Monday, March 11, 2013

கர்நாடகாவில் நீதியின் புதிய சூரியன் உதித்ததாக யாரும் கருதவேண்டாம்!- மகளின் திருமண உரையில் அப்துல் நாஸர் மஃதனி!

Abdul nasser ma'dani-madani-kerala-daughter-marriage
கொல்லம்:ஐந்து தினங்கள் ஜாமீன் கிடைத்ததன் மூலம் கர்நாடகா அரசிடமிருந்து நீதியின் புதிய சூரிய உதயம் உருவானதாக நான் நம்பவில்லை என்று பி.டி.பி தலைவர் அப்துல் நாஸர் மஃதனி கூறினார். இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு முதல் முறையாக மக்கள் மத்தியில் உரையாற்றினார் அவர்.
மகள் ஷமீராவின் திருமணத்தில் கலந்துகொண்டு உரையாற்றினார் அப்துல் நாஸர் மஃதனி. அப்பொழுது அவர் தனது உரையில் கூறியது:
அரசுகளிடமிருந்து கிடைக்கும் சித்திரவதைகளால் நான் நிராசையடையவில்லை. சில கடுமையான வார்த்தைகளை பிரயோகித்ததால் என்னை சிறையில் அடைத்தார்கள். ஆனால், ஒரு தவறும் செய்யாத மலப்புறத்தைச் சார்ந்த ஸக்கரியா என்ற பதினைந்து வயது சிறுவன் உள்பட ஏராளமானோர் இந்தியாவின் பல்வேறு சிறைச்சாலைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இவ்வழக்கு தொடர்பாக முன்பு இரண்டு பேருக்கு நீதிமன்றம் நான்கு தினங்கள் ஜாமீன் வழங்கியதால் நிர்பந்தமான சூழலில் எனக்கு ஜாமீன் கிடைத்தது. பொது சமூகத்தின் தலையீடு ஜாமீன் கிடைக்க காரணமானது.
பெங்களூரில் சந்திக்கும் நீதி மறுப்பு கோயம்புத்தூரை விட பயங்கரமானது. முந்தைய காலங்களில் எனது உரை பாணியில் சில தவறுகள் ஏற்பட்டுள்ளன. இந்த தவறுக்காக சங்குமுகம் கடற்கரையில் நடந்த மாநாட்டில் கேரள சமூகத்திடம் நான் மன்னிப்புக் கோரியுள்ளேன். அதற்கு பிறகும் எனக்கு எதிரான அரசின் நிலைபாடு மாறவில்லை என்பது வேதனையானது. நான் ஒரு உரையை நிகழ்த்தும் சூழலில் இல்லை. கேரள சமூகம் என்னோடு உள்ளது என்பது எனக்கு பலம் தந்துள்ளது.
வலது கண்ணின் பார்வை முற்றிலும் இழந்துவிட்டது. இடது கண்ணின் பார்வை 60 சதவீதம் இழக்கப்பட்டுள்ளது. ஆனால், நான் சித்திரவதைகளால் நிராசையடையவில்லை. இறைவன் அளிக்கும் சோதனைகள் என்னை திடப்படுத்துவதற்கான வாய்ப்பாக கருதுகிறேன். இவ்வாறு அப்துல் நாஸர் மஃதனி கூறினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்பொழுது தொண்டர்கள் உணர்ச்சி மிகுந்து காணப்பட்டனர். அப்பொழுது மஃதனி, உணர்வுகள் எல்லை மீறினால் தான் மீண்டும் வருவது தாமதமாகும் என்று அறிவுறுத்தினார்.
மஃதனி உரை நிகழ்த்தும்போது கர்நாடக போலீஸ் பல முறை கட்டுப்படுத்த முயன்றது. அவர் தனது உரையில் கட்சி பேதமின்றி தனது ஜாமீனுக்காக பாடுபட்ட முதல்வர் உம்மன் சாண்டி, எதிர்கட்சி தலைவர் வி.எஸ்.அச்சுதானந்தன், பிணராய் விஜயன், இ.டி.முஹம்மது பஷீர் உள்ளிட்ட அனைவரது பெயரையும் எடுத்துக் கூறி நன்றி தெரிவித்து தனது உரையை முடித்தார்.
இருபது நிமிடங்கள் அவர் உரை நிகழ்த்தினார்.
-thoothu online.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza