எகிப்து அதிபர் முஹம்மது முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க எதிர்கட்சி தலைவர்கள் தங்களது கட்சி தொண்டர்களுக்கு ஊக்கமளித்தது தொடர்பாக விசாரணை நடத்த எகிப்தின் முதன்மை வழக்குரைஞர் உத்தரவிட்டுள்ளார். எதிர்கட்சி தலைவர்களான முஹம்மது அல் பராதி, முன்னாள் அரபுலீக் பொது செயலாளர் அம்ர் மூஸா, ஹம்தீன் ஸபாஹி ஆகியோருக்கு எதிராக விசாரணை நடைபெறும்.
அம்ர் மூஸாவும், ஸபாஹியும் அதிபர் தேர்தலில் முர்ஸியை எதிர்த்து போட்டியிட்டவர்கள் ஆவர். எதிர்கட்சி தலைவர்கள் அப்பாவி மக்களை அதிபர் முர்ஸியின் ஆட்சியை கவிழ்க்க ஊக்கமூட்டினர் என்று இஃவானுல் முஸ்லிமீனின் இணையதளம் குற்றம் சாட்டுகிறது. இதன் மூலம் எதிர்கட்சி தலைவர்கள் தேசத்துரோக குற்றம் புரிந்ததாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மக்கள் விருப்ப வாக்கெடுப்பின் மூலம் அங்கீகரிக்கப்பட்ட நாட்டின் அரசியல் சாசனம் தொடர்பாக எதிர்கட்சியினருடனான சச்சரவுகளை தீர்க்க அதிபர் முர்ஸி பேச்சுவார்த்தைக்கு அழைப்பு விடுத்திருந்தார். இந்நிலையில் இக்குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளது.
இம்மாத துவக்கத்தில் இரண்டு வழக்கறிஞர்கள் எதிர்கட்சி தலைவர்கள் மீது குற்றச்சாட்டை பதிவு செய்தனர். அதே வேளையில், இந்த விசாரணை ஹுஸ்னி முபாரக் ஆட்சி காலத்தின் ஏகாதிபத்தியத்தை நோக்கி திரும்புவதாகும் என்று எதிர்கட்சிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment