Monday, September 24, 2012

பார்வையற்றோருக்கு வரப்பிரசாதம் : செயற்கை கண்கள் கண்டுபிடிப்பு!


கண் பார்வை  வாழ்க்கைக்கான ஒளி போன்றது. பார்வையின்மையால் பாதிக்கப்பட்டோரின் எதிர்காலம் இருண்டு போகும் என்பது நிதர்சனம். விபத்துகளில் கை, கால் இழந்தவர்களுக்கு செயற்கை கை, கால்களை கொடுத்துள்ள நவீன மருத்துவ தொழில் நுட்பங்கள் இன்னும் கண் பார்வை இல்லாதவர்களுக்கு செயற்கை கண்களை கொடுக்கவில்லை.
 
இந்த குறையை நிவர்த்தி செய்ய ஒரு செயற்கை கண் கருவியை கண்டுபிடித்திருக்கிறார் அமெரிக்காவின் கார்னெல் பல்கலைக்கழகத்தின் வெய்ஸ் மருத்துவ கல்லூரியின் நரம்பியல் விஞ்ஞானியும் பேராசிரியருமான ஷீலா நீரென்பெர்க். பிம்பங்களை கவர்ந்து கிரகிக்கும் என்கோடர் மற்றும் பிம்பத்தின் தகவல்களை மூளைக்கு எடுத்துச்செல்லும் `ட்ரான்ஸ்டி `சர்' என இரு பகுதிகளை கொண்டது.
 
பின்னர் அவை ரசாயன சமிக்ஞைகளாக மூளைக்கு எடுத்துச்செல்லப்பட்டு மூளையிலுள்ள காங்க்ளியான் உயிரணுக்கள் மூலம் புரிந்துகொள்ளப்படும். இது கண் பார்வைக்கு தேவையான அடிப்படை உயிரியல் நிகழ்வுகள். ஆனால் கண் பார்வை இல்லாதவர்களின் விழித்திரைகள் சேதமடைந்திருக்கும். இதனால் பிம்பங்களின் தகவல்கள் சேகரிக்கப்படுவதும் அவை மூளைக்கு எடுத்துச்செல்லப்படுவதும் தடைபடுகிறது.
 
இந்த ஒரு உயிரியல் நிகழ்வுகளையும் மேற்கொள்ளும் வண்ணம் ஷீலா நீரென்பெர்க்கின் செயற்கை கருவி உருவாக்கப்பட்டுள்ளது. விழித்திரையின் போட்டோ ரிசெப்டர் உயிரணுக்களின் வேலையை என்கோடர் கருவியும் சேகரிக்கப்பட்ட தகவல்களை மூளையின் காங்க்களியான் உயிரணுக்களுக்கு எடுத்துச்செல்லும் வேலையை ட்ரான்ஸ்டி சரும் செய்கின்றன. இந்த செயற்கை கண் கருவியை கொண்டு முதற்கட்ட பரிசோதனை எலிகளின் மீது மேற்கொள்ளப்பட்டது.
 
இந்த பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட எலிகளால் ஒரு குழந்தையின் முகத்தை தெளிவாக பார்க்க முடிந்தது குறிப்பிடத்தக்கது. ஆனால் முந்தைய செயற்கை கண் கருவிகளால் பிரகாசமான வெளிச்சம் மற்றும் கோடுகளை மட்டுமே பார்க்க முடிந்தது.  நரம்பியல் ஆய்வாளர் ஷீலா நீரென்பெர்க்கின்  செயற்கை கண் கருவியை ஒரு குழந்தையின் முழு முகத்தையும் தெள்ளத் தெளிவாக பார்க்க முடிகிறது.
 
இது செயற்கை கண் கருவியால் முகம் பார்க்க முடிவது இதுவே முதல்முறை. முக்கியமாக இந்த ஆய்வின் நோக்கம் மூளையுடன் தொடர்பு கொள்வதற்கான வழிகளை கண்டறிவதும், மூளையின் மொழியை புரிந்துகொள்வதும், இந்த நோக்கம் முழு வெற்றியடையும் பட்சத்தில் காது கேளாமை மற்றும் இன்னபிற நரம்பியல் குறைபாடுகளையும் சரிசெய்து விடமுடியும் என்பது மகிழ்ச்சியான செய்தி.
 
ஆய்வில் முழு வெற்றியடைந்துள்ள இந்த செயற்கை கண் கருவி, மனிதர்களுக்கு பார்வை அளிக்கும் நாள் இன்னும் சில வருடங்களிலேயே வந்துவிடும். செயற்கை கை, கால்கள் போல செயற்கை கண் கருவிகள் வருகை, விபத்துகள் மற்றும் நோய்களால் பாதிக்கப்படும் மனிதர்களின் இயல்பு வாழ்க்கையை அவர்களுக்கு முழுமையாக மீட்டெடுத்து தந்துவிடும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை என்கிறார் பிரபல  கண் கருவிழித்திரை நிபுணர் டாக்டர் வசுமதி.
 
செயற்கை கருவிழிகள்......
 
கண் பார்வை பறிபோனால் வேறு ஒருவரிடம் தானமாக பெற்ற கருவிழிகள் மூலம் மீண்டும் பார்வை பெற்று வருகின்றனர். தற்போது செயற்கை கருவிழிகள் மூலம் பார்வை பெற செய்து ஒரு பெண் விஞ்ஞானி சாதனை படைத்துள்ளார். அவர் பெயர் மேகிரிப்த். இவர் சுவீடனில் உள்ள லிங்கோயிங் பல்கலைக் கழகத்தில் இதற்கான ஆய்வு மேற்கொண்டார்.
 
இவர் மனித திசுக்களை அல்லது இணைப்பு திசுவின் வெண்புரதம் (காலோஜென்) போன்றவற்றை ஆய்வகத்தில் செயற்கையாக வளரச் செய்தார். அதை கண்களில் பொருத்தும் காண்டாக்ட் லென்ஸ் போன்று வடிவமைத்தார். பின்னர் பார்வை இல்லாதவர்களுக்கு அதை பொருத்தி பார்வை பெறச் செய்தார். இது மருத்துவ உலகின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.
 
தற்போது கருவிழி பாதிப்பினால் உலகில் சுமார் 1 கோடி மக்கள் பார்வை இழந்து இருளில் தவிக்கின்றனர். இந்த கண்டுபிடிப்பின் மூலம் அவர்களின் வாழ்வில் மீண்டும் ஒளிபரவும் என்பதில் சந்தேகமில்லை என்கிறார் சென்னை தி.நகர் ராதாத்ரி நேத்ராலயா கண் மருத்துவமனை இயக்குனர் கண் விழித்திரை சிறப்பு நிபுணர் டாக்டர் வசுமதி.
 
புகைப்படம் போல்  பதிவு செய்யும்.......  
 
செயற்கை கண்ணை இரு வகை பார்வைத் திறன் அற்றவர்கள் பயன்படுத்த முடியும். இந்த செயற்கை கண், இரண்டு கம்ப்யூட்டர் சிப்கள் கொண்டு உருவாக்கப்பட்டு உள்ளது. இவை (கருவிழித்திரை) ரெட்டினா செய்யும் வேலையை செய்யும். இதில் உள்ள ஒரு ஜோடி கண்ணாடிகள் சுற்றுப்புறத்தையும், ஒளியின் தன்மையையும் புகைப்படம் போல பதிவு செய்து கொள்ளும்.
 
இந்த தகவல்கள் சிப்களின் உதவியுடன் எலக்ட்ரிக் நரம்புகள் மூலமாக மூளைக்கு கடத்தப்படுகிறது. அதன் பிறகு மூளை தானாக ஒரு படத்தை உருவாக்கி அறிந்து கொள்ளாது. அது குறிப்பிட்ட பொருளை ஏற்றுக் கொள்ளும், அதை ஒரு இடமாகவோ, குறியீடாகவோ அறிந்து கொள்ள முடியும். இதனால் இந்த கருவியை பொருத்தி இருப்பவர்கள் வழிகாட்டி இல்லாமலே தங்கள் இலக்கை நோக்கி ஆபத்தின்றி செல்ல முடியும்.
 
அன்றாட வாழ்க்கையை சமாளிக்கலாம்...........
 
விஞ்ஞானி ராபர்ட் கூறும் போது, "இந்த செயற்கை கண் பார்வைத் திறனை முழுமையாக மீட்டுத் தராவிட்டாலும், கண்ணில் உள்ள  ஒலி அதிர்வுகளை நரம்புகளின் கடத்தும் தன்மைக்கு மாற்றிக் கொடுக்கும். இதன் மூலம் பார்வையற்றவர்கள் அன்றாட வாழ்க்கையை எளிய வகையில் சமாளிக்க முடியும். 20 வருட முயற்சியின் பலனாக ரெட்டினாவுக்கு பதிலாக எலக்ட்ரிக் கருவியை பயன்படுத்த முடியும் என்பது நிரூபிக்கப்பட்டு உள்ளது. இது பார்வை நரம்புகளாக செயல்படும்.
 
செயற்கை கண்ணால் பார்வை பெற்றவர்...........
 
மனித உறுப்புகளுள் மிக முக்கியமானது கண். இதிலுள்ள `கார்னியா' எனப்படும் விழி வெண்படலமே நடப்பவை அனைத்தையும் பார்த்து ரசிக்க உதவியாக இருக்கிறது. சிலருக்கு விபத்தினால் கார்னியா பாதிக்கப்பட்டு பார்வை இழப்பு ஏற்பட வாய்ப்புண்டு. 10 வருடங்களுக்கு முன் விபத்தினால் பாதிக்கப்பட்டு பார்வையை இழந்த ஒருவருக்கு செயற்கை கண் வரப்பிரசாதமாக அமைந்துள்ளது.
 
தற்போது மருத்துவர்களின் முயற்சிக்குப் பின் அவருக்கு செயற்கை பார்வை கிடைத்துள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த நோர்மன் சிம்ப்சனுக்கு விபத்து ஒன்றில் கண்கள் மோசமாக பாதிக்கப்பட்டன. இவருக்கு தானமாக கிடைக்கப் பெற்ற பிறரின் கார்னியாக்களை மருத்துவர்கள் பொருத்திப் பார்த்ததில் தோல்வி ஏற்பட்டதால் கண்பார்வை இனி கிடைக்காது எனக்கூறி கையை விரித்து விட்டனர்.
 
தற்போது செயற்கை கார்னியா பொருத்தும் அறுவை சிகிச்சை வெற்றி பெற்றதை தொடர்ந்து நார்மனுக்கு ஓரளவிற்கு பார்வை கிடைத்துள்ளது. செய்தித் தாள்களை படிக்கவும் அன்றாட வேலைகளை செய்யவும் முடிவதாக மகிழ்ச்சியடைந்துள்ளார். 10 வருடங்களுக்கு பின் மனைவியை பார்க்க முடிவதை பெருமிதத்தோடு கூறுகிறார்.
 
கண்களை  பாதுகாக்க டிப்ஸ்..........
 
போதிய வெளிச்சத்தில் எழுதுதல் மற்றும் படித்தல் கூடாது.கண்களில் தூசி விழுந்தால் கைகளால் கசக்க கூடாது, தண்ணீரால் கண்களை சுத்தம் செய்யவும். கம்ப்யூட்டரில் பணி செய்யும் போது டி.வி. பார்க்கும் போது அடிக்கடி கண்களை மூடி திறக்கவும். அதாவது கண்களை சிமிட்டவும். பால், முட்டை, கீரை, பழங்கள் போதுமான அளவு சாப்பிடவும், வாகனம் ஓட்டும் போது (கண்ணாடி அணியாதவர்கள்) பவர் லென்ஸ் கண்ணாடி அணியுங்கள்.
 
40 வயதுக்கு உட்பட்டவர்கள் ஓராண்டுக்கு ஒரு முறையும், 40 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆறு மாதத்துக்கு ஒரு முறையும் கண்களை பரிசோதனை செய்துக் கொள்ளுங்கள். நீரிழிவு பாதிப்பு உள்ளவர்கள் 6 மாதத்துக்கு ஒருமுறை கட்டாயம் கண்களை பரிசோதனை செய்யவும்.  நம் நாட்டில் பெரும்பாலான மரணங்கள் மருத்துவமனைகளில் நடக்கின்றன. அப்படி ஏற்படும் போது இறந்த நபரின் கண்களை பெறும் முயற்சியை மருத்துவமனை மேற்கொள்ளலாம்.
 
அந்த கண்களை எடுத்து, தேவைப்படுவருக்கு வைத்துக் கொள்ளலாம். உங்களுக்கு தெரிந்தவர்கள் அல்லது நெருக்கமானவர்கள் யாராவது திடீரென மரணமடைந்து விட்டால் கண்களை 6 மணி நேரத்திற்குள், அருகில் உள்ள கண் மருத்துவமனை வங்கிக்கு சேரும்படி செய்தால் கோடி புண்ணியம் கிடைக்கும்.  இறந்தவர்களின் உறவினர் சம்மதம் பெற்றே கண் தானம் செய்ய முடியும்.
 
ஆகவே, உறவுக்காரர்களிடம் கண் தானத்தின் மகத்துவத்தை விளக்கி, கண் தானம் செய்ய சம்மதம் பெறவேண்டும். சம்மதம் கிடைத்ததும், அருகில் உள்ள கண் மருத்துவ மனைக்கு, தொலைபேசியில் தகவல் கொடுத்தால் போதும், மருத்துவமனையில் இருந்து நேரில் வந்து, கண்களை எடுத்துச் சென்று விடுவார்கள்.

நன்றி: maalaimalar.com

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza