Wednesday, September 4, 2013

பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அரசு நாட வேண்டும்! – தேசிய தலைவர் கோரிக்கை

இந்தியாவின் தற்பொதைய பொருளாதார வீழ்ச்சியை சரி செய்ய மத்திய அரசு சர்வதேச நாணய நிதியத்தை நாட வேண்டும் என எஸ்.டி.பி.ஐ கட்சியின் தேசிய தலைவர் சையத் தெரிவித்துள்ளார்.
இதுக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது; நாட்டின் பொருளாதார வீழ்ச்சி, டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாறு காணாத அளவில் குறைந்திருப்பது உள்ளிட்டவை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

நாளுக்கு நாள் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு இறங்குமுகமாகவே செல்கிறது. அதலபாதாளத்திலிருக்கும் இந்திய பொருளாதாரத்தை கட்டுக்குள் கொண்டுவருவது என்பது அவ்வளவு எளிதான காரியமல்ல. இது காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை குலைக்கும் என்பதில் சந்தேகமில்லை.
வங்கதேசம், இந்தோனேஷியா போன்ற சிறிய நாடுகள் கூட பொருளாதாரத்தில் முன்னேற்றம் காணும்போது, இந்தியாவுக்கு மட்டும் ஏன் அவ்வாறு ஏற்படவில்லை. காரணம் இங்கு ரிசர்வ் வங்கியும், நிதியமைச்சர் சிதம்பரமும், வரிச்செலுத்தும் இந்திய குடிமக்களுக்கு கணக்கு காண்பிக்காமல் பிரதமருக்கு காண்பித்துக் கொண்டிருக்கிறார். சுருக்கமாக சொல்லப் போனால் வரவு செலவுக் கணக்குகள் சாமான்ய மக்களுக்கு தெரிவிக்கப்படுவதில்லை.
வீழ்ச்சியடைந்திருக்கும் ரூபாயின் மதிப்பை பழைய நிலைக்கு கொண்டுவர, சர்வதேச நாணய நிதியத்தை மத்திய அரசு உடனடியாக நாட வேண்டும்.
பொருளாதார சரிவை சரி செய்ய சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து போதிய தொகையை நிபந்தனையுடன் பெற மத்திய அரசு முயற்சியில் ஈடுபட வேண்டும். இதன் மூலம் இந்த பிரச்னைக்கு தற்காலிக தீர்வினை நாம் எட்ட முடியும்.

தற்போது ஏற்பட்டுள்ள இந்த சரிவிற்கு மிக முக்கிய காரணம், மத்திய அரசின் தவறான பொருளாதார கொள்கைகளே காரணம் ஆகும். எனவே பொருளாதார கொள்கைகளில் மாற்றத்தை கொண்டு வந்தால் மட்டுமே இந்த பிரச்னைகளுக்கு ஒரு நிரந்தர தீர்வினை காண முடியும்.
வாக்காளர்களை கவர்வதற்காக ஆதரவை பெறுவதற்காக ஏற்படுத்தப்பட்ட ஒரு சில திட்டங்கள் பொருளாதாரத்தில் பெரும் இழப்பை பெற்றுத் தந்தது என்பதும் நினைவு கூறத்தக்கது.
மத்திய அரசு எதிர் கட்சிகளிடமிருந்து நாள்தோறும் கண்டனங்களையும், விமர்சனங்களையும் பெற்று வருகிறது. ஆம் ஆத்மி கட்சியும் அதற்கு விதிவிலக்கல்ல.
இந்தநிலையில் சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து நிதியை பெறுவதுதான் ரூபாயின் மதிப்பை அதிகரிக்கச் செய்யும்.
மத்திய நிதியமைச்சராக பிரணாப் முகர்ஜி இருந்தபோதே தவறான பொருளாதார கொள்கைகள் கடைபிடிக்கப்பட்டு வந்தன. அவற்றை சிதம்பரம் மாற்றியமைத்திருக்கலாம். அப்படி அவ்வாறு செய்திருந்தால் தற்போது இந்த அளவுக்கு பொருளாதார சரிவு ஏற்பட்டிருக்காது. ஒருவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பயந்து அவர் இப்படி செய்து விட்டாரா என்றே சந்தேகம் ஏற்பட்டுள்ளது. அதுபோன்றே அந்நிய நேரடி முதலீடும் பொருளாதார சரிவுக்கு காரணமாக அமைந்திருக்கலாம் என்றும் எண்ணத் தோன்றுகிறது.
எனவே இத்தகைய நிலையை கருத்தில் கொண்டு மத்திய அரசு பொருளாதார சரிவை சரிசெய்யும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும். அதன் ஒரு முயற்சியாக சர்வதேச நாணய நிதியத்திடம் நிதி உதவியை பெற முயல வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அந்த அறிக்கையில் அவர் தெரிவித்துள்ளார்.

Info : Sdpitamilnadu.org

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza