இஷ்ரத் போலி என்கவுண்டர் வழக்கில் புலனாய்வுத் துறை (ஐ.பி) சிறப்பு இயக்குநர் ராஜேந்தர் குமார் மீதான விசாரணை தொடர்ந்தால் தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஒத்துழைக்கமாட்டோம் என்று இண்டலிஜன்ஸ் பீரோ மிரட்டல் விடுத்துள்ளது.
ராஜேந்தர் குமாரை கைது செய்தால் எதிர்காலத்தில் தீவிரவாத எதிர்ப்பு செயல்பாடுகளுக்கு பாதிப்பு ஏற்படும் என்று ஐ.பி இயக்குநர் உள்துறை அமைச்சகத்திடம் தெரிவித்துள்ளார்.
ரகசிய புலனாய்வின் அடிப்படையில் போலீஸ் மேற்கொண்ட நடவடிக்கையில் ஐ.பிக்கு பங்கில்லை என்றும், அதற்கு பதிலாக தீவிரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளின் ஐ.பியின் பங்கினை அரசு பாராட்டவேண்டும் எனவும் ஐ.பி இயக்குநர் உள்துறை அமைச்சகத்திற்கு எழுதியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளார்.
பாட்லா ஹவுஸ், அன்ஸல் ப்ளாசா சம்பவங்களைப் போலவே தகவலை மட்டுமே ஐ.பி அளித்துள்ளது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
அதேவேளையில் இஷ்ரத் ஜஹான் உள்ளிட்ட நான்கு அப்பாவிகள் அநியாயமாக போலி என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் அரசியல் ஆதாயங்களை தவிர போலீஸ் அதிகாரிகளின் பதவி உயர்வு விவகாரமும் அடங்கியுள்ளது என்பதை சி.பி.ஐ தாக்கல் செய்யவிருக்கும் துணை குற்றப்பத்திரிகையில் குறிப்பிடப்படும் என கருதப்படுகிறது. அதிகாரிகளின் கிரிமினல் நடவடிக்கைகளுக்கு கொல்லப்பட்டவர்கள் சாட்சியாக இருந்தார்களா? என்பதைக் குறித்தும் விசாரிக்கப்படும் என்று மூத்த சி.பி.ஐ அதிகாரியொருவர் தெரிவித்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்பாக சி.பி.ஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகையில் போலி என்கவுண்டரின் நோக்கத்தைக் குறித்து விவரிக்கவில்லை. டி.ஐ.ஜி வன்ஸாரா உள்ளிட்ட மூன்று பேருக்கு போலி என்கவுண்டர் சம்பவத்திற்கு பிறகு பதவி உயர்வும், பரிசும் கிடைத்துள்ளது. மோடியின் பாராட்டைப் பெற்று பதவி உயர்வைப் பெறுவதும் போலி என்கவுண்டரின் நோக்கமாக இருக்கலாம் என்று சி.பி.ஐ கருதுகிறது.
-New India.tv
0 கருத்துரைகள்:
Post a Comment