Thursday, July 19, 2012

ரமலானை வரவேற்போம்!!!


ரமலானை வரவேற்போம்!!!புனிதமும், கண்ணியமும், ரஹ்மத்தும் நிறைந்த மாதமான ரமலான் நம்மை நெருங்கி கொண்டிருக்கிறது. ஈமான் கொண்ட அனைவரும் இந்த மாதத்தை எதிர்நோக்கியவாறு தங்களுடைய 5 கடமைகளில் ஒன்றான நோன்பை நிறைவேற்றி அல்லாஹ்வின் பொருத்தத்தை அடைய ஆவலாகவும், சந்தோஷமாகவும் உள்ளனர்.

ஏனென்றால் நோன்பு முஸ்லிம்களின் உள்ளங்களிலும், வாழ்க்கையிலும் நல்லதொரு மாற்றங்களை ஏற்படுத்துவதோடு மட்டுமல்லாமல் அடுத்து வருகின்ற பதினோரு மாதங்களுக்குக்கான ஒரு பயிற்சியாகவும் உள்ளது. மேலும் முஸ்லிம்களுக்கு இது ஒருவசந்த காலம் என்று கூறும் அளவுக்கு நன்மைகள் பொதிந்து கிடக்கின்றன.

இறைவனை நினைவு கூர்தல், தர்மம் செய்தல், நோன்பு நோற்றல், ஐவேளை தொழுதல், இரவுநேர வணக்கங்கள், சொல்-செயல்-எண்ணங்கள் என்று அனைத்திலும் இறையச்சத்தை பேணுதல் என்று ஒரு அமைதியான, நிம்மதியான சூழலை ரமலான் நம்மிடையே ஏற்படுத்தி விடுகின்றது. ரமலானின் முழு பலனையும் அடையவேண்டும் என்பதில் எந்த ஒரு முஸ்லீமுக்கும் இரு வேறு கருத்துக்கள் இருக்க முடியாது.

ரமலானை வரவேற்க தயாராவது எப்படி?

எதிர்வரும் ரமலானை இறையச்சத்தோடு அதன் பலனை அடைவதற்கும், இறைவனின் திருப்பொருத்தத்தை அடைவதற்கும் கீழ்கண்ட வழிமுறைகளை பின்பற்றுவது சாலச் சிறந்தது.

ரமலான் வருகைக்கு ஆர்வமூட்டல்:

குடும்பத்தினர், நண்பர்கள், சக ஊழியர்கள் மத்தியில் ரமலானுக்கு மனதளவில் தயாராவது குறித்து அறிவுறுத்த வேண்டும். ரமலானின் சிறப்புகளைப் பற்றி அதிகமதிகம் விவாதிப்பதும், பேசுவதும் ரமலான் மீதுள்ள ஆர்வத்தை அதிகரிக்கும்.

குர்ஆன் ஓத ஆர்வமூட்டல்:

ரமலானுடைய மாதங்களில் குர்ஆனை மனனம் செய்வதற்கு தகுந்த பயிற்சிகளை மேற்கொள்ளுதல். ஏனென்றால் ரமலான் திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதமாகும். ரமலானில் திருக்குர்ஆனை ஓதுவதுடன், திருக்குர்ஆன் வசனங்களைக் குறித்த சிந்தனையில் ஈடுபடுவது, அதனை நடைமுறைப்படுத்துவது ஆகியனவும் முக்கியத்துவம் வாய்ந்தது ஆகும்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக இந்தக் குர்ஆன் பரிந்துரை செய்யக் கூடியதாகும். அது ஏற்கப்படக் கூடியதுமாகும். அதனைப் பின்பற்றினால் அவரை அது சுவனத்தில் சேர்க்கும். அதனை பின்பற்றாமல் விட்டு விட்டால் அல்லது நிராகரித்தால் அவன் நரகின் அடித்தளத்தில் தள்ளப்படுவான்.

(அறிவிப்பாளர்:இப்னு மஸ்வூத்(ரலி) –ஆதாரம்: முஸ்லிம்)

சிறுவர்களுக்கு பயிற்சி அளித்தல்:

பெற்றோர்கள் தம் பிள்ளைகளுக்கு நோன்பின் முக்கியத்துவத்தை பற்றி கூறுவதோடு மட்டுமல்லாமல் அவர்களை அதற்கு தகுந்தாற்போல் பயிற்றுவிக்க வேண்டும். ஸஹர் மற்றும் இஃப்தார் நேரங்களில் அவர்களையும் அமரச் செய்யலாம். நோன்பு நோற்றிருக்கும் போது அவர்களுக்கு முடியுமானவரை இருந்துவிட்டு இடையில் விடுவதற்கு அனுமதிக்கலாம். இதன்மூலம் நோன்பு நோற்பதற்கு படிப்படியாக தயாராவதற்கான வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கமுடியும். மேலும் இதன் மூலம் நோன்பை பற்றிய அறிவும், ஆற்றலும் அவர்களுக்கு கிடைக்கும்.

பெண்களை தயார்படுத்துதல்:

பெண்களுக்கு உணவுகள், சிற்றுண்டிகள் தயாரிக்கும் நேரத்தை சுருக்கி கொள்ள அறிவுரைகள் வழங்க வேண்டும். ரமலானின் முழுபலனையும் அடைவதற்கு முதன்மைப்படுத்த வேண்டும். ஏனென்றால்,வேலைப் பளுவின் காரணமாக பெரும்பாலும் ஃபர்லான அமல்களை கூட செய்ய முடியாமல் போய்விடும். மேலும் ஆண்கள் பெண்களுக்கு உதவினால் பெண்களின் வேலைப் பளுவை குறைக்கலாம்.

திக்ரின் பலனை அறிதல்:

“ஈமான் கொண்டவர்களே! அல்லாஹ்வை அதிகதிகமான திக்ரைக் கொண்டு திக்ரு(தியானம்) செய்யுங்கள். இன்னும் காலையிலும், மாலையிலும் அவனைத் துதிச் செய்யுங்கள்” (அல்-குர்ஆன் 33:41-42)
மேலே சொன்ன குர்ஆன் வசனம் திக்ரின் முக்கியத்துவத்தை  எடுத்துக் கூறுகிறது.

“இரண்டு வாக்கியங்கள் நாவுக்கு எளிதானதாகும், (நன்மை-தீமை நெருக்கப்படும்) தராசில் கனமானதகும். அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியதாகும்(அவை) ‘சுப்ஹானல்லாஹில் அலீம், சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி’.(பொருள்:கண்ணியமிக்க அல்லாஹ்வைத் துதிக்கிறேன். அவனைப் போற்றி புகழ்ந்து துதி செய்கிறேன்.)” (ஆதாரம்:ஸஹீஹ் புஹாரி).

இது போன்று திக்ருகளை இப்போதே மனனம் செய்து கொண்டால் நல்லது.

பெருநாள் ‘ஷாப்பிங்கை’ முன்கூட்டியே முடித்துக் கொள்ளுதல்:

பெருநாளின் போது புதிய ஆடைகளை அணிய வேண்டும் என்பதற்காக ‘ஷாப்பிங்’ என்ற பெயரில் வீணாக நேரங்களை கழிக்க கூடாது. அதனால் ரமலானின் முழுபலனையும் அடைவதில் சிக்கல் ஏற்படக் கூடும். எனவே ‘ஷாப்பிங்கை’ முன்கூட்டியே முடித்து கொண்டால் நல்லது.

வரக்கூடிய ரமலானில் அதிகமதிகம் நல்லமல்கள் செய்து இம்மையிலும், மறுமையிலும் வெற்றி பெற்றவர்களாக ஆக்க அல்லாஹ் கிருபை செய்வானாக ஆமீன்!

0 கருத்துரைகள்:

Post a Comment

Dua For Gaza