Saturday, September 7, 2013

அயோத்தி முதல் திண்டுக்கல் வரை காவிக்குரல் ஒன்றுதான் !

திண்டுக்கல் பிரவீன் குமார்
நிகழ்வு 1 : கடந்த மாதம் 25-ம் தேதி அயோத்தியில் ராமர் கோயில் கட்ட வலியுறுத்தி சவுராசி பரிக்ரமா யாத்திரை ஒன்றை ஏற்பாடு செய்திருந்தது விசுவ இந்து பரிசத் அமைப்பு. சரயு நதிக்கரையில் துவங்கி அயோத்தி நகரைச் சுற்றி 250 கிலோ மீட்டர் தூரத்தைக் கடக்கவிருந்த இந்த யாத்திரை, இந்துக்களை தட்டியெழுப்புவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாக வி.எச்.பி அறிவித்திருந்தது. சுமார் 40,000 பேர் கலந்து கொள்ளக்கூடும் என்று அதிகார மட்டத்தில் எதிர்பார்க்கப்பட்ட இந்த யாத்திரைக்காக சுமார் 200 பேர்கள் வரையே கூடியிருந்தனர். அவர்களைக் கைது செய்ததோடு யாத்திரைக்கு தடைவிதித்து உத்தரவிட்டிருக்கிறது காவல்துறை. 144 தடையுத்தரவைத் தொடர்ந்து வி.எச்.பி அறிவித்திருந்த ஆர்பாட்டங்களும் பிசுபிசுத்துப் போயுள்ளன.

நிகழ்வு 2 : திண்டுக்கல்லைச் சேர்ந்த பிரவீன்குமார் அந்நகர பாஜக-வின் 10-வது வார்டு தலைவர். சில நாட்களுக்கு முன் நள்ளிரவில் இவரது வீட்டில் ’மர்ம ஆசாமிகள்’ பெட்ரோல் குண்டு ஒன்றை வீசுகிறார்கள். ஏற்கனவே மதக் கலவர அபாயத்தில் உள்ள திண்டுக்கல்லில் விநாயகர் சதுர்த்திக்கு சற்று முன்பாக இப்படி ஒன்று குண்டு வெடித்ததை காவல்துறை எதிர்பார்க்கவில்லை. விசாரணையில் இறங்கிய காவல்துறை குற்றவாளியை சுலபத்தில் கண்டு பிடிக்கிறார்கள். குற்றவாளி வேறு யாருமல்ல, பிரவீன்குமாரே தான். பிரபலமாக வேண்டும் என்கிற ஆசையில் தனது வீட்டில் தானே குண்டு வீசியதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்துள்ளார் பிரவீன்குமார். குண்டு வீசப்பட்ட சமயத்தில் வீட்டிலிருந்த பிரவீன்குமாரின் மனைவி நிறைமாத கர்ப்பிணி.
கடந்த ஒரு வார காலத்தில் மட்டும் நடந்த இருவேறு சம்பவங்கள் இவை. படைப்பூக்கத்தோடு விளம்பரங்கள் செய்வதில் பாரதிய ஜனதா கட்சியினர் கைதேர்ந்தவர்கள் என்பதை நாம் அறிந்ததே. அது ஒளிரும் இந்தியாவாக இருக்கட்டும் ‘சோட்டா பீம்’ மோடியாக இருக்கட்டும், நரியைப் பரியாக மட்டுமில்லை டைனோசராகவே பிரச்சாரம் செய்வதில் கில்லாடிகள். காந்தியை சுட்டுக் கொல்லச் செல்லும் முன் நாதுராம் விநாயக் கோட்சே தனது கையில் முசுலீம் பெயரைப் பச்சை குத்திக் கொண்டதில் இருந்து, சீனாவின் பேருந்து நிலையத்தின் புகைப்படத்தை மார்பிங் கூட செய்யாமல் அப்படியே சுட்டுக் கொண்டு வந்து ”இது எங்காளு அகமதாபாதில் கட்டிய பஸ் ஸ்டேண்டாக்கும்” என்று பீத்திக் கொள்வது வரை வெளிப்படும் வாய் கூசாமல் புளுகும் திறமையில் இருந்தே அவர்களின் பிரச்சார உத்தியை நாம் புரிந்து கொள்ள முடியும்.
மோடி
நரவேட்டை மோடியை சீவி சிங்காரித்து உட்கார வைத்திருக்கிறார்கள்.
எதிர்வரும் தேர்தலில் வென்று எப்படியும் ஆட்சியைப் பிடித்தே தீர்வது என்கிற வெறியோடு அலைகிறது இந்துத்துவ பயங்கரவாத கும்பல். இதற்காக பன்னாட்டு முதலாளிகள்,  உள்நாட்டு தரகு முதலாளிகள் மற்றும் உயர் நடுத்தர வர்க்க இந்தியர்களின் கவனத்தைக் கவர நரவேட்டை மோடியை சீவி சிங்காரித்து உட்கார வைத்திருக்கிறார்கள். மோடிக்கு ஆதரவான புளுகு மூட்டைகளை உற்பத்தி செய்யும் பணிக்கு மில்லியன் கணக்கான டாலர்களில் சம்பளம் கொடுத்து அமெரிக்காவைச் சேர்ந்த “விதேசி” நிறுவனம் ஒன்றையும் சமூகவலைத் தளங்களில் கருத்துருவாக்க உள்ளூர் “சுதேசிகள்” சிலரையும் பணிக்கமர்த்தியுள்ளது பாரதிய ஜனதா.
இவை ஒருபக்கமிருக்க சமூகத்தின் கீழ்தட்டில் இருக்கும் பெருவாரியான மக்களை மத அடிப்படையில் பிளவு படுத்தி தொய்ந்து போன நிலையில் இருக்கும் இந்து ஓட்டு வங்கியை மீள் உருவாக்கம் செய்யும் முயற்சிகளுக்கான உதாரணங்கள் தான் மேலே விவரிக்கப்பட்டிருக்கும் இரண்டு நிகழ்வுகள்.
அயோத்தியில் வருடா வருடம் பரிக்ரமா யாத்திரையை ஒழுங்கமைக்கும் கமிட்டித் தலைவராக உள்ள மகந்த் ஞான்தாஸ், இந்த யாத்திரை, மரபுகளின் படி சைத்ர பௌர்ணிமாவுக்கும் பைசாகி நவமிக்கும் இடைப்பட்ட நாட்களில் நடத்தப்படுவது என்றும், இவ்வருடம் ஏற்கனவே திட்டமிட்டிருந்தபடி யாத்திரை நடந்து முடிந்து விட்டது என்றும் அறிவித்துள்ளார். மேலும் இந்துக்களின் ஓட்டுக்களை குறி வைத்து அரசியல் விளையாட்டுக்களில் ஈடுபட வேண்டாம் என்று இந்துத்துவ கும்பலை எச்சரித்துள்ள ஞானதாஸ், இவர்கள் ஏற்கனவே மக்களின் நம்பிக்கையை முற்றிலும் இழந்து விட்ட்தாலேயே இது போன்ற முயற்சிகளில் ஈடுபடுவதாக தெரிவித்துள்ளார். மேலும், இராமர் கோயில் விவகாரத்தில் இதற்கு மேலும் அரசியலாக்க வேண்டாம் என்றும் எச்சரித்துள்ளார்.
அசோக் சிங்கால்
சும்மா வெறும் யாத்திரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் என்று அறிவித்துள்ளார் சிங்கால்.
ஞான்தாஸின் அறிவிப்பைத் தொடர்ந்து “பாடலின் பொருளில் என்ன குற்றம் உள்ளதோ அதற்கான தொகையை பரிசிலில் இருந்து கழித்துக் கொண்டு மிச்சத்தைப் பார்த்து போட்டுக் கொடுக்கும் படி” கேட்டுள்ளார் அசோக் சிங்கால். இது பரிக்ரமா யாத்திரை என்று நாங்கள் சொல்லவில்லை, சும்மா வெறும் யாத்திரை என்று வேண்டுமானால் வைத்துக் கொள்ளுங்களேன் என்று அறிவித்துள்ளார் சிங்கால். மேலும் தாங்கள் அறிவித்த யாத்திரை அரசியல் ரீதியிலானதல்ல என்றும் சாதுக்களால் நடத்தப்படுவதே என்றும் விளக்க முற்பட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள ஞானதாஸ், யாத்திரை திட்டமிடலுக்கான ஆலோசனைக் கூட்டங்களில் உள்ளூர் இந்துத்துவ அரசியல்வாதிகள் கலந்து கொண்டதைச் சுட்டிக்காட்டியுள்ளதோடு, அதற்காக அச்சடிக்கப்பட்ட துண்டறிக்கைகளில் “பரிக்ரமா” யாத்திரை என்றே குறிப்பிடப்பட்டுள்ளது என்பதையும் ஆதாரத்தோடு வெளியிட்டுள்ளார்.
யாத்திரைக்கு முன்பு உத்திரபிரதேசத்தை ஆளும் சமாஜ்வாதி கட்சித் தலைவர்களைச் சந்தித்து அனுமதி கேட்டிருக்கிறார் சிங்கால். அனுமதி மறுக்கப்படும் என்று முளையிலேயே கிள்ளி விடாமல் கடைசி நேரம் வரை காத்திருந்து விட்டு பின்னர் கைது நடவடிக்கைகளில் இறங்கியிருக்கிறது மாநில அரசு. மாநில அரசின் இந்த நடவடிக்கைகளை விமரிசித்துள்ள மாயாவதி, பாரதிய ஜனதாவும் சமாஜ்வாதியும் இரகசிய ஒப்பந்தங்களின் அடிப்படையில் செயல்படுவதாக குற்றம்சாட்டியுள்ளார்.
தடைவிதிக்கப்பட்டதை குறித்து கருத்து தெரிவித்துள்ள அசோக் சிங்கால் தடையானது ”வெற்றி அல்லது வெற்றி” (Its a win-win situation) தருணம் என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது தடை விதிக்கப்படாமல் இருந்திருந்தால் ராமர் கோயிலுக்கான யாத்திரை என்பதை முகாந்திரமாக கொண்டு இந்துக்களை தூண்டி விட்டிருக்கலாம்; தடைவிதிக்கப்பட்டதால் இந்துக்களுக்கு உரிமை இல்லை என்பதைச் சொல்லி தூண்டி விடலாம் என்பதே அவரது பதிலின் பொருள். இதிலிருந்தே இந்துக்களை தூண்டி விட்டு மதக்கலவரங்கள் உண்டாக்குவதே இவர்களின் நோக்கம் என்பதையும் நாம் புரிந்து கொள்ள முடியும்.
தேசிய அளவில் ராமர் கோயில் போன்ற பெரிய கலவரத் திட்டங்களை வைத்திருக்கும் வி.எச்.பி அதை மட்டும் நம்பிக் கொண்டிருக்கவில்லை. உள்ளூர் அளவில் மதக்கலவர அபாயங்களை ஊதிப் பெருக்கி குளிர்காய திட்டமிட்டு வருகிறது. கடந்த ஓரிரு வார காலகட்டத்தில் மட்டும் பீகார் மாநிலம் நாவாடா, ஜம்முவின் கிஸ்த்வார், உத்திரபிரதேசத்தின் முசாபர்நகர் போன்ற பகுதிகளில் சிறிதும் பெரிதுமாக வகுப்புவாத அடிப்படையிலான கலவரங்கள் நடந்துள்ளது. ஹரியானாவில் மாட்டிறைச்சி ஏற்றிச் சென்ற வாகனம் ஒன்று அடித்து நொறுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கட்டப்பஞ்சாயத்து, கந்து வட்டி, கள்ளத் தொடர்பு உள்ளிட்ட சொந்தக் காரணங்களுக்காக  பாரதிய ஜனதாவின் உள்ளூர் தலைவர்கள் கொல்லப்பட்ட சம்பவங்களுக்கு இசுலாமியர்களைப் பொறுப்பாக்கி பிரச்சாரம் செய்யப்பட்டு வருகிறது. திண்டுக்கல் பாரதிய ஜனதா பிரமுகர் பிரவீன் ஆடிய குண்டு வீச்சு நாடகத்தைப் போலவே கோவையைச் சேர்ந்த அனுமன் சேனா பிரமுகர் கடத்தல் நாடகம் ஒன்றை நடத்தி சமீபத்தில் தான் அம்பலமானார்.
சமூகத்தைப் பிளவுபடுத்த துடிக்கும் மதவாத பேரபாயத்தை மக்கள் புரிந்து கொள்வதோடு நச்சுப் பிரச்சாரங்களுக்கு பலியாகாமல் அதை எதிர்த்து முறியடிக்க முன்வர வேண்டும். “நல்லாட்சி” மோடி பிரச்சாரங்களும் – இசுலாமிய வெறுப்புப் பிரச்சாரங்களும் வேறு வேறு அல்ல என்பதைப் புரிந்து கொள்வதோடு இவர்கள் ‘இந்துக்களுக்கே’ எதிரானவர்கள் தான் என்பதையும் நாம் புரிந்து கொள்வது அவசியம். மிகப் பெரிய விலையைக் கொடுத்த பின் அயோத்தி நகர இந்துக்கள் இந்த உண்மைகளைப் புரிந்து கொண்டுள்ளனர். அதனால் நாம் பட்டுத் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை – பார்த்துக் கூட தெரிந்து கொள்ள முடியும்.
- தமிழரசன்.

- Info : vinavu.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza