இந்தியா முழுவதும் தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய
விரும்பும் சுமார் 1லட்சத்திற்கும் மேற்பட்டோர் பதிவு செய்துள்ள இணையதளத்தை செல்போன்களில் அறிந்து கொள்ளும் வசதியை ராமநாதபுரத்தில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் ஞாயிற்றுக்கிழமை தொடக்கி வைத்தார்.
கடந்த 24.11.2005 அன்று ஆந்திராவைச் சேர்ந்த பொறியாளர் எஸ்.கே. ஷெரீப் (9885039261) என்பவரை நிறுவனராகக் கொண்டும், பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த கணினி தொழில்நுட்ப வல்லுநர்களும் இணைந்துhttp://www.friends2support.org/index.aspx என்ற இணையதளத்தை துவக்கியுள்ளனர்.
தன்னார்வ ரத்த தான கொடையாளர்களுக்காகவே தொடங்கப்பட்ட இந்த இணைய தளம் சுமார் 200 பேர் பதிவு செய்யப்பட்டதுடன் துவக்கப்பட்டது. தற்போது இந்த இணையதளத்தில் இந்தியா முழுவதும் இருந்து சுமார் 1 லட்சதிற்கும் மேற்பட்ட தன்னார்வத்துடன் ரத்த தானம் செய்ய விரும்புவதாக தங்களது பெயர்களைப் பதிவு செய்துள்ளனர்.
கணினி உள்ளவர்களால் மட்டுமே பார்க்க முடிந்த இந்த இணையதளம் இப்போது செல்போன்களிலும் பார்த்து தேவையான ரத்த தான கொடையாளர்களை பயன்படுத்திக் கொள்ளும் வசதி ராமநாதபுரத்தில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டுள்ளது.
மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் மயில்வாகனன் தொடக்கி வைத்து செல்போன்களில் இவ்வசதியை எவ்வாறு பயன்படுத்துவது என விளக்கியதாவது:
ஆண்டிராய்டு, வின்டோஸ், ஆப்பிள், ஜாவா உள்ளிட்ட வசதிகளை உடைய செல்போன்களில் இந்த இணையதளத்தை யாரும் பதிவிறக்கம் செய்து பயன்படுத்திக் கொள்ளலாம்.
இந்த இணையதளம் மூலம் ரத்த தானத்தில் மிகச்சிறந்த சேவை செய்ய முடியும். தமிழகத்தில் ஆண்டுக்கு 10,000 பேர் விபத்துகளால் உயிரிழக்கின்றனர். இதில் பெரும்பாலோருக்கு ரத்தம் தேவைப்பட்டுள்ளது. ரத்தத்தின் தேவை தற்போது அதிகமாக உள்ளது. ஆனால் அதற்கான தேவை குறைந்துள்ளது.
எனவே இன்றைய சூழ்நிலையில் ரத்த தான விழிப்புணர்வு மிக அவசியமாகும் என்றார்.
விழாவிற்கு ஆயிரவைசிய மகாஜன சபைத் தலைவர் அ.வேணுகோபாலன் தலைமை வகித்தார். நகை வியாபாரிகள் சங்க மாநில துணைத் தலைவர் என்.ஏ. வாசுதேவன், நகர் துணைத் தலைவர் பி. ராகவன், ஆயிரவைசிய சமூக நலச் சங்கத் தலைவர் ஆர்.எஸ். கோபி, வர்த்தக சங்கத் தலைவர் பா. ஜெகதீசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ரத்த தான இணையதள தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் ஏ.வி. சதீஷ்குமார் வரவேற்றார். விழாவில் அதிகமுறை ரத்த தான முகாம்களை நடத்திய பேராசிரியர் எஸ். அய்யப்பன், ஆயிரவைசிய சமூக நலச் சங்கத் தலைவர் எஸ்.ஆர். கோபி ஆகியோருக்கு நினைவுப் பரிசுகளை மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வழங்கினார்.
விழாவில் ராமநாதபுரம் டி.எஸ்.பி. முரளீதரன், இதய நோய் மருத்துவர் ஜவஹர்பாரூக், அரிமா சங்கத் தலைவர் சண்முக சுந்தரம், நிர்வாகி அபர்ணா. வெங்கடாஜலம் ஆகியோர் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
-keelakaraitimes
0 கருத்துரைகள்:
Post a Comment