Wednesday, August 22, 2012

உலகின் தீர்க்கப்படாத மர்மம்: ‘ பெர்மூடா முக்கோண’ மாய மறைவுகள்:பகுதி-1!

இது ஒரு முக்கோண கடல் பகுதி. இங்கு வந்த பல கப்பல்கள் மாயமாக மறைந்து போகின்றன. இந்த கடலுக்கு மேலே பறந்த பல விமானங்களும் மிஸ்ஸிங். என்ன ஆயிற்று என்றே தெரியவில்லை.
காற்றில் கரைகின்றனவா? வேறொரு கிரகத்துக்கு இழுக்கப்படுகின்றனவா? அல்லது கடலின் அடிப்பகுதியை நோக்கி உறுஞ்சப்படுகின்றனவா?
இந்த கடல் பகுதியில் எத்தனையோ விபத்துக்கள் நடைபெற்றுள்ளன. ஆனால், விபத்துக்குள்ளான கப்பல்களிலோ விமானங்களிலோ இருந்த ஒருவரது உடல்கூட ஏன் இதுவரை கிடைக்கவில்லை?
உடல்களை விடுங்கள் – அவை சிறியவை. விபத்துக்குள்ளாகிய கப்பல்கள் அல்லது விமானங்களின் பாகங்கள் கூடக் கிடைக்காமல் மாயமாக மறைகின்றனவே. அது எப்படி?
இதுதான் பர்மியூடா முக்கோணம்
பல வருடங்களாக நடைபெற்றுள்ள ‘காரணம் கூறப்படாத விபத்துக்கள்’ எல்லாவற்றிலும், இப்படியான மாய மறைவுகள்தான் ஒரேயொரு ஒற்றுமை என்பது ஆச்சரியமாக இல்லையா?
இந்த இடத்தில் பொதிந்திருக்கும் மர்மம், எப்போது அவிழும்?
மேலே கூறப்பட்ட கேள்விகள் அனைத்தும் குறிக்கும் இடம் – பர்மியூடா முக்கோணம் (The Bermuda Triangle) எனப்படும் இடம். இந்த இடத்துக்கு மற்றொரு பெயர், பிசாசு முக்கோணம் (Devil’s Triangle).

அட்லான்டிக் சமுத்திரத்திலுள்ள ஒரு சிறிய பகுதி இது. எல்லைகள் எவை? முக்கோணத்தின் ஒரு பக்கம், அமெரிக்கா, புளோரிடாவின் சில பகுதிகள், மற்றொரு பக்கம், பஹாமாஸ், மூன்றாவது பக்கம், அட்லான்டிக் சமுத்திரம். இந்த ஏரியாவுக்குள், மயாமி, சான்-வான் (San Juan-க்கு சரியான உச்சரிப்பு) போட்டோ ரிக்கோ, மற்றும் மிட்-அட்லான்டிக் தீவான பர்மியூடா.
இந்த பிசாசு முக்கோணத்தில் நடைபெற்ற சில மர்மச் சம்பவங்களை ஒவ்வொன்றாக பார்க்கலாமா?
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்திலுள்ள ஃபோட் லாரடேல் விமான தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு ரேடியோ செய்தி ஒன்று வருகின்றது.
“ஆபத்து! அபாய அறிவிப்பு!! எங்களுக்குக் கீழே திடீரென தரை தெரியவில்லை. நாங்கள் எங்கே இருக்கிறோம் என்பதும் தெரியவில்லை”
இந்த அபாய அறிவிப்பு தரைக் கட்டுப்பாட்டு மையத்துக்கு வந்தது, மேலே பறந்து கொண்டிருந்த விமானம் ஒன்றில் இருந்து. அமெரிக்க விமானப் படைக்குச் சொந்தமான விமானம் அது. பிளைட் இலக்கம் 19.
விமானத்தில் இருந்து ரேடியோ மூலம் தரையை தொடர்பு கொண்ட விமானி யின் பெயர், லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர். அன்று மதியம் 2 மணிக்கு பிளைட் இலக்கம் 19 விமானத்த்தில் புறப்பட்டு சென்றிருந்தார் – வழமையான ரோந்து நடவடிக்கைக்காக.
1945-ல் வெளியான பத்திரிகை தலைப்புச் செய்தி!
சம்பவம் நடைபெற்ற தினம் டிசம்பர் 5-ம் தேதி, 1945-ம் ஆண்டு.
மாலை 3.45-க்கு விமானம் திரும்பி விமானப் படை முகாமுக்கு வந்திருக்க வேண்டும். வரவில்லை. ரேடியோ மூலம் அபாய அறிவிப்புத்தான் வந்து சேர்ந்தது. விமானிக்கு, தாம் எங்கே பறக்கிறோம் என்பதே தெரியாத விசித்திர செய்தியுடன்!
“நீங்கள் இப்போது பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் என்ன?” தரைத் தொடர்பு அதிகாரி ரேடியோவில் கேட்டார்.
“மீண்டும் சொல்கிறோம். நாங்கள் இருக்கும் பொசிஷன் எது என்றே தெரியவில்லை. சற்று நேரத்துக்கு முன்புவரை கீழே தரை தெரிந்து கொண்டிருந்தது. திடீரென தரை தெரியாமல் மறைந்து விட்டது” விமானத்திலிருந்து பதில் வந்தது.
லெப்டினென்ட் சார்ள்ஸ் டெய்லர் அமெரிக்க விமானப் படையின் திறமைசாலியான விமானிகளில் ஒருவர். பல வருட ஃபிளையிங் அனுபவம் உடையவர். அவரே தாம் பறந்து கொண்டிருக்கும் பொசிஷன் தெரியாது என்று கூறியது, தரைக்கட்டுப்பாட்டு மையத்தில் இருந்தவர்களுக்கு மகா ஆச்சரியத்தை ஏற்படுத்தியது.
விமானம் எங்கே போயிருக்க முடியும்? தரைக் கட்டுப்பாட்டு மையத்தில் இருந்த ஃபிளைட் பிளானை பார்த்தார்கள். பிளைட் இலக்கம் 19-க்கு கொடுக்கப்பட்டிருந்த பறக்கும் பாதை, புளோரிடாவின் கரையோரமாக கிழக்கு நோக்கி பகாமாஸ் தீவுகள் வரை செல்வது. அது கிட்டத்தட்ட 160 மைல்கள் பறக்கும் தொலைவு.
அந்த இடத்தில் சென்றடைந்த பின், அங்கிருந்து வடக்கே 40 மைல்கள் பறந்து, மீண்டும் தென்மேற்குத் திசையில் திருப்பி புளோரிடாவிலுள்ள விமானப் படை முகாமுக்கு திரும்பி வரவேண்டும் என்பதே, விமானிக்கு கொடுக்கப்பட்ட பிளைட் பிளான்.
அன்றைய தினத்தில் ரோந்து நடவடிக்கைகளுக்காக பிளைட் இலக்கம் 19 தனியே செல்லவில்லை. அந்த விமானத்துடன், வேறு 4 விமானங்களும் புறப்பட்டுச் சென்றிருந்தன. அந்த விமானங்களும் வந்து சேரவில்லை. அவர்களிடம் இருந்து தகவலும் ஏதுமில்லை.
அந்த நாட்களில் அமெரிக்க விமானப்படையின் ரோந்து விமானங்கள் ஒவ்வொன்றிலும் மொத்தம் 3 பேர் இருப்பார்கள். ஒரு விமானி, ஒரு துப்பாக்கி இயக்குபவர், ஒரு ரேடியோ ஆபரேட்டர்.
1945, டிசம்பர் 5-ம் தேதி புறப்பட்டுச் சென்ற விமானங்களில் செல்ல வேண்டியவர்களில் ஒருவர் மாத்திரம் முன்கூட்டியே லீவுக்கு விண்ணப்பித்திருந்தார். அவர் ஒரு ரேடியோ ஆபரேட்டர். கடற்படை முகாமின் தலைமை அதிகாரி அவருக்கு லீவு கொடுத்திருந்தார். ஆனால் அவரது இடத்தை நிரப்புவதற்கு வேறு ஒரு ரேடியோ ஆபரேட்டரை நியமிக்கவில்லை.
விமானங்கள் புறப்பட வேண்டிய நேரத்துக்கு சில நிமிடங்கள் முன்புதான் இது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால், அன்றைய தினம் ரோந்து விமானங்களை செலுத்த வந்த விமானிகள் யாரும் அதை பெரிது படுத்தவில்லை. அநேகமாக எல்லா விமானிகளும் ரேடியோ இயக்குவதில் பயிற்சி பெற்றவர்கள் என்பதால், ரேடியோ ஆபரேட்டர் இல்லாவிட்டால் பரவாயில்லை என்று விட்டுவிட்டார்கள்.
அது, அப்போது பெரிய பிரச்னையாக இருக்கவில்லை. இப்போது, விமானங்களுக்கு சிக்கல் வந்தபோது, அந்த விஷயமும் அலசப்பட்டது. புறப்பட்டுச் சென்ற விமானங்கள் திரும்பவில்லை. விமானத்திலிருந்து அபாய அறிவிப்பு வருகின்றது. மொத்தம் 5 விமானங்கள். அதில் 14 ஆட்கள்!
தரைக் கட்டுப்பாட்டு மையத்திலிருந்து ரேடியோ உரையாடல்கள் தொடர்ந்தன.
“உங்களுக்கு தரப்பட்ட பிளைட் பிளானின் படி, நீங்கள் முதலாவது கட்ட பறத்தலை (first leg of the flight plan) முடித்து விட்டீர்களா?”
“முடித்து விட்டோம்” சார்ள்ஸ் டெயிலரிடம் இருந்து பதில் வந்தது.
“அப்படியானால் புளோரிடாவில் இருந்து 160 மைல்கள் கிழக்கே சென்றுவிட்டீர்கள்”
“ஆம்”
“இரண்டாவது கட்டப் பறத்தலை ஆரம்பித்து விட்டீர்களா?”
“இன்னும் இல்லை”
“நல்லது. இரண்டாவது கட்டத்தில் நீங்கள் வடக்கு நோக்கி 40 மைல்கள் பறப்பதாக பிளைட் பிளான் இருக்கிறது. அதைச் செய்ய வேண்டாம். விமானத்தை மேற்கு நோக்கித் திருப்பி தொடர்ந்து பறவுங்கள். கடலுக்குள் செல்லாமல், புளோரிடா கரையை நோக்கி வரத் துவங்குவீர்கள்” என்று தரையில் இருந்து ஐடியா கொடுக்கப்பட்டது.
இதற்கு, விமானத்தில் இருந்து வந்த பதில், தரைக்கட்டுப்பாட்டு அதிகாரியை தூக்கிவாரிப் போட்டது.
“மேற்கு எந்தத் திசையில் இருக்கிறது என்பதே தெரியவில்லை. எல்லாமே குழப்பமாக இருக்கின்றது. இப்போது கீழே கடல் தெரிகிறது. ஆனால் அது கூட வழமையாகத் தெரியும் கடல் போல இல்லை. எல்லாமே வித்தியாசம். நாங்கள் வேறு கண்டத்திலோ, கிரகத்திலோ இருக்கிறோமா?”

இன்ஷா அல்லாஹ் தொடரும்.....!

நன்றி:விறுவிறுப்பு



0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza