காஸியாபாத்(உ.பி):முஸ்லிம்களின் புனித வேதமான திருக்குர்ஆனின் பிரதிகளை கிழித்தெறிந்து அதில் முஸ்லிம்கள் வெறுக்கும் பன்றியின் பெயரை எழுதி இழிவுப்படுத்திய சம்பவத்தில் காவல் நிலையத்தை முற்றுகையிட்ட முஸ்லிம்களை கொல்வதற்காக காத்திருந்ததைப் போல துப்பாக்கிச்சூடு நடத்த போலீஸ் அவசரம் காட்டியதாக குற்றச் சாட்டு எழுந்துள்ளது.
போராட்டம் நடத்தியோர் மீது லத்திசார்ஜ், கண்ணீர் புகை வீச்சு, துப்பாக்கிச்சூடுக் குறித்த முன்னறிவிப்பு எதுவுமின்றி அவசர அவசரமாக துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளது. சம்பவ இடத்திற்கு பார்வையிடச் சென்ற ஜம்மியத்துல் உலமாயே ஹிந்த்(அர்ஷத் மதனி பிரிவு) தலைவர்களிடம் உள்ளூர் மக்கள் இதனை தெரிவித்துள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை(செப்.14) மாலை காஸியாபாத் மாவட்டத்தில் உள்ள ஆதித்யாமிக் நகரில் புனித திருக்குர்ஆனின் பக்கங்கள் கிழித்தெறியப்பட்டு வழியில் கண்டெடுக்கப்பட்டதோடு முஸ்லிம்கள் காவல் நிலையம் முன்பாக நடவடிக்கை எடுக்கக்கோரி திரண்டனர். இந்நிலையில்தான் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டவர்கள் மீது எவ்வித முன்னெச்சரிக்கை எதுவும் இன்றி போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியுள்ளது. இதில் சிறுவர்கள் உள்பட 6 பேர் பலியாகினர்.
துப்பாக்கிச்சூடு நடந்த மசூரி நகரத்தில் ஜம்மியத் தலைவர்கள் சம்பவ இடத்தில் முகாமிட்டுள்ள போலீஸ் அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். துப்பாக்கிச்சூட்டில் பங்கேற்ற போலீஸ் அதிகாரிகள் மீது வழக்குப்பதிவுச் செய்யவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கொந்தளித்த மக்களிடமிருந்து தங்களது உயிரை காப்பாற்றவே முன்னெச்சரிக்கை எதுவுமின்றி துப்பாக்கிச்சூடு நடத்தியதாக போலீஸ் டி.ஐ.ஜி கூறுகிறார். ஆனால், போலீஸின் கூற்று பொய் என்பதை உள்ளூர் மக்களின் வாக்குமூலத்தில் இருந்து தெரியவந்துள்ளது. மாலை 4 மணியளவில் உள்ளுர் தலைவர் ஒருவரின் தலைமையில் காவல்நிலையம் நோக்கி ஊர்வலமாக முஸ்லிம்கள் சென்றுள்ளனர். ஆனால், போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்தியதோ இரவு 9 மணி அளவில் ஆகும். மக்கள் கொந்தளித்திருந்தால் கூடுதல் போலீசாரை அழைக்க இவ்வளவு கால அவகாசமே போதுமானது. போலீஸ் துப்பாக்கிச்சூடு நடத்த அவசரம் காட்டியதாக ஜம்மியத் தலைவர்கள் குற்றம் சாட்டினர். அருகில் உள்ள கட்டிடத்தின் மீது நின்றுக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் பரிதாபகரமாக பலியாகியுள்ளான். அதிகாரப்பூர்வமற்ற தகவலின் படி 12 பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது. போலீஸ் விவேகமில்லாமல் துப்பாக்கியால் சுட்டதாக உள்ளூர் மக்கள் கூறுகின்றார்கள்.
இதனிடையே, சம்பவத்தை தொடர்ந்து ஒரு சில போலீஸ் அதிகாரிகள் மீது முதல்வர் அகிலேஷ் யாதவ் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். மசூரி போலீஸ் ஸ்டேஷன் சப் இன்ஸ்பெக்டர் உள்ளிட்ட சிலர் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு உத்தரவு நிலவுவதால் நேற்றும் கடைகள் மூடிக் கிடந்தன.
0 கருத்துரைகள்:
Post a Comment