புதுடெல்லி:குஜராத் முஸ்லிம் இனப்படுகொலை புகழ் நரேந்திர மோடியின் போலீசாரால் போலி என்கவுண்டரில் கொலைச் செய்யப்பட்ட சொஹ்ரபுதீன் ஷேக் கொலை வழக்கின் விசாரணையை மஹராஷ்ட்ரா மாநிலத்துக்கு மாற்ற உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
குஜராத் மாநிலத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவிருக்கும் சூழலில் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியும், முன்னாள் அமைச்சருமான அமித் ஷா, தேர்தல் பிரச்சாரத்திற்காக குஜராத் மாநிலத்துக்கு செல்லவும் நீதிபதிகள் அனுமதி வழங்கினர்.
“குஜராத்தில் சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே, அமித் ஷாவுக்கு ஜாமீன் வழங்கும்போது, குஜராத்தில் நுழைய அவருக்கு விதிக்கப்பட்ட தடையையும் ரத்து செய்து உத்தரவிட வேண்டும். வேண்டுமானால், அவரது நடவடிக்கைகளை சிபிஐ அதிகாரிகள் கண்காணித்துக் கொள்ளலாம்.” என்று அமித் ஷா தரப்பில் நேற்று(செவ்வாய்க் கிழமை) ஆஜரான மூத்த வழக்கறிஞர் ராம் ஜெத்மலானி நீதிமன்றத்தில் தெரிவித்தார்.
இதையடுத்து நீதிபதிகள் அப்தாப் ஆலம், ரஞ்சனா பிரகாஷ் தேசாய் பிறப்பித்த உத்தரவில், “அமித் ஷா, குஜராத்துக்குச் செல்ல அனுமதி அளிக்கிறோம். அதே சமயம், இந்த வழக்கின் விசாரணையை குஜராத்தில் உள்ள நீதிமன்றத்தில் நடத்துவதில் எங்களுக்கு சம்மதமில்லை. இவ்வழக்கை மஹராஷ்டிர மாநிலத்துக்கு மாற்ற வேண்டும். இது தொடர்பாக அடுத்த விசாரணை வரும் செப்டம்பர் 4-ம் தேதி நடைபெறும்” என்றனர்.
அதேவேளையில் சொஹ்ரபுத்தீன் ஷேக் போலி என்கவுண்டர் வழக்கில் முக்கிய சாட்சியான துளசிராம் பிரஜாபதியைக் கொலைச்செய்த வழக்கில் விசாரணை தொடர்பான அறிக்கையை நீதிமன்றத்தில் தாக்கல் செய்த பின், சிபிஐ வழக்கறிஞர் விவேக் தங்கா கூறுகையில், “பிரஜாபதி கொலை தொடர்பாக சிபிஐ விசாரணை முடிந்துவிட்டது. அது தொடர்பாக இன்னும் ஒரு வாரத்துக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யவுள்ளோம்.” என்றார்.
முன்னதாக இவ்வழக்கில் நீதிமன்றத்துக்கு உதவும் நடுநிலை அறிவுரையாளராக(அமிக்கஸ் க்யூரி) செயல்படும் மூத்த வழக்கறிஞர் கோபால் சுப்ரமணியம், சொஹ்ரபுதீன் ஷேக் வழக்கில் ஆந்திர போலீசாரின் பங்கு குறித்து சி.பி.ஐ விசாரணை நடத்தவில்லை என்பதை உச்சநீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்தார்.
அவர் கூறுகையில், “இவ்வழக்கில் ஏன் சி.பி.ஐ உண்மையை கண்டுப்பிடிக்க முயலவில்லை. போலீஸ் அதிகாரிகள் இந்த கொலையை மறைக்க முயல்கின்றனர். இவ்வழக்கில் அரசியல்வாதிகள்-போலீஸ் தொடர்பு இருக்கிறதா?” என்று கேள்வி எழுப்பினார். மேலும் அவர் இவ்வழக்கு தொடர்பான தொலைபேசி அழைப்பு பதிவுகளை(கால் ரிக்கார்ட்ஸ்) சி.பி.ஐ பெற முடியாதது குறித்து ஆச்சரியத்தை வெளிப்படுத்தினார்.
கீழ் நீதிமன்றத்தில் குஜராத் அரசு இவ்வழக்கு தொடர்பான தொலைபேசி அழைப்பு பதிவுகள் தங்களிடம் இருப்பதாக கூறியுள்ளது என்றார் அவர்.
இதற்கு பதிலளித்த சி.பி.ஐ வழக்கறிஞர் விவேக் தங்கா, 6 இல் இருந்து 8 வரையான ஆந்திர ஐ.பி.எஸ் அதிகாரிகளை இவ்வழக்கில் சி.பி.ஐ கண்டறிந்துள்ளது. மேலும் தொலைபேசி அழைப்பு பதிவுகள் விரைவில் பெறப்படும் என்று தெரிவித்தார்.
0 கருத்துரைகள்:
Post a Comment