சென்னை டீசல் விலை உயர்வு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு அனுமதி ஆகியவற்றைக் கண்டித்தும், அதனை திரும்பப் பெறக்கோரியும், மேலும் கூடங்குளம் அணுஉலையில் எரி பொருள் நிரப்பும் பணியை நிறுத்தக் கோரியும் எஸ்.டி.பி.ஐ கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் நேற்று இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
சென்னை, மதுரை, கோவை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் இரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது. திருநெல்வேலியில் நடந்த போராட்டத்திற்கு அக்கட்சியின் மாநில பொதுச்செயலாளர் நெல்லை முபாரக் தலைமை தாங்கினார்.
இதுகுறித்து நெல்லை முபாரக் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்;
“அண்மையில் மத்திய அரசு டீசல் விலை ரூபாய் 5 உயர்த்தியுள்ளது. இதனால் அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. எனவே மத்திய அரசு டீசல் விலை உயர்வை திரும்ப பெற வேண்டும். அதே போன்று சில்லறை வர்த்தகத்தில் 51 % அந்நிய முதலீட்டிற்கு அனுமதி அளித்திருப்பது தேச நலனுக்கு விரோதமானது. மத்திய அரசு இந்த தேச விரோத செயலை கைவிட வேண்டும். கூடங்குளம் அணு உலையில் யுரேனியம் நிரப்பப்படுவதை நிறுத்த வேண்டும்.
போராட்டக்காரர்களின் மீதான அடக்குமுறைகளை மத்திய, மாநில அரசுகள் நிறுத்திக்கொள்ள வேண்டும். கூடங்குளம் மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்கள் மீதான 144 தடை உத்தரவு திரும்பப்பெறப்பட வேண்டும். போராட்ட குழுவினருடன் மத்திய மாநில அரசுகள் எந்தவித நிபந்தனையும் இன்றி பேச்சுவார்த்தை நடத்த வேண்டும்.
இந்த மூன்று கோரிக்கைகளை வலியுறுத்தி எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் தமிழகம் முழுவதும் அனைத்து மாவட்டங்களின் தலைநகரங்களில் ரயில் மறியல் போராட்டம் இன்று நடைபெறுகிறது. மத்திய அரசு தனது இந்த முடிவுகளை திரும்ப பெறாவிட்டால் மக்களை திரட்டி மிகப் பெரிய போராட்டத்தை எஸ்.டி.பி.ஐ கட்சி நடத்தும்.” என்று அவர் தெரிவித்தார்.
மத்திய அரசை வலியுறுத்தி தமிழகம் முழுவதும் நடைபெற்ற இந்த ரயில் மறியல் போராட்டத்தில் கலந்துகொண்ட அனைவரும் கைது செய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டனர்.
0 கருத்துரைகள்:
Post a Comment