புதுடெல்லி:திரைப்படங்களை தயாரிக்கும்பொழுது பன்முக சமூகம் என்ற நிலையில் மத, இன உணர்வுகளை திரைப்பட தயாரிப்பாளர்கள் மதிக்கவேண்டும் என்று பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் மத்திய செயலகம் கோரிக்கை விடுத்துள்ளது.
சாதி ஓரவஞ்சனை, மத வெறுப்புணர்வுகளை தூண்டும் விதத்தில் தொடர்ச்சியாக தயாரிக்கப்படும் திரைப்படங்கள் பொதுமக்களிடையே எதிர்ப்புகளை கிளப்பியுள்ளது. தீவிரவாதத்திற்கு எதிரான போர் என்ற பெயரில் அமெரிக்காவும், கூட்டணி நாடுகளும் நடத்தும் ஆக்கிரமிப்பையும், கூட்டுப் படுகொலைகளையும் நியாயப்படுத்த இந்திய திரைப்படத் துறையிலும் ஆட்கள் தயாராக உள்ளார்கள்.
பாலிவுட்டிலும், மாலிவுட்டிலும் அண்மையில் வெளியான சில திரைப்படங்கள் அமெரிக்காவின் கருத்தை நியாயப்படுத்தி, முஸ்லிம்களை நிரந்தர வில்லன்களாக சித்தரித்தும் வருகின்றன. இஸ்லாத்தின் புனித ஆதாரங்களும், வணக்க வழிபாடுகளும் தீவிரவாதத்தை தூண்டுவதாக சித்தரிக்கப்படுகின்றன. இத்தகைய திரைப்படங்களுக்கு எதிர்ப்பு தெரிவிக்க தொடர்புடைய சமுதாயத்திற்கு உரிமை உண்டு. எதிர்ப்புகளை அபாயமாக சித்தரிப்பது சரியல்ல. ஆனால், எதிர்ப்புகள் முற்றிலும் ஜனநாயக, சட்டரீதியான முறைகளில் அமையவேண்டும்.
பாபரி மஸ்ஜித் இடிக்கப்பட்ட இடத்தை சுற்றியுள்ள 67 ஏக்கர் நிலத்தில் பழைய நிலையை(status quo) தொடர உச்சநீதிமன்றம் அளித்த உத்தரவை பாப்புலர் ஃப்ரண்ட் மத்திய செயலகம் வரவேற்றுள்ளது. ஆனால், சட்டவிரோதமாக கட்டப்பட்ட கோயிலின் தார்பாள் ஷீட்டுகளையும், கயிறுகளையும் மாற்ற அனுமதி அளித்தது குறித்து மத்திய செயலகம் கவலை தெரிவித்துள்ளது.
பிப்ரவரி 17-ஆம் தேதி பாப்புலர் ஃப்ரண்ட் தினம் கடைப்பிடிக்கப்படும். அன்றைய தினம் யூனிட்டி மார்ச் என்ற பெயரில் பேரணியும், பொதுக்கூட்டங்களும் நடத்தப்படும். தேசிய தலைவர் கே.எம்.ஷெரீஃப் தலைமையில் நடந்த மத்திய செயலக கூட்டத்தில் பொதுச் செயலாளர் ஒ.எம்.அப்துல் ஸலாம், இல்யாஸ் அஹ்மத், முஹம்மது அலி ஜின்னா, இ.எம்.அப்துல் ரஹ்மான் ஆகியோர் கலந்துகொண்டனர்
0 கருத்துரைகள்:
Post a Comment