவர்கள் மீது தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் - SDPI மாநில செயற்குழுவில் தீர்மானம்

SWC
எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநில செயற்குழு கூட்டம் 14.09.2013 அன்று திருச்சியில் நடைபெற்றது. மாநில தலைவர் கே.கே.எஸ்.எம். தெஹ்லான் பாகவி தலைமையில் நடைபெற்ற இச்செயற்குழு கூட்டத்தில் மாநில பொதுச்செயலாளர்கள் அப்துல் ஹமீது, நிஜாம் முகைதீன், நெல்லை முபாரக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில பொருளாளர் அம்ஜத் பாஷா அனைவரையும் வரவேற்றார். இக்கூட்டத்தில் கட்சியின் வளர்ச்சி மற்றும் நாடாளுமன்ற தேர்தலுக்கு முன் ஆற்ற வேண்டிய பணிகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டது. இறுதியாக மாநில செயலாளர் அபூதாஹிர் நன்றியுரையாற்றினார்.

இந்த கூட்டத்தில் கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வரும் அக்டோபர் 1 முதல் 31 வரை தீவிர உறுப்பினர் சேர்க்கை இயக்கம் நடத்துவது என்றும் இதில் தமிழகம் முழுவதிலும், 10 லட்சம் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது. அரசியல் கலாச்சாரம் சீரழிந்து வரும் இச்சூழலில் மாற்று அரசியல் சக்தியாக வளர்ந்து வரும் ஒடுக்கப்பட்டோருக்காக போராடும் எஸ்.டி.பி.ஐ கட்சியில் அனைத்து மதத்தை சேர்ந்தவர்களும் படித்தவர்கள் இளைஞர்கள் உட்பட அனைவரும் இணைய வேண்டும் என இச்செயற்குழு அழைப்பு விடுக்கிறது.
1. 7 வருட சிறை தண்டனை ஒரு மனிதன் திருந்துவதற்கு போதுமானது என்ற காந்தியடிகளின் கருத்தின் அடிப்படையிலும், நமது நாட்டில் நீதி அமைப்பை கருத்தில் கொண்டு சந்தர்ப்ப வாதத்தினாலும், சூழ்நிலை சாட்சியங்களின் அடிப்படையிலும் தகுந்த வழக்கறிஞர்களை வைத்து வாதாட முடியாததன் காரணத்தினால் அப்பாவிகள் கூட தண்டிக்கப்படுகிறார்கள் என்பதை கருத்தில் கொண்டு 7 வருட சிறை தண்டனை கழித்த ஆயுள் சிறை கைதிகள் அனைவரையும் ஜாதி, மத வேறுபாடின்றி விடுதலை செய்ய வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
2. பல ஆண்டுகளாக நெல்லை, குமரி, தூத்துக்குடி கடலோர கிராமங்களில் தாதுமணல்களை தனியார் நிறுவனங்கள் விதிமுறைகளை மீறி கொள்ளையடித்து வருகின்றனர். தற்போது மக்கள்போராட்டத்தாலும், சில அதிகாரிகளின் நடவடிக்கையாலும் அரசு ஆய்வுக்குழுவினை அமைத்துள்ளது. இது வெறும் கண்துடைப்பு நடவடிக்கையாக அமைந்து விடாமல் உறுதியான கடுமையான நடவடிக்கைகளை அரசு எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கோருகிறது. அத்துடன் தனியாருக்கு தாது மணல் அள்ளும் உரிமையை முற்றிலும் ரத்து செய்ய வேண்டும் எனவும் இச்செயற்குழு கோருகிறது.
3. கூடங்குளம் அணு உலைக்கெதிராக கடந்த 2 வருடங்களுக்கும் மேலாக இடிந்தகரை உட்பட பல்வேறு கிராம மக்களும் போராட்ட குழுவினரும் போராடி வருகின்றனர்.
4. தங்களின் எதிர்கால சந்ததியினருக்காகவும் நமது மண்ணிற்காகவும் நடைபெறும் இந்த அமைதி வழி போராட்டத்தில் ஈடுபட்டு வரும் மக்கள் மீது காவல்துறை பல்லாயிரக்கணக்கான வழக்குகளை பதிவு செய்துள்ளது. இந்த வழக்குகளை வாபஸ் பெற வேண்டும் என உச்சநீதிமன்றம் பரிந்துரை செய்தும் தமிழக அரசு அதனை செய்யவில்லை. இது வருந்தத்தக்கது. தமிழக அரசு போராட்டக்காரர்கள் மீதான வழக்குகளை உடனே திரும்பப்பெற வேண்டும் என இச்செயற்குழு வலியுறுத்துகிறது.
5. மத்தியில் ஆளும் காங்கிரஸ் அரசு மக்கள் நலனைப்பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் எண்ணெய் நிறுவனங்களுக்கு பாதிப்பு வரக்கூடாது என்பதை மாத்திரமே நோக்கமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. எனவேதான் விலையை நிர்ணயிக்கும் உரிமையை அவர்களிடமே வழங்கியுள்ளது. இதனால் ஏதேனும் ஒரு காரணத்தை காட்டி அவ்வப்போது எண்ணெய் நிறுவனங்கள் விலைகளை உயர்த்தி வருகின்றன. இதனால் பல்வேறு அத்தியாவசிய பொருட்களின் விலைகளும் தாறுமாறாக உயர்ந்து மக்கள் பெரும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர். தொடர்ந்து பெட்ரோல் பொருட்களின் விலைகளை உயர்த்தியதற்கு இச்செயற்குழு தனது கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறது. விலை நிர்ணயிக்கும் உரிமையை எண்ணெய் நிறுவனங்களிடமிருந்து திரும்பப்பெறுமாறு மத்திய அரசை இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது.
6. மிகப்பெரும் தமிழ் இனப்படுகொலையை நடத்திய இலங்கை ராஜபக்சே அரசு சர்வதேச போர்க்குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஆனால் ராஜபக்சே அரசுக்கு அங்கீகாரம் அளிக்கும் வகையில் காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்துவதை இச்செயற்குழு கண்டிக்கிறது. இது காமன்வெல்த் அடிப்படை நெறிகளுக்கு முரணானதாகும். எனவே காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக்கூடாது என இச்செயற்குழு வலியுறுத்துகிறது. இலங்கையில் காமன்வெல்த் மாநாட்டை நடத்த இந்தியா அனுமதிக்கக் கூடாது. மீறி நடந்தால் இந்தியா காமன்வெல்த்திலிருந்து வெளியேற வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக் கொள்கிறது.
7. உத்தர பிரதேசம் முசாபர் நகரில் தொடங்கி பல்வேறு பகுதிகளுக்கும் பரவிய கலவரத்திற்கு 40 க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். நூற்றுக்கணக்கானோர் காயமுற்றுள்ளனர். பெரிய அளவில் பொருளாதாரம் சேதப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கலவரத்தில் பாதிக்கப்பட்டோருக்கு இச்செயற்குழு தனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறது. இந்த கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மற்றும் காரணமானவர்களை தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என இச்செயற்குழு கேட்டுக்கொள்கிறது. பாதிக்கப்பட்டோருக்கு உரிய நிவாரணம் வழங்கவும், மேலும் கலவரங்கள் பரவாமல் தடுக்கவும் முஸ்லிம்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மத்திய மாநில அரசுகளை இச்செயற்குழு கோருகிறது. இந்த கலவரத்தை தங்களின் சதிகளின் மூலம் உருவாக்கி வரும் நாடாளுமன்ற தேர்தலில் அரசியல் ஆதாயம் தேட முனையும் மதவெறி அரசியல் சக்திகளை நாட்டுமக்கள் அடையாளம் காண வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சி கேட்டுக் கொள்கிறது.
8. திருச்சி மாணவி தவ்பிக் சுல்தானா படுகொலையில் உண்மைக்குற்றவாளிகளை சட்டத்தின் முன் இது வரை நிறுத்தப்படாததை வன்மையாக கண்டிக்கும் அதே வேளையில், எஸ்.டி.பி.ஐ கட்சியின் கோரிக்கையை ஏற்று சிபிசிஐடி விசாரணைக்கு தமிழக அரசு உத்தரவிட்டிருப்பதை வரவேற்பதோடு உண்மை குற்றவாளிகளை கைது விரைவில் கைது செய்து உரிய தண்டனை வழங்கிட ஆவண செய்ய வேண்டும் என தமிழக அரசை இச்செயற்குழு வலியுறுத்துகிறது.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza