Sunday, August 26, 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-4!


பாகம் நான்கு

ஐந்து விமானங்களும் அதிலிருந்த 14 பேரும் மாயமாக மறைந்து போனது அமெரிக்க விமானப்படையில் பெரிய குழப்பத்தை உருவாக்கியது. மாயமாக மறைவதற்கு முன் ஒரு விமானி, “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்று கூறியதன் அர்த்தம் யாருக்கும் புரியவில்லை.
மாயமாக மறைந்த விமானங்களை தேடிச் செல்லவும், மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்கும், அவசர அவசரமாக ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இப்போதுள்ள முக்கிய கேள்வியே, எங்கே போய் தேடுவது? விமானத்தை செலுத்திய விமானிகளுக்கே, தாம் எங்கே பறந்து கொண்டிருந்தோம் என்பது தெரியவில்லை.

மாயமாக மறைந்து போன விமானங்கள் தொடர்ந்தும் பறந்து கொண்டிருக்க முடியாது. ஏதோ ஒரு கட்டத்தில் எரிபொருள் தீர்ந்துபோகும். அப்போது கீழே விழத்தான் வேண்டும்.
கீழே விழும் இடம், அனேகமாக அட்லான்டிக் சமுத்திரமாகத்தான் இருக்கும் என்று ஒரு தியரி வைத்துக் கொண்டார்கள்.
தேடுதல் வானில் மட்டுமின்றி, கடலிலும் நடைபெறவேண்டும் என்பதால், மீட்புப் பணிக்காக கடலில் இறங்கக்கூடிய விமானம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது.
மார்டின் மரைனர் ரகத்திலான விமானம் அது. அந்த நாட்களில் இந்த ரக விமானங்களை பறக்கும் படகு (flying boat) என்பார்கள். அதில் மொத்தம் 13 பேர் மீட்பு நடவடிக்கைகளுக்காக அனுப்பப்பட்டனர்.
அமெரிக்க விமானப்படைக்கு சொந்தமான விமானம் அது. 77 அடி நீளமானது. கடலில் விபத்துகள் ஏற்பட்டால் மீட்பு நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக என்று பிரத்தியேகமாக உருவாக்கப்பட்ட அதில், நவீன மீட்பு உபகரணங்கள் எல்லாம் இருந்தன.
புளொரிடாவில் இருந்து வடகிழக்குத் திசையில் தேடுதல் விமானம் கிளம்பிச் சென்றது.
விமானம் கிளம்பி சுமார் 10 நிமிடங்களின் பின்னர், மார்டின் மரைனர் விமானத்தின் விமானி ரேடியோ மூலம் தரையைத் தொடர்பு கொண்டார். தரையிலிருந்து 5000 அடி உயரத்துக்கு மேலே கடுமையான காற்று வீசுவதாகக் கூறினார்.
விமானம் புறப்பட்டு 20 நிமிடங்களின் பின்னர் தரையில் இருந்தவர்கள் விமானியை ரேடியோவில் அழைத்து, “விமானம் இப்போது எந்த இடத்தில் பறந்து கொண்டிருக்கிறது” என்று கேட்டார்கள்.
மறுமுனையில் பதில் இல்லை.
தொடர்ந்து மீண்டும், மீண்டும் ரேடியோவில் அழைத்துப் பார்த்தார்கள். பதில் இல்லை.
மாயமாக மறைந்துபோன 5 விமானங்களையும், 14 பேரையும் தேடுவதற்காக, 13 பேருடன் அனுப்பப்பட்ட விமானமும் மாயமாக மறைந்து விட்டிருந்தது.
சுமார் 5 மணி நேரம், மார்டின் மரைனர் விமானத்தில் இருந்து ஏதாவது தகவல் வரும் என்று காத்திருந்தார்கள். பலன் பூச்சியம்தான்.
மறுநாள் காலை மிகப் பெரிய அளவிலான மீட்பு நடவடிக்கை ஒன்றுக்கான ஆயத்தங்கள், இரவோடு இரவாகச் செய்யப்பட்டன. அதுவரையில் அமெரிக்காவில் செய்யப்பட்ட மிகப் பெரிய மீட்பு நடவடிக்கை அதுதான்.
கடற்படைக்கு சொந்தமான எல்லைப்புற ரோந்துக் கப்பல்கள் எட்டு, பல நீர்மூழ்கிக் கப்பல்கள், நூற்றுக்கணக்கான தனியார் சிறு கப்பல்கள், யுத்தக் கப்பல்கள் (டிஸ்ட்ராயர்கள்) நான்கு, என்று நினைத்தே பார்க்க முடியாத அளவில் அளவிலான தேடுதல் கடலில் ஆரம்பமாகியது.
இவ்வளவும் போதாதென்று, அமெரிக்க கடற்படையின் பெரிய விமானம் தாங்கிக் கப்பலான சாலமன்ஸ், அட்லான்டிக் கடலில் தேடுதல் பகுதிக்கு நகர்த்தப்பட்டது. சாலமன்ஸ் கப்பலில் இருந்த விமானங்களின் எண்ணிக்கை அறுபது.
அதைவிட அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானத் தளங்களில் இருந்து உதவிக்காகத் தருவிக்கப்பட்ட விமானங்களின் எண்ணிக்கை 240.
பிரிட்டனின் ராயல் விமானப் படைக்குச் சொந்தமான பல விமானங்கள், பிரிட்டிஷ் காலனி நாடாக இருந்த பகாமாஸ் தீவுகளிலும், மேற்கிந்திய தீவுகளிலும் இருந்தன. விஷயம் கேள்விப்பட்டு அவையும் உதவிக்கு வந்தன.
கடலிலும், வானிலும், தரையிலும் ஒவ்வொரு சதுர கிலோ மீட்டரும் தேடுதலுக்கு உள்ளாக்கப்பட்டது. விமானங்கள் சில கடல் மட்டத்திலிருந்து வெறும் 400 அடி உயரத்தில் பறந்து தேடின.
அமெரிக்க விமானப்படை விமானிகளுக்கு பயிற்சி கொடுக்கும்போது, விமானத்தை ஒரேயிடத்தில் நகராமல் நிறுத்தி வானில் மிதந்தபடி இருப்பதற்கான பயிற்சி ஒன்று கொடுக்கப்படும். இப்படி வானில் ஒரேயிடத்தில் நிறுத்தப்பட்டு மிதக்க விடப்பட கூடிய ஆகக்கூடிய நேரம் 90 விநாடிகள்.
கடல் மட்டத்தில் ஏதாவது தெரியும் இடங்களில், விமானங்கள் 90 விநாடி மிதப்புக்களைச் செய்து, கீழே தெரியும் பொருட்களை போட்டோ எடுத்தன.
மொத்தமாக 2 லட்சத்து 80ஆயிரம் சதுர மைல்கள் கடற்பரப்பளவு தேடுதலுக்கு உட்படுத்தப்பட்டது. கடலில் விழுந்த விமானங்கள் கடலுக்கு அடியே போயிருக்கலாமோ என்று நீர்மூழ்கிக் கப்பல்கள் தேடின.
பலன் பூச்சியம்!
முதலில் தொலைந்து போன 5 விமானங்களும், அதைத் தேடச் சென்ற மற்றுமோர் விமானமும், 6 விமானங்களிலும் இருந்த 27 பேரும் எந்தவொரு சுவடுமில்லாமல், மாயமாக மறைந்தே போயிருந்தார்கள்.
இந்த மர்மத்துக்கு எப்படி விடை கண்டுபிடிப்பது என்றே யாருக்கும் புரியவில்லை.
கடைசியாக விமானியிடமிருந்து வந்த தகவலான “எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன” என்ற வாக்கியத்தில் தான் இந்த மர்மத்துக்கான விடை இருக்கிறது என்று பலர் ஆராய்சியில் இறங்கினார்கள்.
விமானம், கடலுக்கு மேல் இறுதியாக பறந்தது என்று எடுத்துக் கொள்ளலாம். தண்ணீருக்கோ நிறம் கிடையாது. விமானத்தில் இருந்து பார்க்கும்போது கடல் நீல நிறமாக தெரியலாம். அலை அடிப்பதை உயரத்திலிருந்து பார்க்கும்போது சில சமயங்களில் வெள்ளை நிறத்தில் தெரியலாம். ஆனால், தண்ணீருக்கு அருகே விமானம் வந்துவிட்டால், தண்ணீர் வெள்ளையாக தெரியாது.
இவர்களது விமானம் வெள்ளை நிறமான திரவம் ஒன்றுக்குள் பிரவேசித்திருக்கிறது!
வானத்தில் வெள்ளை நிறமான திரவம் எங்கேயிருக்கும்? யாராலும் விடை கண்டுபிடிக்க முடியவில்லை.
அமெரிக்க விமானப்படை விமானங்களின் மறைவுபற்றி ஆராய விசாரணைக்குழு  ஒன்றை அமைத்தது. அதில் விமானப்படை அதிகாரிகள், ஏவியேஷன் வல்லுனர்கள், விண்வெளி விஞ்ஞானிகள், ஆராய்சியாளர்கள் என்று பலர், இந்த விமானங்கள் மறைந்ததற்கு ஒவ்வொரு விதமான தியரிகளைச் சொன்னார்கள்.

இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....!

நன்றி: விறுவிறுப்பு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza