Friday, August 24, 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்: பகுதி-3!

பாகம் மூன்று

கேப்டன் ஸ்டீவரின் குரல், தரை கட்டுப்பாட்டு மைய ரேடியோவில், “எங்களது விமானங்கள் எந்த பொஸிஷனில் பறக்கின்றன என்பதை புரிந்து கொண்டு விட்டேன் என்று நினைக்கிறேன்” என்று கேட்டபோது, கீழே இருந்தவர்களுக்கு ஓரளவுக்கு நிம்மதி ஏற்பட்டது.

சிறிது நேரத்தில் ஸ்டீவரின் குரல் மீண்டும் ரேடியோவில் ஒலித்தது. “இப்போது எல்லாமே எனக்கு புரிந்து விட்டது. நாங்கள் சரியான திசையில்தான் பயணத்திருக்கிறோம். ஆனால் அதீத உயரத்தில் பறந்துவிட்டோம். இதனால் புளோரிடாவைத் தாண்டி மெக்ஸிகோ வளைகுடாவுக்கு மேலே பறக்கிறோம். உயரம் அதிகமாக இருப்பதால் தரை தெரியவில்லை. அவ்வளவுதான்”
இந்தச் செய்தி கிடைத்ததும் தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு நிம்மதிப் பெருமூச்சு வந்தது.
கீழேயிருந்து அறிவுறுத்தல் அனுப்பப்பட்டது.
“உங்களது விமானங்கள் மெக்ஸிகோவை நோக்கிப் போகின்றன என்றால், விமானங்களின் உயரத்தைக் குறைத்து, கிழக்கு நோக்கித் திருப்புங்கள்.”
“சரி. அப்படியே செய்கின்றோம்.”
ஐந்து விமானங்களும் கிழக்கு நோக்கித் திருப்பப்பட்டன.
“உயரத்தை குறைந்து விட்டீர்களா?”
“இன்னமும் இல்லை. எல்லா விமானங்களிலும் உயரத்தைக் காட்டும் கருவிகள் செயலிழந்துள்ளன.”
“கீழே தரையோ கடலோ தெரிகின்றனவா?”
“இல்லை”
‘அப்படியானால் தைரியமாக உயரத்தைக் குறையுங்கள். மீட்டர்கள் இயங்கா விட்டாலும் பரவாயில்லை.”
“சரி. 10,000 அடிவரை குறைக்கலாமா?”
“செய்யுங்கள்.”
இப்படிச் சொன்னாலும், தரை கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு ஒரு விஷயம் புரிந்திருந்தது. என்னதான் விமானிகள் 10,000 அடிவரை உயரத்தைக் குறைக்க போவதாகக் கூறினாலும், உயரத்தைக் காட்டும் கருவிகள் இயங்காத போது, அவர்களால் தங்களது விமானங்களின் உயரத்தை சரியாக 10,000 அடி குறைக்க முடியாது.
வேண்டுமானால் சுமாராக குறைக்கலாம். அவ்வளவுதான். அதுவும் ஆபத்துத்தான். ஆனால் வேறுவழியில்லை.
மேலும் 20 நிமிடங்கள் சென்றன.
இவர்களது விமானங்கள் ஸ்டீவர் கூறியதுபோல மெக்ஸிகோ வளைகுடா பக்கமாக சென்றிருந்தால், அவை கிழக்குத் திசையில் திருப்ப பட்டிருந்தால், இப்போது புளோரிடாவின் ஓரமாகவுள்ள சிறிய தீவுகள் கண்ணில் பட வேண்டும்.
ஆனால் தெரியவில்லை. கீழே கடலும் தெரியவில்லை.
“இதில் ஏதோ தவறு இருக்கிறது. நாங்கள் உயரத்தைக் கணிசமாக குறைந்து விட்டோம். விமானங்களை கிழக்குத் திசையில் திருப்பி பறக்கிறோம். அப்படியிருந்தும் எதுவும் தெரியவில்லை” விமானியின் குரல் லோசாக நடுங்குவதை, கீழேயிருந்தவர்கள் கவனித்தார்கள்.
“உயரத்தை இன்னமும் குறையுங்கள்”
“குறைக்கிறோம்.”
“நீங்கள் பறந்து கொண்டிருக்கும் இடத்தில் வெளியே பார்க்க முடியாதபடி, மேகங்களோ, பனி மூட்டமோ இருக்கிறதா?”
“இல்லை. வானம் தெளிவாக இருக்கிறது.”
இப்போது தரையில் இருந்தவர்களுக்கு ஒரு பயம் ஏற்பட்டிருந்தது. மேலேயிருந்து கூறியவர்கள் தாங்கள் புளோரிடாவைக் கடந்து மெக்ஸிகோ வளைகுடாவின் மேலே பறந்து கொண்டிருப்பதாகக் கூறியதால்தான், அவர்களை கிழக்கு பக்கமாகத் திரும்பும்படி தரையில் இருந்து கூறியிருந்தார்கள்.
ஒருவேளை, அவர்கள் மெக்ஸிகோ வளைகுடாவின் மேல் பறக்காமல், புளோரிடாவின் மறுபக்கத்தில் (அட்லான்டிக் சமுத்திரப் பக்கத்தில்) நின்றிருந்தால்?
கிழக்குப் பக்கம் திருப்பப்பட்ட விமானங்கள் புளோரிடா கரையை நோக்கி வராமல், நடுக்கடலை நோக்கச் சென்று கொண்டிருக்கும்.
அடுத்து ஐந்து நிமிடங்களுக்கு ரேடியோ நிசப்தமாக இருந்தது. விமானிகள் தங்களுக்குள் பேசிக் கொள்வதுகூடக் கேட்கவில்லை. கீழேயிருந்து கேட்கப்பட்ட கேள்விகளுக்குக்கூட மேலேயிருந்து பதில் வரவில்லை.
ஐந்து நிமிடங்களின் பின்னர், ரேடியோவில் கரகரவென்று விசித்திரமான இரைச்சல் ஒலியொன்று சில விநாடிகள் கேட்டது. இரைச்சலின் முடிவில், ஐந்து விமானிகளில் ஒருவரின் குரல் ரேடியோவில் கேட்டது.
அவர் குழப்பமான நடுங்கும் குரலில், ஒரு வாக்கியம் சொன்னார்.
அந்த வாக்கியம்தான், ஐந்து விமானங்களில் இருந்தும் கடைசியாகப் பேசப்பட்ட வாக்கியம். அதன் பிறகு ஐந்து விமானங்களில் இருந்தவர்களும் தரையைத் தொடர்பு கொள்ளவே இல்லை.
கடைசியாகக் கூறப்பட்ட வாக்கியம் -
“எமது விமானங்கள் இப்போது வெள்ளை நிற திரவத்துக்குள் நுழைகின்றன”

இன்ஷா அல்லாஹ் நாளை தொடரும்.....!

நன்றி: விறுவிறுப்பு.

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza