Friday, May 10, 2013

மலேசியா தேர்தலில் முறைகேடு குற்றச்சாட்டு:எதிர்கட்சிகள் நடத்திய பிரம்மாண்ட எதிர்ப்புக் கூட்டம்!



கோலாலம்பூர்: மலேசியாவில் கடந்த வாரம் நடைபெற்ற தேர்தலில் மோசடிகள் நடந்ததாக குற்றம் சாட்டி எதிர்கட்சியினர் நடத்திய கண்டனக் கூட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அன்வர் இப்ராஹீம் தலைமையிலான மக்கள் கூட்டணியால் விடுக்கப்பட்ட இந்த அழைப்பு சட்டவிரோதமானது என்று போலீஸ் விடுத்திருந்த தடையையும் மீறி இந்தப்போராட்டம் நடைபெற்றது.


பிரதமர் நஜீப் ரஸ்ஸாக் தலைமையிலான கூட்டணி மோசடி மூலம் பொதுத் தேர்தலில் வெற்றி பெற்றது என்று எதிர்கட்சியினர் குற்றஞ்சாட்டி இந்தப் போரட்டத்தை நடத்தினர். ஆனால் தோல்வியை ஏற்றுக் கொள்ள மனமில்லாமால் இவ்வகையான போராட்டங்களில் அன்வர் இபராஹிம் ஈடுபடுவதாக ஆளும் தரப்பு கூறுகிறது. கடந்த ஞாயிறன்று நடைபெற்ற பொதுத் தேர்தலில் பிரதமர் தலைமையிலான தேசிய முன்னணி 133 இடங்களிலும், எதிரணி 89 இடங்களிலும் வெற்றி பெற்றன.

மலேசியா சுதந்திரம் அடைந்ததிலிருந்து தேசிய முன்னணியே ஆட்சியில் இருந்து வருகிறது. எனினும் இந்தத் தேர்தலில் இதுவரை இல்லாத வகையில் குறைந்த அளவிலான இடங்களிலேயே அக்கூட்டணி வென்றது. புதன்கிழமை நடைபெற்ற இந்த எதிர்ப்புக் கூட்டத்தில் 50,000 பேர் வரை கலந்து கொண்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

அன்வர் இப்ராஹிம் தலைமையிலான மூன்று கட்சிக் கூட்டணி, வாக்குகள் மீண்டும் எண்ணப்பட வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளன. இத்தேர்தலில் பல்லாயிரக்கணக்கான போலி வாக்காளர்கள் இருந்தனர் என்றும், கையில் வைக்கப்பட்ட அடையாள மையும் எளிதில் அழிக்கும் வகையில் இருந்தது என்றும் எதிர்கட்சிகள் குற்றஞ்சாட்டுகின்றன.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza