கெய்ரோ:மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் அங்கீகரிக்கப்பட்ட புதிய அரசியல் சாசனத்தில் எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸி கையெழுத்திட்டார். தேசம் சந்திக்கும் அரசியல் நெருக்கடிக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படும் என அறிவித்த முர்ஸி, எகிப்தின் பொருளாதார கட்டமைப்பை மேம்படுத்துவதில் இனி கவனம் செலுத்தப்போவதாக தெரிவித்தார்.
கடுமையான செலவுகளை குறைக்கும் நடவடிக்கையை விரைவில் அறிவிக்கப்படும் என்று அவர் சூசகமாக தெரிவித்தார். 2 கட்டங்களாக நடந்த மக்கள் விருப்ப வாக்கெடுப்பில் 63.8 சதவீத வாக்காளர்கள் அரசியல் சாசனத்தை ஆதரித்து வாக்களித்ததாக தலைமை தேர்தல் ஆணையம் அறிவித்தது. 2 மாதத்திற்குள் பாராளுமன்ற தேர்தல் நடைபெறும்.
புதிய அரசியல் சாசனத்தின் கீழ் பாராளுமன்றத்தின் துணை அவையான ஷூரா கவுன்சில் நேற்று கூடியது. தேர்தல் நடக்கும் வரை ஷூரா கவுன்சிலுக்கு சட்டமியற்றும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது. அதே வேளையில், அரசியல் சாசனத்திற்கு எதிரான போராட்டத்தில் இருந்து எதிர்கட்சியினர் வாபஸ் பெற்றுள்ளனர்.
செலவு சுருக்கும் நடவடிக்கைகளை அறிவிப்பதற்கு முன்னோடியாக தொழிலதிபர்கள், தொழிலாளர் யூனியன்கள், அரசு சாரா அமைப்புகள் ஆகியோருடன் அரசு நேற்று பேச்சுவார்த்தை நடத்தியது. நாணய கட்டுப்பாடு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 10 ஆயிரம் டாலருக்கு அதிகமாக நாட்டை விட்டு வெளியேறவோ, நாட்டிற்கு உள்ளேயோ வர அனுமதி கிடையாது.
அனைத்து பிரிவு மக்களும் ஒன்றிணைந்து நாட்டை முன்னேற்றத்தின் பாதையில் அழைத்து செல்ல வேண்டும் என்று இஃவான் முஸ்லிமீன் தலைவர் முஹம்மது பதாஇ கோரிக்கை விடுத்துள்ளார்
0 கருத்துரைகள்:
Post a Comment