முஸ்லிம்களின் உணர்வுகளை அரசியல் கட்சிகளும் , சினிமாத்துறையினரும் நடுநிலையோடு சீர்தூக்கிப்பார்க்கவேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள் விடுத்துள்ளது. இது குறித்து பாப்புலர் ஃப்ரண்டின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் ஹாலித் முஹம்மது நேற்று விடுத்துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:
கமல்ஹாசனின் ‘விஸ்வரூபம்’ திரைப்படத்திற்கு முஸ்லிம்களின் எதிர்ப்பு காரணமாக தமிழக அரசு விதித்துள்ள தடை குறித்து பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும், திரைப்படத்துறையினரும் சமூக ஆர்வலர்களும் பலகருத்துக்களை வெளியிட்டனர். பல கருத்துக்கள் ஆதரவாகவும், சில கருத்துக்கள் எதிராகவும் வெளியிட்டனர்.
திரைப்படத்துறையில் கமல்ஹாசன் அவர்கள் பல்வேறு புதுமைகளையும், முற்போக்கு சிந்தனைகளையும் ஏற்படுத்திவரும் நிலையில், விஸ்வரூபம் போன்ற மத உணர்வுகளை புண்படுத்தும் திரைப்படம் தடைகளையும் பின்னடைவையும் ஏற்படுத்தும் என்பதை தெரிவிக்கின்றோம்.
முஸ்லிம் தலைவர்களோ, இஸ்லாமிய சமுதாயமோ, கமல்ஹாசனை எதிராக பார்க்கவில்லை. ஆனால், அவருடைய விஸ்வரூபம் திரைப்படத்தின் கதைக்கரு ஏற்றுக்கொள்ளக்கூடிய விதத்தில் இல்லை. உலகத் திருமறையாம் திருக்குர்ஆனையும், இஸ்லாமிய வழிபாட்டு முறைகளையும் தீவிரவாதத்தை ஊக்குவிக்கும் மூலம் என்பதாக திரைப்படத்தில் காட்டப்படுகிறது.
இத்திரைப்படம் முஸ்லிம் சமூகத்தைப் பற்றிய ஒரு தவறான சித்திரத்தை சித்தாந்தத்தை பொது சமூகத்தில் உருவாக்கும். இதுபோன்ற படங்கள் வருங்காலத்தில் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்தும்.
சமூக தளத்தில் தனிநபர் நஷ்டத்தைப்பற்றி சிந்திப்பவர்கள், கோடிக்கணக்கான முஸ்லிம்கள் இதுவரை சந்தித்துள்ள, இனி சந்திக்கவுள்ள நஷ்டங்களையும் சிந்தித்து, சீர்தூக்கிப் பார்த்து அறிக்கை வெளியிடுவது நல்லது. பணத்தை சம்பாதித்து விடலாம். ஆனால், திரைப்படத்தின் மூலம் மக்கள் உள்ளங்களில் பதியவைத்துள்ள கருத்துக்களை அழித்துவிட முடியாது.
இத்திரைப்படத்தை அவர் உள்நோக்கத்துடன் எடுத்திருக்க வாய்ப்பில்லை. ஆனால், புதுமைகளை விரும்பும் அவரை அமெரிக்கா தவறாக பயன்படுத்திக் கொண்டது. உள்நோக்கம் இல்லை என்பதற்காக இதனை நாம் அனுமதிக்க முடியாது. ஏனென்றால், விஸ்வரூபம் ஏற்படுத்தும் விளைவுகள் பாரதூரமானவை.
“சிவப்பு சித்தாந்தம் பேசும் தோழர்கள்”, அமெரிக்காவை நியாயம் கற்பிக்கும் இத்திரைப்படத்தை ஆதரிப்பது ஏன் என்று தெரியவில்லை. கட்சிகளும், திரைப்படத்துறையினரும் சமூக தளத்தின் பொறுப்பை உணர்ந்து மத உணர்வை புரிந்து நடுநிலையோடு பார்க்க வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக் கொள்கின்றது.
0 கருத்துரைகள்:
Post a Comment