Tuesday, January 1, 2013

திரையுலகின் முஸ்லிம் விரோத சிந்தனை மாற வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!


பத்திரிகை செய்தி

திரையுலகின் முஸ்லிம் விரோத சிந்தனை மாற வேண்டும்! பாப்புலர் ஃப்ரண்ட் வேண்டுகோள்!

தமிழ்த்திரையுலகம் நூற்றாண்டு விழாவை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றது. இது மகிழ்ச்சியான செய்தியாக இருந்தாலும் இந்த நெடும் பயணத்தில் இவர்கள் சாதித்தது என்ன என்று திரும்பிப்பார்த்தால் விஞ்சுவது ஏமாற்றமும் வேதனையும் மட்டுமே.

சமூக மாற்றத்தில் மிகப்பெரிய பங்காற்றி இருக்க வேண்டிய இத்துறை இக்காலகட்டத்தில் சமூகங்களுக்கு மத்தியில் வெறுப்பையும், குரோதத்தையும் வளர்க்கும் பணியை கனகச்சிதமாக செய்ததுடன் இப்போது அடுத்த பரிணாமத்தை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றதோ என்ற ஐயம் அழுத்தமாக ஏற்பட்டுள்ளது. இந்தியாவின் சிறுபான்மை சமூகமான முஸ்லிம் சமூகத்தை படம் பிடித்து காட்டிய பழைய படங்கள் அவர்களை கொடுமையான கந்துவட்டிக்காரர்களாகவும், கசாப்புக்கடைக்காரர்கள் கடத்தல் பேர்வழிகள், என்ற பிம்பத்தை காட்டிவந்தது.


அது அப்படியே வளர்ச்சி அடைந்து தேசதுரோகிகள், பயங்கரவாதிகள் என்று காட்டினார்கள். இறுதியாக சமீபத்தில் வெளிவந்த திரைப்படமான ‘துப்பாக்கி’ ஒவ்வொரு முஸ்லிமும் சந்தேகத்திற்குரியவன் என்ற இறுதி தாக்குதலை முஸ்லிம் சமூகத்தின் மீது தொடுத்தது.

இதில் வேதனையான விஷயம் என்ன வெனில், 1990க்குப் பிறகு இந்தியாவில் நடந்த பெரும்பாலான குண்டுவெடிப்புகளுக்கு பின்னணியில் இருப்பவர்கள் முஸ்லிம்கள் அல்ல. மாறாக, அவர்கள் அப்பாவிகள் என்று தீர்ப்புகள் வெளிவந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பாகவே பல படங்கள் தங்களால் முடிந்த அளவு முஸ்லிம்கள் மீது வெறுப்பை உமிழ்ந்து விட்டன.

இந்த வரிசையில் இப்போது ஒரு திரைப்படம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. ஏற்கனவே ‘ஹேராம்’, ‘உன்னைப் போல் ஒருவன்’ போன்ற திரைப்படங்களில் நேரடியாகவும் முறைமுகமாகவும் முஸ்லிம்கள் மீது வெறுப்பையும், குரோதத்தையும் உமிழ்ந்த நடிகர் கமல்ஹாசன் இப்போது எடுத்து இன்னும் திரைக்கு வராத ‘விஸ்வரூபம்’ என்ற திரைப்படம் முஸ்லிம்கள் குறித்து மிகவும் மோசமான செய்திகளை தாங்கிவருவதாக சொல்லப்படுகின்றது.

படம் திரைக்கு வரும் முன் அதனைப்பற்றி விமர்சனம் செய்வது நல்ல நடைமுறையல்ல என்றாலும் இதற்கு முன் உள்ள அனுபவங்கள் மற்றும் சமீபகாலமாக சந்தேகத்திற்கிடமான வகையில் அவர் மேற்கொண்டு வரும் நடவடிக்கைகள், பேட்டிகள் முஸ்லிம் சமூகத்தில் பெரியதொரு கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றது.

துப்பாக்கி திரைப்படத்தில் நீதியை கடைப்பிடித்து முஸ்லிம்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்த தமிழக அரசு இந்த திரைப்பட விவகாரத்திலும் தலையிட வேண்டும். நடுநிலையான ஒரு குழுவை அமைத்து படத்தை பார்வையிட்டு முஸ்லிம் விரோத சிந்தனை இருப்பின் அதனை நீக்க வேண்டும். முஸ்லிம் சமூகத்தின் ஐயங்கள் போக்கப்பட வேண்டும். அதே போன்று முஸ்லிம் விரோத, சமூகத்தில் பிளவை உருவாக்கும் படங்களை தணிக்கை குழு எவ்வாறு அனுமதிக்கின்றது என்ற விசாரணையும் மேற்கொள்ளப்பட வேண்டும். என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

மேலும், முஸ்லிம்கள் அப்பாவிகள் அவர்களை விட்டுவிடுங்கள் என்று உச்சநீதிமன்றமே கவலை கொள்ளும் அளவில் உள்ள முஸ்லிம்களின் வாழ்க்கையை மேலும் கொச்சைப்படுத்தும் போக்கினை திரையுலகம் கைவிட வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் கேட்டுக் கொள்கின்றது.

இது தொடரும் பட்சத்தில் முஸ்லிம் சமூகம் ஓரணியில் திரண்டு சட்டரீதியான, ஜனநாயகரீதியான போராட்டங்களுக்கு தயாராக வேண்டும் என பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேட்டுக்கொள்கின்றது.

இப்படிக்கு
முஹம்மது ஷேக் அன்சாரி
மக்கள் தொடர்பு அலுவலர்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா
தமிழ்நாடு
தேதி : 31.12.201

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza