சென்னை: பாஜகவின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஷ் (52) சேலத்தில் சில மர்ம நபர்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். ஆடிட்டர் ரமேஷ் கொலை செய்யப்பட்டதற்கு பாஜக சார்பாக இன்று (22.07.2013 ) தமிழகம் முழுவதும் முழு கடை அடைப்பிற்கு பா.ஜ.க அழைப்பு விடுத்துள்ளது. பாஜக சார்பில் நடைபெற்ற இந்த பந்தில் தமிழகம் முழுவதும் பெரும்பான்யான பகுதிகளில் வன்முறை வெடித்தது. பாஜகவின் வன்முறை நடவடிக்கைக்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மாநில தலைவர் A.S.இஸ்மாயில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:
"பாரதிய ஜனதா கட்சியின் மாநில பொதுச்செயலாளர் ஆடிட்டர் ரமேஸ் கொல்லப்பட்டதை தொடர்ந்து பா.ஜ,க பந்த் அறிவித்ததே வன்முறை மற்றும் கலவரத்தை ஏற்படுத்துவதற்காகத்தான் என்பதை அனைவரும் அறிவர். அதை உண்மைப் படுத்தும் வகையில் இன்று தமிழகம் முழுவதும் அரசு பேருந்துகள் கல் வீசி தாக்கப்பட்டு பயணிகள் காயமுற்ற சம்பவங்களும், பல்வேறு தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல்களும் நடந்துள்ளன. குறிப்பாக முஸ்லிம் நிறுவனங்கள் மீது திட்டமிட்ட தாக்குதல்களும் நடந்து வருகின்றன.
கோவையில் இன்று அதிகாலை NGGO காலனி பள்ளிவாசல் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்டது, காரைக்காலில் முஸ்லிம்கள் நடத்தும் தொழில் நிறுவனங்கள் மீதும் அங்கு வேலைசெய்வோர் மீதும் திட்டமிட்ட தாக்குதல்கள் நடந்துள்ளது, திண்டுக்கல் கச்சேரி தெருவில் உள்ள சிங்கப்பூர் பிளாசா அடித்து நொறுக்கப்பட்டது இதற்கு உதாரணங்கள் ஆகும்.
தமிழகத்தில் நடைபெற்று வரும் வன்முறைகளும் அரசியல் படுகொலைகளும் வன்மையாக கண்டிக்க த்தக்கது. நடந்த கொலைக்கு எந்த தடயமும் கிடைக்காத நிலையில் உண்மையான குற்றவாளிகளை கண்டு பிடிக்க தமிழக அரசு சிறப்பு புலனாய்வு துறையை அமைத்துள்ளது, அதனை பொருட்படுத்தாது குறிப்பிட்ட சமூகத்தின் மீது பழியை சுமத்தி வன்முறையை கட்டவிழ்த்து விடுவது சரியான போக்கல்ல. ஆடிட்டர் ரமேஸ் கொல்லப்பட்டதை காரணமாக கொண்டு தமிழகம் மற்றும் பாண்டிச்சேரியில் பந்த் என்ற பெயரில் பா ஜ கவினர் திட்டமிட்ட கலவரங்களில் ஈடுபடுவதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற வன்முறை சம்பவங்களை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா வன்மையாக கண்டிக்கிறது. மேலும் பொதுச்சொத்தை சேதப்படுத்துவோர், அப்பாவி மக்கள் மற்றும் தொழில் நிறுவனங்கள் மீது தாக்குதல்கள் நடத்துவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கவேண்டும் எனவும் தமிழக அரசை பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கிறது" என அவர் தெரிவித்துள்ளார்.
0 கருத்துரைகள்:
Post a Comment