இந்திய-பாகிஸ்தான் எல்லையிலுள்ள பூஞ்ச் பகுதியில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த இந்திய வீரர்களைத் தாக்கிவிட்டு, அதில் ஒரு ராணுவ வீரரின் தலையையும் கொய்து சென்றதாக பாகிஸ்தான் மீது குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதற்கும் பாகிஸ்தான் ராணுவத்துக்கும் சம்பந்தமில்லை என்றும் இதை அனேகமாக, தீவிரவாதிகளே செய்திருக்கக்கூடும் என்றும் பாகிஸ்தான் கூப்பாடு போட்டதை உலகநாடுகள் கண்டு கொள்ளவில்லை. இந்நிலையில் தனது நாட்டு ராணுவ வீரரையும் இந்திய ராணுவம் அத்தகைய முறையில் கொன்றிருப்பதாக பாகிஸ்தான் புதுக்கரடியை உலவ விட்டுள்ளது.
இந்திய பாகிஸ்தான் எல்லைகளில் ஊடுருவலும் பரஸ்பரம் தாக்குதல்களும் கடந்த 50 ஆண்டுகளாக நடந்து வந்த போதிலும் பாகிஸ்தான் பகுதியிலிருந்தே இந்திய எல்லைக்குள் ஊடுருவல்களும் அத்துமீறல்களும் நடப்பதால் எல்லை தாண்டிய தீவிரவாதம் என்று சொல்லப்படுகிறது.
பாகிஸ்தானின் சமீபத்திய எல்லை தாண்டிய தீவிரவாதம் குறித்து தமது பங்குக்கு இந்து முன்னணி நிறுவனர் ராம.கோபாலனும் கண்டன அறிக்கையில் "பாகிஸ்தானின் அட்டூழியம் அதிகரிக்க காங்கிரஸின் அலட்சியமே காரணம். பாகிஸ்தான் தோன்றிய நாளிலிருந்து அன்றாடம் தொல்லை கொடுத்துக் கொண்டிருக்கிறது.
காங்கிரஸ் கட்சி இந்தியாவில் சிறுபான்மை ஓட்டுகளை அள்ளுவதற்காக பாகிஸ்தானின் அட்டூழியங்களைக் கண்டு கொள்ளாமல் இருந்து வந்துள்ளது. இதனால் துணிச்சல் பெற்ற பாகிஸ்தான் அரசு அடாவடிச் செயல்களைத் தொடர்ந்து செய்து வருகிறது. இதன் உச்சகட்டமாகவே ராணுவ வீரரின் தலையைத் துண்டித்துள்ளது. பா.ஜ.க. தவிர வேறு எவரும் இதனால் ஆத்திரமோ, ஆவேசமோ அடைந்ததாகத் தெரியவில்லை. ஐ.நா நெறிமுறைப்படி பாகிஸ்தானின் செயல் காட்டுமிராண்டித் தனமானது. இதைக் கண்டிக்கக் காவல்துறையிடம் அனுமதி கேட்டால் மறுக்கப்படுகிறது" என்று புலம்பியுள்ளார்.
எல்லை தாண்டும் தீவிரவாத நடவடிக்கைகளை வடகிழக்குப் பகுதில் சீனாவும் தெற்குப் பகுதியில் இலங்கையும் அவ்வப்போது செய்து வந்த போதிலும் பாஜக மற்றும் சங்பரிவாரத்தினர் இந்தோ-பாக் எல்லையில் நடக்கும் தீவிரவாத நடவடிக்கைகளை மட்டுமே பெரிதுபடுத்தி அரசியல் லாபம் காண்பது நடுநிலையாளர்களுக்கு எரிச்சலாக உள்ளது. இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் காங்கிரஸே அதிகமும் ஆட்சிப் பொறுப்பில் இருந்து வந்த போதிலும் பாஜக உள்ளிட்ட கட்சிகளும் மாறி மாறி ஆட்சியில் இருந்துள்ளன. அப்போதும் எல்லை தாண்டிய தீவிரவாத நடவடிக்கைகள் இருந்ததைக் கண்டிக்காமல் காங்கிரஸை மட்டும் குறை கூறுவது உள்நோக்கமுள்ளது.
பாகிஸ்தான் எல்லையில் நடந்த அத்துமீறலுக்கு நீலிக்கண்ணீர் வடிக்கும் ராம.கோபாலன், இலங்கை கடற்படையினர் நாளாந்தம் தமிழக மீனவர்கள் மீது நடத்தும் அத்துமீறல்கள் குறித்து வாய் திறந்துள்ளாரா? அதுபோல் கேரளக் கடற்பகுதியில், இத்தாலிய கப்பல் மாலுமிகள் இந்திய மீனவர்கள் இருவரைச் சுட்டுக் கொன்ற போது இராம.கோபாலன் கண்டித்தாரா என்று தெரியாது.
சீனா, இலங்கை நாடுகளின் எல்லை மீறல்களைக் கண்டு கொள்ளாமல் பாகிஸ்தான் எல்லை மீறுவதற்காகவே காத்திருந்தது போல் ஓடி வந்து கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி கேட்பதால் ராம.கோபாலனுக்கும் "செலக்டிவ் அம்னீஸியா" என்று யாரும் சொல்லாமல் இருக்க வேண்டும் என்பதால் அனைத்து நாடுகளின் எல்லை தாண்டிய தீவிரவாதங்களையும் கண்டிக்கணுங்கறேன். என்னா நாஞ்சொல்றது?
- பஞ்ச் கல்யாணி
source: inneram.com
0 கருத்துரைகள்:
Post a Comment